பயணம் என்பதுன் சங்கல்பம்
பாதையின் திருப்பம் அவள்விருப்பம்
முயற்சிகள் யாவுமுன் மனபிம்பம்
முடித்துக் கொடுப்பது அவள்விருப்பம்
துயரங்கள் உனது வினைபந்தம்
துடைப்பதும் எரிப்பதும் அவள்வழக்கம்
உயரங்கள் பள்ளங்கள் உன்கலக்கம்
உடனிரு என்பதே அவள்விளக்கம்
நாளும் நிமிஷமும் உன்கணக்கு
நொடிகளில் மாறிடும் அவள்கணக்கு
கோள்களின் அசைவினில் வாழ்வுனக்கு
கோயிலில் நுழைந்தால் விதிவிலக்கு
நீள்வதும் தொடர்வதும் உன்னிருட்டு
நீக்கிட வருமவள் திருவிளக்கு
தாள்களைத் தொடும்வரை உன்னிருப்பு
தொட்டதும் தொலைந்திடும் ஏழ்பிறப்பு
எவரெவர் வடிவினில் எதிர்ப்படுவாள்
என்னென்ன வார்த்தைகள் உரைத்திடுவாள்
எவருக்கும் இதுவரை தெரியாது
எதிர்வந்து நிற்பதும் புரியாது
தவறென்றும் சரியென்றும் தடமிருக்கும்
தர்மத்தின் சக்கரம் சுழன்றிருக்கும்
அவளிடம் சூட்சுமம் ஒளிந்திருக்கும்
அவளால் நம்திசை ஒளிர்ந்திருக்கும்
காற்று கலைக்கிற நந்தவனம்
கொட்டும் மலர்களின் சிலிர்ப்பினில்பார்
ஊற்றில் பெருகும் நீரலைகள்
உத்தமி பின்னே ஓடுதல்பார்
மாற்றுப் பொன்னெனும் கதிரொளியும்
மாதுமை அருளெனப் பரவுதல்பார்
ஏற்றிய சூரியச் சுடரொளித்தே
ஏறும் இருளினில் அவளெழில் பார்
ஒவ்வொரு கணமும் உடன்வருவாள்
உனக்கென சுவாசமும் கடன்தருவாள்
கவ்விடும் வலிகளில் கலந்திருப்பாள்
காயத்தின் பரப்பிலும் உலர்ந்திருப்பாள்
எவ்விதம் உனையவள் மறந்திடுவாள்
இவளா உன்னைக் கைவிடுவாள்
செவ்வியள் திருவுளம் வைத்துவிட்டால்
செகமே உனக்கெனத் தந்திடுவாள்
என்ன கேட்பதோ ? தெரியவில்லை
எதையவள் இதுவரை வழங்கவில்லை
சொன்ன வார்த்தையோ சொன்னதுதான்
சிறிதும் அவள்சொல் பிறழவில்லை
தன்னைப் பெரிதாய் நினைக்கையிலே
தென்படமாட்டாள் பார்வையிலே
தன்னை அவளிடம் தந்தபின்னே
தனியாய் நாமில்லை வாழ்வினிலே
இதமான, நம்பிக்கை தழைக்கச் செய்யும் வழிபாடு..
அருமையான சங்கல்பம் சார்.
இந்த மாத காட்டுப்பூவிலே தங்கள் கட்டுரை படித்தேன்.முட்டைக்கோஸ் பற்றி சொல்லிக் கொண்டு வந்ததில் சிறப்பான வரிகள்,
உன்னை விட அறிவாளியிடம் பணி புரிய நேர்ந்தால் அதிர்ஷ்டம். இல்லையெனில் துரதிர்ஷ்டம் என்று.எனக்கு மிகவும் பிடித்த இந்த வரிகளை தெரிவிக்க விரும்பினேன்.
எதை கடவுளிடம் கேட்டாலும் அது கோடீஸ்வரனிடம் கேட்கும் கீரைக் கட்டு போலத் தான்! எது கேட்டாலும் அது அவனைப் பொறுத்தவரை சிறிது தான்..
ஆண்டவனின் குமிழ் சிரிப்பிலே தெரியும்..’போயும்..போயும் இதைப் போய் கேட்கிறானே இந்த மானுடன்’ என்று!
அதற்காகத் தானே அவனிடம் ’ஸர்வ ஜனா சுகினோ பவந்து’ என்று சொல்லி விடுகிறேன், நான்!
கவிதை அருமை, ஸார்!
கடவுளையே கதி என்று இருந்தால் நம்மை அவர் கைவிட மாட்டார் என்பதை மிகவும் அருமையாகவும் நயமாகவும் சொல்லியிள்ளீர்கள்.சோதனைகள் வரும்போது இந்த சங்கல்பத்தை படித்தால் மன நிம்மதி கிடைக்கும். எல்லாவற்றையும் அவள் பார்த்துக்கொள்வாள் என்ற நினைப்பு கண்டிப்பாக வரும். மேலும் இந்த சோதனையை அவளே களைந்து நல்வழி காட்டுவாள் என்ற நம்பிக்கையும் வரும் மிகவும் நன்றி