சூட்சுமமாய் அவள்சொல்லும் சேதி
பிச்சிப்பூ மணம்வீசும் பேரழகி சந்நிதியில்
பொன்னந்தி மாலையிலே நுழைந்தேன்
உச்சித் திலகம்திகழ் பச்சை மரகதத்தாள்
ஒளிவெள்ளப் புன்னகையில் கரைந்தேன்
துச்சம்நம் துயரங்கள் தூளாகும் சலனங்கள்
துணையாகும் திருவடியில் விழுந்தேன்
பிச்சைதரும் பெண்ணரசி பெருங்கருணை விருந்தினிலே
பேரமுதம் நான்பருகி எழுந்தேன்
தூபத்தால் கலயரவர் தொழுதிருந்த கடவூரில்
தூண்டாத தீபமவள் சிரிப்பு
தாபத்தால் அமுதீசன் தழுவவரும் கைவிலக்கும்
தளிர்நகையாள் திருமேனி சிலிர்ப்பு
கோபத்தால் காலனையே கடிந்திட்ட இடதுபதம்
கோமளையாள் கொண்டவொரு கொதிப்பு
ஆபத்தே சேராமல் அரவணைக்கும் அபிராமி
ஆணைதான் நம்வாழ்வின் நடப்பு
சரவரிசை தீபங்கள் சந்நிதியில் ஒளிர்ந்தாலும்
சுந்தரியாள் பேரழகின் சோதி
சுரவரிசை மாறாத சுகமான கீதங்கள்
சூட்சுமமாய் அவள்சொல்லும் சேதி
கரவரிசை நான்கினிலும் காக்கிறவள் கருணைதான்
காலத்தை நகர்த்துகிற நீதி
வரும்வரிசை கைகூப்பி வேண்டுவதை தருகின்ற
வஞ்சியவள் ஆதிக்கும் ஆதி
தைமாத நள்ளிருளில் தண்ணிலவைத் தந்தவள்தான்
தமிழ்கேட்டுத் தமிழ்கேட்டுத் தவித்தாள்
மைமேகப் பூங்குழலில் மின்னலெனப் பூச்சரங்கள்
மதுபொங்கத் தலையாட்டி ரசித்தாள்
தேவாரம் மணக்கின்ற திருக்கோவில் தனில்நின்று
தேனான அந்தாதி ருசித்தாள்
பாவாரம் சூட்டியவள் பூந்தாளில் வைப்பவர்க்கு
புகழ்வாய்ந்த பெருவாழ்வு கொடுப்பாள்