ஜாலங்காட்டி நடக்குது ஜன
நாயக சமையல்-பல
காய்கறிகள் கலந்துபோட்டு
கூட்டணி அவியல்
கேழ்வரகின் நெய்பிசைந்து
கசகச துகையல்
கடுகுபோல படபடக்கும்
கோபத்தின் பொரியல்

உப்புபோலத் தொட்டுக்கிட
ஜாதி ஒழிப்பு-அட
ஊறுகாயப் போல்பழசு
ஊழல் ஒழிப்பு
அப்பளம் போல் நொறுங்குதுங்க
மக்கள் நெனப்பு-கறி
வேப்பிலையப் போலொதுங்கும்
ஏழை பொழப்பு

ஆறிப்போன வாக்குறுதி
சோறுவைக்கலாம்
வேகாத பருப்பக்கூட
வேக வைக்கலாம்
ஊசிப்போன கொள்கையோட
கூட்டு வைக்கலாம்
ஊருக்கெல்லாம் இலையின்கீழ
நோட்டு வைக்கலாம்

பந்தியெல்லாம் பதைபதைக்க
குழம்ப ஊத்தறான்
பாவிமக்க குழம்பத்தானே
தேர்தல் வைக்கறான்
முந்தாநாள் வச்சரசம்
மொண்டு ஊத்தறான்
முணுமுணுத்தா எலயவிட்டு
மடியில் ஊத்துறான்

பாரத விலாஸிலிப்போ
பந்தி போடலாம்
பாயசத்தில் முந்திரிபோல்
பண்பைத் தேடலாம்
மானமில்லா மக்களெல்லாம்
பாயில் அமரலாம்
கோபம் ரோஷம் உள்ளவங்க’
கையக் கழுவலாம்

தின்ன எலையை கழுவிக் கழுவி
திரும்பப் போடுறான்-அவன்
தின்னு முடிச்ச மிச்சத்தைத்தான்
தேசம் என்கிறான்
இன்னயநாள் வரை நடந்த
பந்தி எத்தினி?-அட
இலையில் அமரும் இந்தியன்தான்
என்றும் பட்டினி!!

Comments

  1. அத்தனை உண்மைகளையும் அழகாய்ப் பரிமாறி விட்டீர்கள்!
    உண்மைகள் கசக்கும்!!
    இனிய இந்திய ஜனநாயகம்?

  2. மிரட்டி விட்டீர்கள் முத்தையா !!. "தின்னு முடிச்ச மிச்சத்தைத்தான்
    தேசம் என்கிறான்" …. ஆஹா !!!.. கூத்து பட்டறை கலைஞர் களிடம் இந்த கவிதை கிடைத்தால் விழிப்புணர்வை ஊட்டும்வீதி நாடகம் போட்டு விடுவார்கள்.
    எதிர்கட்சிகளிடம் கிடைத்தால் ஆளும் கட்சியின் கதி அவ்வளவுதான். எதற்கும் காப்பி ரைட் வாங்கி விடுங்கள்

  3. வாழ்க முத்தையா,
    அபிராமி அன்பரோடு புத்தாண்டுத் துவக்கம். காலையில் முதல் வேலையாக உங்கள் பந்தியில் உட்கார்ந்தேன்,இல்லீங்க கை மட்டும்தான் கழுவினேன்.
    அட்டகாசம்.
    உங்கள்
    சுப்பு

  4. புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்லும் வழி இதுவே.அதற்காக இந்த கருத்துரை.
    காலையில் பொதிகை நிகழ்ச்சி பார்த்தேன்
    அருமை!

  5. பாயசத்தில் முந்திரிபோல்
    பண்பைத் தேடலாம்
    –மிகவும் அருமை
    ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  6. "தின்ன எலையை கழுவிக் கழுவி
    திரும்பப் போடுறான்-அவன்
    தின்னு முடிச்ச மிச்சத்தைத்தான்
    தேசம் என்கிறான்'நல்லா சொன்னிங்க .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *