நாவல் பழநிறப் பட்டுடுத்தி-மின்னும்
நகைகள் அளவாய் அணிந்தபடி
காவல் புரிந்திட வருபவள்போல்-அன்னை
காட்சி அடிக்கடி கொடுக்கின்றாள்
ஆவல் வளர்க்கும் காட்சியிதும்-என்
அரும்புப் பருவத்தில் தொடங்கியது
வேவு பார்க்க வந்தவள்போல் -எங்கள்
வீட்டு முற்றத்தை வலம்வருவாள்
பின்னங்கைகளில் தவழ்கிறதே-அது
பிரம்பா கரும்பா தெரியவில்லை
பின்னல் இடாத மழைக்கூந்தல் -அது
புரள்கிற அழகுக்கு நிகருமில்லை
கன்னங் கரியவள்- ஆறடிக்குக்
கொஞ்சம் குறைவாய் அவளுயரம்
மின்னல், மேகத்தின் நிறங்கொண்டு-வரும்
மாயத் தோற்றமாய்த் தெரிகின்றாள்
கட்டிய பின்னங் கைகளுடன் -அவள்
காலடி அளந்து வைக்கின்றாள்
முட்டிய கண்ணீர் மறைத்தாலும்-அந்த
மோகனத் திருவுரு மறைவதில்லை
விட்டுச் செல்வதும் இல்லையவள்
விழிகொண்டு நேராய்ப் பார்ப்பதில்லை
எட்டியும் எட்டா அமுதமென -எனை
எத்தனை வருடங்கள் ஏய்த்திருப்பாள்
பாரா முகமென்றும் தோன்றவில்லை-அவள்
பார்ப்பது போலவும் தெரியவில்லை
தீராச் சுமைகள் கனக்கையிலே-என்
தேவி கிளம்பி வருகின்றாள்
தாரா கணங்கள் பட்டினிலே-வந்து
தானாய் மின்னும் அழகினிலே
வாரா அமைதி வருகிறது-அவள்
வாஞ்சையை உள்மனம் உணர்கிறது!
கடவூர்க் காரி அவள்வருகை-அது
கனவா நனவா இரண்டுமில்லை
இடர்கள் எதிர்ப்படும் போதெல்லாம்-அவள்
இறங்கி வராமல் இருப்பதில்லை
தொடவும் தயங்கும் நெருக்கத்தில் -பின்
தொடவே முடியாத் தூரத்தில்
அடம்பிடிக்கின்றாள் இப்போதும்-ஆனால்
அவளிருக்கின்றாள் எப்போதும்!
எட்டியும் எட்டா அமுதமென -எனை
எத்தனை வருடங்கள் ஏய்த்திருப்பாள்//
இடர்கள் எதிர்ப்படும் போதெல்லாம்-அவள்இறங்கி வராமல் இருப்பதில்லைதொடவும் தயங்கும் நெருக்கத்தில் -பின்தொடவே முடியாத் தூரத்தில்அடம்பிடிக்கின்றாள் இப்போதும்-ஆனால்அவளிருக்கின்றாள் எப்போதும்!//
அடடா… தங்கள் நாவில் விளையாடும் கலைமகள்
எந்நாளும் சுடர்விடும் தனியெழில்!