“ராஜகிரீடம்
உன் சிரசில் பொருந்தாததற்கு
யார் என்ன செய்ய முடியும் நண்பா?
இந்த வாயிற்காப்போன் உடையில்
நீ எவ்வளவு மிடுக்கு தெரியுமா?”
என்றெழுதும் இசையின் கவிதைகளில் ஒலிக்கிறது நேர்மையான, நம்பகமான குரல்.
இசையின் மூன்றாவது கவிதைத் தொகுப்பின் தலைப்பு “சிவாஜி கணேசனின் முத்தங்கள்”. முத்தக்காட்சிகளிலும் சிவாஜியாகவே இருக்கும் சிவாஜி, முத்தத்துக்கான மறைப்புக் காட்சிக்குப் பின்னர் உதடு துடைக்கும் போதுகூட சிவாஜியாகத்தான் இருக்கிறார்.
ஆனால் மூன்று தொகுதிகளிலும் இசை இசையாகவே இருப்பதில் நாம் மகிழ்ச்சியும் ஆறுதலும் கொள்ள முடிகிறது.
விட்டுவிட முடியாதவற்றை விட முயல்வதும் விட்டு விட்டவற்றை திரும்பத் தருவிக்க முயல்வதும் ஒன்றுக்கொன்று சளைக்காத அபத்தங்கள். அத்தகைய அபத்தங்களின் ஆக்கிரமிப்பல்லவா வாழ்க்கை!!
“ஒரு பறவையை வழியனுப்புதல்”என்ற கவிதையில் இதைக்குறித்து நுட்பமாகப் பேசுகிறார் இசை.
“ஒருபறவை கூட்டை விட்டு
வெளியேறும் விருப்பத்தைத் தெரிவிக்கையில்
நீங்கள் அதற்குத் தகுந்த காலநிலையைத்
தெரிவு செய்து கொடுக்க வேண்டும்.
அதன் சிறகுகளை ஒருமுறை
சோதித்துக் கொள்வது நல்லது.
தேவையெனில் அதன்
வலிமையைக் கூட்டும் வழிகளையும் கற்பிக்கலாம்”
என்று சொல்லிக் கொண்டு வருகிற கவிதை இப்போது வேறு திசையில் வாளை சுழற்றத் தொடங்குகிறது.
“அடிக்கடி அதைத் தடவிக் கொடுப்பதை
கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் கண்களைத் தவிர்த்துவிட வேண்டும்”
என்றெல்லாம் ஆங்காங்கே செருகுகிற வாள் ஒரு கட்டத்தில் முகமாகவே மாறிவிட்ட முகமூடியின் தோலைக் கிழிக்கிறது..
“பிறகு,
வானத்தைப் பார்க்கும் சாக்கில்
அண்ணாந்து பார்க்காதிருக்க வேண்டும்”.
“தம்பி அந்தக் கல்லை எடு” என்கிற கவிதை தொந்தியைப் பற்றிப் பேசுகிறது.
“ஆடைக்குள் மறைத்து எடுத்துச் செல்லப்படும்
திருட்டுப் பொருள்போல்
அது என்னை உறுத்தும்போதெல்லாம்
நான் அனாதை இல்லங்களுக்கு
மதிய உணவு வழங்கினேன்”
என்கிறார் இசை.
ஒரு மனிதன் தன்னைத்தானே அசௌகரியமாய் உணரும் தருணம் ஒரு தவறை முதன்முதலாகச் செய்யும் தருணம்தான். மற்றவர்களுக்கு ஒன்றை நிரூபிப்பதும் தனக்குத் தானே ஒன்றை நிரூபித்துக் கொள்வதும் அடிப்படையில் வெவ்வேறு. தன்னைத் தனக்கே நிரூபிக்கும் கணம் எவ்வளவு அற்புதமானதோ அவ்வளவு அசௌகரியமானது, தன்னிடம் தானே பிடிபடும் தருணம்.
இந்த உணர்வை மீட்டும் இசையின் கவிதை ஒன்று. அந்தக் கவிதையின் ஒரே துரதிருஷ்டம் அதன் தலைப்பு. ஆகவே அந்தத் தலைப்பைத் தவிர்த்துவிட்டு அந்தக கவிதையைப் பார்க்கலாம்.
“அறவுணர்ச்சி
என் கசாப்புக்கடையில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும்
ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆடு.
அதை நிலத்தில் கிடத்தி அமுக்குகையில்
அது தெரிந்து கொண்டு
ஓலமாய் ஓலமிடும்…..”
என்று நீள்கிற கவிதையில்,குற்றவுணர்ச்சி ஓர் அமெச்சூர் அறங்கொல்லியை எப்படி வதைக்கிறது என்று அழகாகச் சொல்கிறார்.
“நான் முதன்முதலாக ஒரு ஆட்டை வெட்டியபோது
அது குதிரையைப் போலக் கனைத்தபடி
கால்களைத் தூக்கிக் கொண்டு
என் கனவில் வந்தது.
நான் தலையணைக்கடியில்
மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து
அதைக் கனவில் ஒரு போடு போட்டேன்.
மகா கொடூரனின் முன்னால்
நீதிகேட்டுப் போவது மடமையென்று
தன் இனத்திற்கு அறிவித்துவிட்டு
அது மடிந்து போனது.”
இந்தக் கவிதையின் நிறைவு வரியும் முக்கியமானது.
“ஒரு நீதிமான் முதல் ஆட்டை வெட்டும் போது
தயவுசெய்து நீங்கள் அவனைக்
காணாததுபோல் நடந்து கொள்ளுங்கள்”
மனித மனம் மிகவும் நுண்ணியது. ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்வை எவ்வளவு தூரம் இயந்திர கதியில் இயக்கினாலும் எங்கோ ஓரிடத்தில் அல்லது யாரேனும் ஒருவரிடம் தன் நுண்ணுணர்வுகள் வெளிப்படும் விதமாய் நடந்து கொள்கிறான். நுண்ணுணர்வுகள் போல் அற்புதமும் கிடையாது . அபத்தமும் கிடையாது. இந்த உணர்வை உறுதி செய்யும் விதமாய் இசையின் கவிதை ஒன்று.
“நாம் கதைகளில் மட்டுமே படித்திருக்கிற
பொன்நிறப் பறவையொன்று அவன் வீடு தேடி வந்தது.
கண்கூசி முகம் ஜொலித்தது அவனுக்கு.
100 முறை ஸ்பரிசித்துவிட்டால்
ஓடிவிடும் பறவை அது.
அவன் முதல் நாளே 74 முறை தடவிக் கொடுத்தான்.
பிறகு விவரம் அறிந்து பதறியவன்
இனி தொடவே மாட்டேன் என்று சொல்வதற்காக
நூறாவது முறை தொட்டான்.”
இந்த வாழ்க்கை உற்சாகமானதென்று சொல்வதற்கோ நம்புவதற்கோ பலருக்கும் பெரிதாகக் காரணங்கள் இல்லை. ஆனால் தன்னையே தூண்டி உற்சாகப்படுத்திக் கொண்டுதான் அவர்கள் பலரும் வாழ்கிறார்கள். தன்னைத்தானே உற்சாகப்படுத்திக் கொள்ள சில எளிய பிரயத்தனங்களே போதும் என்பதும் இசையின் வரிகள் உணர்த்தும் உண்மை.
“மேல்சட்டையைக் கால்சட்டைக்குள் செருகி
பெல்ட் வைத்துக் கட்டி
ஒரு நாளை புத்தம் புதிதாக்கினேன்.
முகத்தின் கருங்காட்டை வழித்தெடுத்ததில்
நெகுநெகுவென்று திறந்தது ஒருநாள்.
சப்பென்றிருக்கும் நாளின்மீது
கொஞ்சம் உப்பையும் மிளகாய்ப்பொடியையும்
தூவிவிடுவேன்.
இப்போது இது ஒரு சுவையான வெள்ளரிப்பிஞ்சு”.
இன்னாதம்ம இவ்வுலகம்
இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே”
என்கிறான் சங்கப் புலவன். இசையும் இன்னாத வாழ்வில் இனிமை காண்கிறார். இந்தக் கவிதையின் கடைசி வரிகளைப் பாருங்கள்.
“எம் கே டி எத்தனை நாட்களைத்தான்
வெளுத்துத் தருவார்..
வாயில் ஊறும் இது,
இந்த நாளில் இருபத்திமூன்றாவது கம்பர்கட்”
இந்தத் தொகுப்பிலேயே எனக்கு மிகவும் பிடித்த கவிதை, “விகடகவி மட்டையை உயர்த்துகிறார்”. வாழ்வின் நொம்பலங்களை சிரித்து மழுப்ப நேரும் அவலத்தை அழகாகச் சொல்லும் இந்தக் கவிதையின் சில பகுதிகள்:
“முதன்முதலாக நான் செருப்படி வாங்கியபோது
வானத்தில் போன பறவைகள் அப்படியே
நின்றுவிட்டன.
கடலில் எழும்பிய அலைகள் அந்தரத்தில்
ஸ்தம்பித்து விட்டன.
இரண்டாவது முறையாக செருப்படி வாங்கியபோது
பறவைகள் அதுபாட்டுக்குப் பறந்தன
அலைகள் அதுபாட்டுக்கு அடித்தன…
…………………………………………………………………
…………………………………………………………………
எல்லோரும் என்னை விகடகவி என்பதால் நான் எல்லாவற்றையும் விளையாட்டாக்கிக் காட்ட வேண்டியுள்ளது. எனவே 100 ஆவது செருப்படியின் போது இந்த உலகத்திற்கு முன்னால் நான் ஒரு மட்டையை உயர்த்திக் காட்டினேன்.
ஆனால் 101 ஆவது செருப்படி ரொம்பவும் வலுவாக நடு மொகரையில் விழுந்தது. நான் ஒரு விகடகவியாதலால் வாயை இளிப்பிற்குக் கொண்டுவர முயன்றேன். அதற்குள் கண்ணிரண்டும் கலங்கிவிட்டன.”
இந்தக் கடைசிவரியைப் படித்தபின் கவியும் அதிர்ச்சியும் மௌனமும் அடர்த்தியானது.ஒரு கவிதை தரக்கூடிய அதிகபட்ச அனுபவமும் அதுவே.
“சிவாஜி கணேசனின் முத்தங்கள்”
-இசை
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ.70