அடர்ந்த வனந்தனில் ஒற்றைத் தடம்விழும் அழகாய்-வினை
படர்ந்த மனந்தனில் பைரவி நீநடை பழகாய்
தொடர்ந்து வருந்துயர்க் கனலில் உருகிடும் மெழுகாய்-மனம்
இடரில் கரைகையில் திடம்தனைத் தந்திட வருவாய்
ஏற்றிய தீபத்தில் இளநகை செய்பவள் யாரோ-பலர்
சாற்றிய மறைகளில் சாரமென்றிருப்பவள் யாரோ
காற்றினில் வருகிற கீதத்தில் அவளது பேரோ-திரு
நீற்றினில் தகிக்கிற நெருப்பினில் அவளெழு வாளோ
காலத்தின் பேரிகை கைகளில் தாங்கினள் காளி-ஒரு
மூலத்தின் மூலத்தில் மூண்டெழும் சுடரெங்கள் தேவி
நீலத்தை கண்டத்தில் நிறுத்தினள் எங்களின் நீலி-இடும்
ஓலத்தைக் கேட்டதும் உடன்வருவாள் திரி சூலி
தாங்கிய கனவுகள் திடுமெனக் கலைகிற போது -மனம்
ஏங்கிய ஏக்கத்தில் எல்லாம் கனக்கிற போது
நீங்கிய உறுதியை நிர்மலை மறுபடி தருவாள்-மடி
தூங்கிடச் செய்து தூக்கத்தில் விழிப்பொன்று தருவாள்
ஆயிரம் பந்தங்கள் அலைபோல் வந்திங்கு போகும்-அதில்
காயங்கள் இன்பங்கள் காலத்தின் போக்கினில் ஏகும்
மாயங்கள் யாவையும் மாதவள் செய்கிற ஜாலம்-நம்
தாயவள் உறவே நிலையென்று காட்டிடும் கோலம்
கவளங்கள் உருட்டிக் கைகளில் அன்னை இடுவாள்-இதழ்ப்
பவளங்கள் மின்ன புன்னகையால் உயிர் தொடுவாள்
துவள்கிற பொழுதில் துணையென வந்தருள் புரிவாள்-நம்
கவலைகள் துடைக்கிற கணந்தனை அவளே அறிவாள்