பொன்னைத் தேடிப் பொருந்தும் ஒளிபோல்
உன்னைத் தேடி உன்குரு வருவார்
தன்னைத் தேடித் தனக்குள் சென்றபின்
இன்னும் தேட எதுவும் இல்லையே
 
நீண்ட கிளைகளின் நிழலுக் கடியில்
மூண்ட கனல்போல் முனிவர்கள் பிள்ளை
தூண்டா விளக்காய்த் தண்ணொளி பரப்ப
வேண்டா இருளும் விலகி ஓடுமே
 
ஓசையின் மௌனம் ஓங்கும் இடத்தினில்
காசியின் மௌனம் காணும் தலத்தினில்
பேசும் மௌனம் பொருள்கடந் தேகிட
ஈசனின் மௌனம் எளிதில்கை கூடுமே
 
காற்றின் மந்திரம் ககனம் உலுக்க
ஈற்றின் எல்லையில் இதயம் லயிக்க
ஊற்றெழும் கங்கை உரசும் கரையென
வீற்றிருந்தனளே வாலையும் எதிரே
 
குண்டலினிப் பெண் குடிகொள் கோயில்
மண்டலம் வந்தோர் மந்திரம் பெற்றோர்
பண்டொரு தொடர்பில் பக்தியில் வருவோர்
கண்டறி யாதன கண்டிருப்பாரே
 
கன்னல் துவர்க்கக் கனிவுறு மந்திரம்
மின்னல் தெறிக்க  மழைபோல் சொல்பவள்
தென்றல் திகைக்க திசைகளை அளப்பாள்
இன்னல் தவிர்க்க எண்ணுவோர் சூழ்வரே
 
புண்டரீகனுக்கும் புலப்படாச் செம்மையை
அண்டம் தின்றவன் அறிந்திடா உண்மையை
கண்டு தெளிந்த கயிலைமா முனிவரும்
வண்டென சூழ்ந்து வாழிடம் இதுவே
 
ஆசனம் இதுவென அரூபமாய்ச் சிலபேர்
சாசனம் பயின்றிட சொரூபமாய் சிலபேர்
பூசனை செய்திடும் புண்ணியர் சிலபேர்
ஆசையில் வந்தே ஆசைகள் விடுவரே
 
கண்டுங் காணாக் காரிகை ஒருத்தி
விண்டுணராத வாக்கியம் சொல்பவள்
தண்டுகொண்டிருந்த தன்மலை விட்டு
உண்டுறங்குபவள் போல் உலகு வந்தனளே
 
ஒருகுடம் மதுவே உலகரை ஈர்க்கும்
வெறுங்குடம் அசைந்தும் வேடிக்கை காட்டும்
பெருங்குடம் உடைக்கும் பூதல வாழ்வினில்
நிறைகுடம் ஒன்று நிர்மலை வடிவிலே
 
காவலர் படைபோல் கானுறு மந்திரம்
ஏவலர் படைபோல் எட்டுத் திசைகளும்
பூவென மலர்ந்த புண்ணிய்ள் தலத்தினில்
ஆவல் பொங்கிட அரணாய் நிற்குமே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *