(நீயே சொல் குருநாதா – கவிதை தொகுப்பிலிருந்து….)
பெளர்ணமி நிலவின் பால்வழிந்து
பாருங்கள் மலைமேல் அபிஷேகம்
வெள்ளித் தகடொன்று வேய்ந்ததுபோல்
வெள்ளியங்கிரியின் திருக்கோலம்
அடடா அழகிய இரவினிலே
ஆதி சிவனின் அரசாங்கம்
வேண்டும் வரங்கள் வழங்கிடவே
தியான லிங்கத்தின் திருக்கோலம்
தங்கம் இழைத்த கலசத்திலே
தகதகக்கிறது மேற்கூரை
லிங்கம் தோன்றிய பரவசத்தில்
சலசலக்கிறது நீரோடை
மெளனம் பேசும் வனங்களெல்லாம்
மூழ்கியிருக்குது தியானத்தில்
கவிதை பாடும் பறவைகளும்
கூட்டில் அடங்குது மோனத்தில்
பாறையில் கசிகிற நீர்த்துளிகள்
பக்தியில் இளகிடும் மனம்போலே
பாரமாய் உள்ள பழவினைகள்
கரையுது பாருங்கள் பனிபோலே
தியான லிங்கத்தின் தரிசனத்தில்
தினமும் புதிதாய்ப் பிறந்திடலாம்
ஞானம் என்கிற பேரொளியில்
நாமொரு சுடராய் எரிந்திடலாம்
(ஈஷா யோகா நிகழ்ச்சியில் அனுராதா ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீ ராம் பரசுராம் அவர்களால் இந்த பாடல் பாடப்பெற்றது…பாடலை கேட்க கீழே சொடுக்கவும்)
ராகம் : ரேவதி
பாடலைக் கேட்டால் உள்ளம் பால் நிலவொளியாய் உருகுகிறது. வார்த்தைகள் வெள்ளித் தகடுகளாய் வர்ணஜாலம் காட்டுகிறது.ஞானச் சுடரொளியில் திளைக்க வைப்பது தங்களின் பாடல்.