இசை,இலக்கியம்,இயக்கம்.இந்தத் திரிவேணி சங்கமத்தில் கால் நனைத்துசில சமயம் கடலிலிறங்கி,அலைகள் காலுக்குக் கீழ் பள்ளம் பறிப்பதைப்போல் உணர்ந்தால் கரைக்கு வந்து சுண்டல் சாப்பிட்டபடியே ஏக்கமாய்முக்கடலின்உப்புக்காற்றுக்கு முகங்காட்டி அமரும் விதமாகத்தான் கோவை மாவட்டத்தில் பெரும்பாலான இளைஞர்களின் வாழ்க்கை அமைந்திருந்தது.

ஆலைப்பணியாளர்கள் குடும்பத்திலிருந்து வந்த காரணத்தால் மார்க்சீயப் பார்வையும்,அரையிரவு-முழு இரவு பணிநேர மாற்றங்கள் தரும் போதிய கால அவகாசமும்,அதிலெழுந்த வாசிப்புப் பழக்கமும், தொலைக்காட்சி முழு ஆட்சி செய்யாத எண்பது-தொண்ணூறுகளில் இடையறாமல் கேட்டுக்கொண்டிருந்த திரையிசையும் சேர்ந்து ஒரு ரசிகனாய், ஒரு படைப்பாளனாய், சமூக விமர்சகனாய்-சில நேரங்களில் இந்த மூன்று அம்சங்களும் கொண்ட இளைஞர்களை செதுக்கிய காலம்,பொற்காலப் பட்டியலில் இடம்பெற வேண்டிய காலம்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடல்கள் மீது கொண்ட தீவிர ஈர்ப்பால் எஸ்பிபி குட்டி என்றே அழைக்கப்பட்ட குட்டி என்ற இளைஞனின் கதையை இளஞ்சேரல் விறுவிறுப்பாக சொல்லியுள்ள புத்தகம், எஸ்பிபி குட்டி.”யோவ்!பேசாதய்யா! கை வச்சுருவனய்யா!” என்று மிதவுரிமை கொண்ட நெருக்கமான நண்பர்கள் நடுவிலான உரையாடல் மூலம் கதை நகர்கிறது.சின்ன வயதில் தாய்மாமாவுடனோ சித்தியுடனோ ஒட்டிக் கொண்டு வளர்ந்தவர்கள்,தங்கள் மாமா அல்லது சித்தியைப் போலவே தங்கள் அம்மாவை அக்கா என்று அழைக்கப் பழகி விடுவார்கள்.

குட்டியும் அப்படித்தான்.மழை நாளில்,முன்னெச்சரிக்கையாக மின்சாரத்தை அப்பா நிறுத்திவைத்திருக்க,இசை கேட்கும் வெறியுடன், “மெயினப் போடச்சொல்லுக்கா!”என்று சத்தம் போடுகிற இளைஞன். சங்கராபரணம் கேசட் இழை அறுந்துபோன எரிச்சலில் வருகிற நண்பர்களிடம் எல்லாம் “வள்”ளென்று விழுந்தும்,அவர்களின் பழைய குற்றங்களுக்கெல்லாம் தண்டனைகளை நிறைவேற்றியும் தன் மூலக்கோபத்தின் காரணம் புலப்படாமல் காத்துக் கொள்கிற இளைஞன். அந்த ரகசியம் அம்பலப்படும்போது,”அந்தாளுக்கு காபி கொடுக்காதக்கா” என்று கடிந்து கொள்கிற உணர்ச்சிமயமான மனிதன்.சங்கராபரணம் இழை அறுந்து போனதை மைனர் செயின் பறிபோன அதிர்ச்சியுடன் சொல்கிற ரசிகன்.

பெற்றோரோடும் பொருந்தாமல்,நண்பர்கள் மத்தியில் ஒத்திசைவு இருந்தாலும் அவ்வப்போது திமிருகிற இத்தகைய மனிதர்களை எல்லா நேரங்களிலும் நண்பர்களே தாங்கிக் கொள்கிறார்கள். ஒத்த ரசனையை,தேடலை,சித்தாந்த விவாதங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.அந்த மனிதனின் அதிரடிக்குள் இருக்கும் நுட்பத்தை, பொறுமையின்மையில் இருக்கும் பொறுப்புணர்வை உணர்ந்து உடனிருக்கிறார்கள்.

அப்படியொரு நண்பனாய் உடனிருந்து இளஞ்சேரல் இதனை எழுதியிருக்கிறார்.இதில் பேசப்படுகிற எஸ்பிபி குட்டி,தான் எஸ்பிபி குரலில் பாடுவதாய் கற்பனை செய்து கொண்டு,உள்ளூர்த் திருவிழாவில் பாடி,தோழிகளிடம் “நல்லாவேயில்லை பையா”என்று சான்றிதழ் வாங்குபவர்.சுபமங்களா வாங்கி வராமல் சாக்கு சொல்லும்  நண்பனிடம்,”போய்யா! பொய் சொல்லாதய்யா”என்று பொருமுபவர்.வாழ்வின் வெளியில் பச்சை மண்ணாய் மணக்கும் இத்தகைய மனிதர்கள் நம்மிடையே இருக்கிறார்கள் என்பது,இந்த நூல் தரும் முதல் ஆறுதல்.

தன் மெல்லிய ரசனைகளின் பட்டியலில் ஒன்றாக,குட்டி புறாப்பந்தயங்களிலும் ஈடுபாடு வைத்திருந்தார் என்பதும்,புறாக்களுக்கு தண்ணீரும் தானியமும் உண்ண உண்ண ஊட்டுபவராக இருந்தார் என்பதும்,ஆலைவிட்டு வரும் பெண்களுக்காக சாலையோரங்களில் நிற்கும் விடலைப்பசங்களுக்காக பச்சாதாபம் கொண்டிருந்தார் என்பதும், எஸ்.பி.பி.பாடல்களை குட்டி பாடுவது எஸ்.பி.பி.பேசுவது போலிருக்கும்என்பதும் இளஞ்சேரல் தருகின்ற முக்கியக்குறிப்புகள்.இந்தக் குறிப்புகளைக் கொண்டு மனதுக்குள் குட்டியை வரைந்து பார்க்க முடிகிறது.
தமிழ்சினிமாவை தரக்குறைவாகப்பேசினால் குட்டிக்கு கோபம் வந்து விடுமாம்.ஐ.நா.சபை என்றழைக்கப்படும் டீக்கடையில்,விவாதத்தின் உச்சியில்,இனி குட்டியிடம் பேசினால் சண்டை உறுதி என்று ஒவ்வொருவராகக் கழன்று கொள்ள,தான் மட்டும் மீந்திருந்ததையும் குட்டியை சமாதானப்படுத்த ஏவிய அஸ்திரத்தையும் காட்சிப்படிமம் போல் வர்ணிக்கிறார் இளஞ்சேரல்.
“டிரம்கள் அதிர்ந்து,பின் வயலினில் ஒரு கீர்த்தனை வழிந்து நிற்பது போன்று அமைதியாக இருந்தேன்.காற்று வேகமாக வீசி புழுதியை நிரப்பியது போலிருந்தது சபை.குட்டியை முதலில் மலையேற்ற வேண்டும். “எந்தப்படமோ மொழியோ இருந்தாலும் உனக்கு எஸ்பிபி மட்டும் பாடிருந்தா ஏன் ஏத்துக்கறே..அதுக்கு மட்டும் பதில் சொல்லுய்யா. உனக்கு எஸ்பிபி மாதிரி அவங்களுக்கும் புடுச்ச விசயம் இருக்குமில்லையா” நான் மைதானத்தை ஒரு பாயாக சுருட்டி வீசுவேனென்று எதிர்பார்க்கவில்லை.இறுதி அங்குசம் எஸ்பிபிதான். எஸ்பிபியைத் தவிர வேறில்லை.

அதன்பிறகு குட்டி முதல்நாள் பஸில் கேட்ட எஸ்பிபி பாடல்கள் தந்த பரவசத்தையும்,கண்டக்டரிடம்போய் “ஏங்க ! காலங்காத்தாலே இப்படி ரம்மியமான பாட்டு பாடிக் கேட்டுட்டு எப்படீங்க வேலை வெட்டிக்குப் போறது”என்று முறையிட்டதையும் சொல்ல கலைந்த சபை கூடி விடுகிறது.

கோவை போன்ற கிராமிய நகரங்களுக்கே வாய்க்கக் கூடிய இந்த வாழ்க்கை பற்றிய நுட்பமான பதிவு, எஸ்பிபி குட்டி.இளஞ்சேரலின் இயல்பான எழுத்தோட்டம், சுகமான வாசிப்பனுபவத்தை வழங்குகிறது.

வெளியிடு:அகத்துறவு,மனை எண் 19,ஐந்தாவது தெரு,சிவசக்தி நகர்,
இருகூர் கோவை 641103.விலை ரூ.80/

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *