உருவாக்கத்திலும் உள்ளடக்கத்திலும் புதுமை இருந்தால் போதாது என்பார் கணேஷ் பாலிகா. உருவானதை முன்வைப்பதிலும் அதே புதுமை அவசியம் என்று நினைப்பார். படைப்பாக்க முன்வைப்பு  Presentation என்பது, விளம்பர நிறுவனங்களைப் பொறுத்தவரை ஒரு பெரிய வைபவம். எனக்குத் தெரிந்து க்ளையண்ட்டின் இடத்திற்குப் போவதை விட தங்கள் இடத்திற்கு அவர்களை அழைத்து புதுமையான ஏற்பாடுகள் செய்வதில் கணேஷ் பாலிகா கைதேர்ந்தவர்.

ஒருமுறை உணவகம் ஒன்றின் விளம்பரங்களுக்கான முன்வைப்பு சந்திப்பை அவர் மிகப் புதுமையாகத் திட்டமிட்டார். அலுவலக மொட்டை மாடியிலேயே உணவகச் சூழலை உருவமைத்தார். விளம்பர முன்வைப்பு என்றால் அதில் எத்தனையோ அம்சங்கள் உண்டு. எந்தெந்த ஊடகங்களுக்கு எவ்வளவு சதவிகிதம் ஒதுக்கலாம் என்பது தொடங்கி பல அம்சங்கள் காரணகாரியங்களுடன் விளக்கப்படும்.

மேசைகளில் க்ளையண்ட்டுகளை அமரவைத்து விளம்பர நிறுவனத்தின் பல்வேறு துறையினரும் தங்கள் துறைசார்ந்த முன்வைப்புகளைக் கொணர்வார்கள். அதன்பிறகு ஹோர்டிங் எனப்படும் பிரம்மாண்டமான விளம்பரப் பலகைகளுக்கான டிசைன் காட்ட வேண்டும். பொதுவாக வடிவமைக்கப்பட்ட டிசைன் பிரிந்த் அவுட் தான் காட்டுவார்கள். ஆனால் கணேஷ் பாலிகா,”அங்கே பாருங்கள்” என்று சாலையின் எதிர்புறத்தைக்  காட்ட,அங்கே திரை போட்டு மூடப்பட்டிருந்த பிரம்மாண்டமான ஹோர்டிங் திறந்து காட்டப்பட்டது.

பாய்ன்டர் விளம்பரங்களுடன் கூடிய “எனக்கென்ன கவலை”  விளம்பரத்தை உரிய அளவுகளில் பிரின்ட் அவுட் எடுத்து தினத்தந்தி நாளிதழில் 1-3-5-7 பக்கங்களில் ஒட்டி கடைசிப் பக்கத்தில் மைய விளம்பரத்தை ஒட்டி அந்த தேக்கு முதலீட்டு நிறுவன இயக்குநர்களுக்கு ஒரு பேப்பர் பையனைக் கொண்டு விநியோகித்தார்.

அந்த நிறுவன இயக்குநர்களில் ஒருவர், ஒரு யோசனை சொன்னார். “கடைசிப்பக்க விளம்பரத்தில்-நான்தான் கவலையில்லாத மனிதன் என்று அந்த விளம்பர மாடல் சொல்வதாகப் போட்டால் என்ன?” இப்படிச் சொன்னவர்,”கவலையில்லாத மனிதன்” படத்தைத் தயாரித்த கவியரசு கண்ணதாசனின் அண்ணன் மகன் ஏ.எல்.எஸ். கண்ணப்பன்!!

ஏ.எல்.எஸ்.கண்ணப்பன் தன்னை ஒரு நிர்வாகியாக அந்த நிறுவனத்தில் அறியச்செய்தாரே தவிர கலைப்பின்புலம் வெளிப்படும் விதமாக நடந்து கொண்டதில்லை.ஒரேயொரு தடவை, தன் மாமனாரின் நினைவு நாளுக்கு தான் வெளியிட்ட விளம்பரம் ஒன்றை சக இயக்குநர்களிடம் காண்பித்துக் கொண்டிருந்தார்.அந்தப்படத்தில் அவருடைய மாமனார், எதையோ எழுதிக்கொண்டிருப்பது போன்ற படம் வெளியாகியிருந்தது. அதன்கீழ் “வாழ்வின் கணக்குக்கு வரவெழுத வந்தவரே”என்று தொடங்கி சில வாசகங்களை எழுதியிருந்தார் ஏ.எல்.எஸ்.கண்ணப்பன்.

ஊடகங்கள் ஒத்துழைப்பில் பல புதுமைகளை விளம்பர நிறுவனங்கள் இன்றும் மேற்கொள்வதுண்டு. அத்தகைய முயற்சிகளில் ஒன்றுதான் அட்வர்டோரியல். ஒரு பத்திரிகையில் வருகிற படைப்புகள் மற்றும் செய்திகள் எடிடோரியல் துறையைச் சார்ந்தது. ஒரு விளம்பரத்தையே சிறுகதை போலவோ செய்தி போலவோ எழுதுவதுதான் அட்வர்டோரியல். இந்த விஷயம் தெரிவதற்கு சில வருடங்கள் முன்பே கல்லூரியில் இளங்கலை மாணவனாக இருந்த போது என் மூத்த சகோதரரின் நண்பர் திருமணத்திற்கு பத்திரிகைச்செய்தி போல் ஒரு வாழ்த்துமடல் எழுதிக் கொடுத்த அனுபவம் உண்டு. அவருக்கு புளியங்குடி கோயிலில் திருமணம்.

“கோவை கடத்தல் மன்னன் கைது! புளியங்குடி கோயிலில் பிடிபட்டார்!” என்று தலைப்பிட்டு மணப்பெண் உள்ளத்தை அவர் கடத்தியதாகவும் தி.பி.கோ(திருமணத்தில் பிடித்துப்போடும் கோஷ்டி) நடவடிக்கையில் கைதானார் எனவும் வாழ்த்துமடல்கள் அச்சிடப்பட்டு அந்தத்  திருமணத்தில் என் சகோதரர்களும் நண்பர்களும் விநியோகித்தனர்.  திருமணம் கோயிலில் நடந்ததால் வந்திருந்தவர்கள் கோயில் பிரசாதம் மடிக்க அந்தக் காகிதங்கள் பெரிதும் பயன்பட்டதாக அறிந்தேன்.

அதேபோல தேக்கு முதலீட்டுத் திட்டத்திற்கு ஒரு சிறுகதை எழுதினேன். “நடவுவேலை முடிந்து ஆட்கள் மேடேறத் தொடங்கிய போது பொழுது சாய்ந்திருந்தது” என்பது அதன் ஆரம்ப வரிகள். கிராமத்தில் இருக்கிற தந்தையிடம் தன் முதலீட்டுத் திட்டம் குறித்து யோசனை கேட்க மகன் வருவதாகவும், விவசாயியான அப்பா தேக்கு முதலீட்டுத் திட்டத்தில் பணம்போட ஊக்கம் கொடுப்பது போலவும் அந்தக் கதை எழுதப்பட்டிருக்கும். கதையின் கடைசி வரிக்குக் கீழ், “முற்றும்” போடும் இடத்தில் “விளம்பரம்” என்று போட்டால் போதும். இந்த விளம்பரத்தையும் இதழ்களில் வரும் சிறுகதை போலவே வடிவமைத்து, நியூஸ்பிரிண்ட் தாளில் பிரிண்ட் அவுட் எடுத்து, கல்கி இதழில் ஒட்டி வெளிவந்த சிறுகதையைக் காட்டுவது போலவே க்ளையண்ட்டிடம் காட்டினார் கணேஷ் பாலிகா.

அவருக்கு என்னிடம் பிடித்த இன்னொரு விஷயம்,அவரைப்போலவே நானும் போஜனப் பிரியன் என்பது. க்ளையண்ட்டைப் பார்க்கப் போகும் முன்பும் பார்த்த பின்பும் எந்தெந்த உணவகங்களில் சாப்பிடலாம் என்ற விவாதத்தையும்  முடித்துக்கொண்டுதான் கிளம்புவோம். முதல்தடவை உணவகத்திற்கு அழைத்துப் போனபோதே, “you know Muthaiah?i am one of those eternally hungry fellows”  என்றார் கணேஷ் பாலிகா.”me too sir” என்றேன்.

சென்னையில் சரவணபவன் போன்ற உணவகங்கள் சுய சேவைப்பிரிவைத் தொடங்கியிருந்த காலம் அது. நின்று கொண்டே சாப்பிடுவதும் காபி குடிப்பதும் எனக்குப் பிடிக்காது. ஒருதடவை அவருடன் போய்விட்டு வேண்டா வெறுப்பாக நின்றுகொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது சக அலுவலர்கள் எனக்கு அப்படி சாப்பிடப் பிடிக்காது என்பதை அவரிடம் சொல்லிவிட்டார்கள். “Why man”என்று கேட்ட அவரிடம் நான் சொன்ன பதில் ,”எங்க ஊரிலே எல்லாம் நின்னுகிட்டு ஒண்ணுக்குதான் போவாங்க சார்!”.காபியை அப்படியே வைத்துவிட்டு “கிளம்புங்கப்பா”என்றுவிட்டார் அவர்.

அதன்பிறகு அத்தகைய உணவகங்களுக்குப் போகும் போதெல்லாம், “Tell that guy where we are going..ok?” என்று மற்றவர்களிடம் சொல்வார் அவர். சிறந்த நிர்வாகிகளின் குணங்க்ளில் முக்கியமானது பொறுமையின்மை.Constructive restlessness என்று சொல்வார்கள்.அவருக்கு அந்தத் தன்மை உண்டு. பொறுத்தார் பூமியாள்வார் என்பது எப்படியோ தெரியாது.ஆனால் பொறுத்தார் வேலைவாங்க முடியாது. வேலையில் இன்று என்னிடமும் இருக்கும் அந்தப் பொறுமையின்மையும் அவருடைய தாக்கமாக இருக்கலாம்.

மாலை வேளையில் ஏதேனும் விளம்பரம் குறித்து விளக்கிவிட்டு, அரை மணிநேரத்தில் அழைத்து “what happened” என்பார்    “i will give tomorrow  Sir” என்றால் கோபம் வந்துவிடும்.”tomorrow i might die ya என்பார். சில நிமிடங்களிலேயே அதனை மறந்துவிட்டு கலகலப்பாகப் பேசத் தொடங்கிவிடுவார்.

அதேநேரம் சில தவறுகள் நடக்கும்போது, “நன்றாக வேலை  செய்பவர்களுக்கு சின்னச் சின்னத் தவறுகள் செய்ய உரிமை இருக்கிறது” என்பார். பிடிக்கவே பிடிக்காத வேலைகளை செய்ய
நேரும்போதெல்லாம் அவர் சொல்லும் வாசகத்தை நான் பலருக்கும் சொல்வதுண்டு. “When rape is inevitable…lie back and enjoy!!!!”

(தொடரும்)

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *