படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருந்த மும்முரத்தில் தான் காணத் தவறிய பிரபஞ்ச ரகசியங்களைக் கண்டறிய கடவுள் செய்த ஏற்பாடு,கவிதை. கவிதையின் கண்கள் வழியாக கவிஞனுக்கு நிகழும் தரிசனங்கள் அசாத்தியமானவை.அத்தகைய பதிவுகளுக்கேற்ப ஒவ்வோர் எழுத்து வகையும் ஒவ்வொரு வசதியைக் கொண்டிருந்தன.குறியீடுகளாலும் படிமங்களாலும் சங்க இலக்கியம் காட்டிய காட்சிகள் ஒருவகை.

கடவுள் என்னும் பெருந்தூணில் சாய்ந்து, தன்னுள் ஆழ்ந்து-ஆய்ந்து, சமய இலக்கியங்கள் கண்டவையும் காட்டுவித்தவையும் ஒருவகை. இந்த சங்கிலிக் கண்ணியில் நவீன கவிதை வாழ்க்கையின் பகிரங்க வெளிகளினூடாக ஊடுகதிர்போல் பரவி உணரப்படாத பிரதேசங்களையும் உணர்த்துகிறது.

அப்படி ஊடுருவும் உன்னத வரிகளுடன் வெளிவந்திருக்கிறது, யாழி எழுதிய “என் கைரேகை படிந்த கல்”என்னும் கவிதைத் தொகுப்பு.

“நானிடறி வீழ்ந்த இடம்
நாலாயிரம்-அதிலும்
நான்போட்ட முட்கள் பதியும்” என்றார் கண்ணதாசன்.

“என்னை
காயப்படுத்தும் நோக்கில்
விழுந்த கற்களை
அப்புறப்படுத்தும்போது
சிக்கியது
யார்மீதோ
வீசப்பட்ட
என் கைரேகை
படிந்த கல்”  என்கிறார் யாழி.

எல்லா மனிதருக்குள்ள்ளும் தொட்டால் மலரும் குணமும் தொட்டால் சுருங்கும் குணமும் இருக்கத்தான் செய்கிறது.மனித உறவுகளின் பாற்பட்ட விசித்திரங்களை யாழி இவ்விதம் சொல்கிறார்:

“அவனைப் பற்றிய
அபிப்பிராய பேதங்களை
அடுக்கத் தொடங்கினேன்
இவனிடம்
சற்றூம்
எதிர்பார்க்காத
படி
இவன்
அவனாகியிருந்தான்”

வாழ்க்கை தரும் ஒவ்வொரு வலியும் அந்த நேரத்துக்கான வலிதான்.ரணம்தான்.ஆனால் மிச்சமிருக்கும் வாழ்க்கைக்கான பக்குவம், ஒவ்வொரு வலியிலும் பரிசாகக் கிடைக்கிறது.இந்த நுட்பமான உண்மையை மிக அழகாக எழுதிச் செல்கிறார் யாழி.

“கவசமானது
காலம்
என்மீது
அறைந்த ஆணிகள்.
கேட்டுப்பார்
உன்
முனைமுறிந்த
அம்பை.”

பலரும் காலச்சக்கரம் மிக வேகமாய் உருண்டோடுவதாகத்தான் சொல்கிறார்கள். யாழி இதனை ஏற்கவில்லை. “நத்தையைப் போலவே காலச்சக்கரம்” என்கிறார். காலச்சக்கரத்தை ஒழுங்காய் இயங்காத கடிகாரமாகக் காட்டுவது கவிதை நிகழ்த்தும் அற்புதங்களில் ஒன்று.

அதனால்தான் யாழியின் பார்வையில் வாழ்க்கை என்பது புரியாத புதிராகவோ விடையில்லா விடுகதையாகவோ இல்லை.

“ஆழ்கிணற்றின்
நீர்ப்பரப்பில் விழுந்த
உடைந்த பானையின் சில்லாய்
பயணிக்கிறது
எனதிந்த வாழ்க்கை
அறியப்பட்ட
முடிவொன்றை
முன்வைத்து ”

என்கிற வரிகளில் ஒலிக்கிறது அவரவர் பயணம்.

யாழியின் எழுத்துமுறை மிகக் கூர்மையானது.கூடுதல் குறைச்சலில்லாமல் சொல்ல வந்ததை சரியாக சொல்லும் நடை அவருக்கு வாய்த்திருக்கிறது.அதனாலேயே அவருடைய வரிகள் குறிபார்த்து எய்யப்பட்ட கணைபோல் தைக்கின்றன.

சில நுட்பமான விஷயங்களை கவிதை சொன்னாலும் அதன் எடையைக் கூட்டுகிற காரியத்தை கவிதையின் தலைப்புகள் செய்வதுண்டு.சிலநேரம் தலைப்புகளே சுமையாகிப்போவதும் உண்டு.

“ஏச்சுகளைப்
புறந்தள்ளி
ஏந்திப் பெற்ற உணவினை
கொஞ்சம்
அள்ளி வைக்கிறாள்
அவள்.
வாலை ஆட்டி
பின்
உண்ணத் துவங்கியது
நாய்”

இந்தக் கவிதைக்கு யாழி தந்திருக்கும் தலைப்பு ஈகை.இது எடையைக் கூட்டுகிற தலைப்பு.

உணவை இரந்து பெற்ற அந்தப் பெண்ணின் ஈகை,நாய்க்கு மட்டும்
உணவிடவில்லை.பசித்த இரண்டு வயிறுகளுக்கு
உணவிட்ட புண்ணியத்தை திட்டிக் கொண்டே உணவு போட்டவர்களுக்கும் ஈந்த
வள்ளலாகவும் அவளே ஆகிறாள்.
உணவுக்கு நன்றி சொல்லும் எந்தப் பிரார்த்தனைகளுக்கும்
குறைந்துவிடவில்லை,அந்த நாயின் வாலாட்டல்.

பெரும் உயரங்களைக் கனவு கண்ட மனிதன் வாழ்க்கை சறுக்கி விடுகிற தருணங்களில்,விழுந்த பள்ளங்களில் இருந்தெழுந்த பிறகு,தன் கனவுகளைக் கைவிடுகிறான்.அடிப்படை உத்திரவாதங்களை மட்டுமே தேடிச் செல்கிறான்.இந்த நிதர்சனத்தின் அழகான உருவகம்,”பதவி”என்ற கவிதை.

இருக்கைக்கு
ஆசைப்பட்டு
ஆடிய ஆட்டத்தில்
பாம்புகளால்
விழுங்கப்பட்டவன்
செய்து கொள்ள
முற்படுகிறான்
ஏணிகளின் கால் முறித்து
தனக்கான
நாற்காலி ஒன்றை.

மிகவும் சுகமான வாசிப்பு அனுபவத்தை வழங்குபவை யாழியின் கவிதைகள்.”வலி” என்ற கவிதையை இத்தொகுப்பின் ஆகச்சிறந்த கவிதை என்று சொல்லலாம்:

“குளம்புகளின்
தேய்மானங்களுக்காக
அடிக்கப்பட்ட லாடம்
ஒன்றிலிருந்து
தெறித்து விழுந்தது
ஆணி
மாறுபட்ட
தாளலயங்கள்
உணர்த்தியது
உயிர்வலியை”

யாழியின் இயற்பெயர் கிரிதரன்  என்பதும்,திருஞானசம்பந்தர் முக்தியடைந்த திருத்தலமாகிய,நல்லூர் எனப்படும் ஆச்சாள்புரம் அவருடைய சொந்த ஊரென்பதும் கூடுதல் தகவல்கள்.
முனைவர்.போ. மணிவண்ணனின் தகிதா பதிப்பகம் இதனை வெளியிட்டிருக்கிறது.அனந்தபத்மநாபனின் அழகான முகப்பு வடிவமைப்புடன் நம்பிக்கைதரும் விதமாக வெளிவந்துள்ளது
யாழியின் “என் கைரேகை படிந்த கல்”.

வெளியீடு: தகிதா பதிப்பகம்,4/833,தீபம் பூங்கா,கே.வடமதுரை,
கோயம்புத்தூர் 641017 விலை :ரூ.50/

Comments

  1. நண்பர் யாழியின் கைரேகை படிந்த கவிதைகளுக்கு ஒரு மணிமகுடமாய் தங்கள் மதிப்புரை!! மகிழ்வாக்கினீர்கள் அய்யா இவ்வதிகாலைப் பொழுதை!! நன்றி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *