வாழ்க்கை வந்ததும் என்னவிதம்-அதில்
வருபவை என்ன ரகம்?
கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும்-பதில்
கொடுப்பது சமயபுரம்!
பார்க்கத் திகட்டாப் பேரழகில் -அன்னை
பிரியம் வளர்க்குமிடம்
தீர்க்க முடியா வினைகளெலாம்-அவள்
தீயினில் எரியுமிடம்
கன்னங் கரியவள் திருவிழிகள்- நமைக்
காத்திடும் காலமெலாம்
மின்னும் பார்வையில் மலர்ந்ததுதான்- அந்த
விசும்பின் நீலமெலாம்
இன்னும் எதுவரை போவதென்றே-மனம்
எண்ணிடும் பொழுதுகளில்
அன்னையின் திருக்கரம் வழிகாட்டும்-அங்கே
ஆனந்தம் காத்திருக்கும்
கோபத்தில் இருப்பதைப் போலிருக்கும்-அவள்
கோலத்தைக் காண்கையிலே
ஆபத்தும் சோர்வும் தொடுவதில்லை -அவள்
அருள்நம்மை ஆள்கையிலே
ரூபங்கள் ஆயிரம் அவளெடுப்பாள் வந்து
காக்கிற வேளையிலே
தீபத்தின் சுடர்போல் தமிழ்கொடுப்பாள்-அவள்
திருமுகம் காண்கையிலே
சித்துகள் ஆயிரம் செய்பவளாம்-அந்த
சமய புரத்தழகி
வித்தகம் காட்டும் வேதியளாம்-அந்த
வண்ணச் சிரிப்பழகி
தத்துவ வாதங்கள் கடந்தவளாம்-அன்புத்
தாயெங்கள் மகமாயி
பக்தி மணக்கும் குடிசையெல்லாம்-வந்து
பேர்சொல்லும் கருமாரி