அற்புதரின் நிரல்கள் அசாதாரணமானவை. கடிகாரத்தில் துள்ளிக்கொண்டிருக்கும் விநாடி முள்ளின் வீரியத்தைக் கணக்கிலிட்டு வடிவமைக்கப்பட்ட நிரல்கள் அவை.ஏனெனில் அற்புதரின் அகராதியைப்
பொறுத்தவரை எப்போதோ நிகழ்வதல்ல அற்புதம். ஒவ்வொரு கணமும் நிகழ்வதே அற்புதம். நிகழும் ஒவ்வொரு கணமுமே அற்புதம்தான் என்பதை உணர்வதும் உணர்விப்பதும் அவருடைய சங்கல்பங்களில் ஒன்று.

கடந்து கொண்டிருக்கும் கணத்தை வேடிக்கை பார்க்கும் நிர்ச்சலனமும் அந்தக் கணத்தை முழுமையாகப் பயன்படுத்தும் செயல்வேகமும் ஒருசேர
அமைந்ததே அற்புதரின் இயல்பு.ஒரு சராசரி மனிதனின் வாழ்வில் கூட அன்றாடம்  நிகழும் அற்புதங்களை கவனிக்கச்சொல்லி அவர் நினைவுபடுத்திக் கொண்டேயிருப்பார். காலத்தை ஒரு கடிகாரமாக உருவகித்தால் அதன் விநாடி முள்ளாய் வந்து தோன்றியவர் அற்புதர். “நேற்றிரவு உறங்கப் போனபலர் இன்று காலை இல்லை. நீங்கள் இன்று காலை விழித்தெழுந்திருக்கிறீர்கள். இது அற்புதமில்லையா?

கடந்து போன கணத்தில் எத்தனையோ பேர் சுவாசிப்பதை நிறுத்திக் கொண்டார்கள். நீங்கள் இன்னும் சுவாசிக்கிறீர்கள்.இது அற்புதமில்லையா?” என்று அடுக்கிக் கொண்டே போவார் அற்புதர்.

நிர்ச்சலனமும் நிறைசெயலும் ஒன்றுடன் ஒன்று சமமானவை என்பது அற்புதரின் அனுபவம். ஓடுதளத்தில் குறைந்த வேகத்தில் ஓடத்தொடங்கும் விமானம் உலுக்கியெடுக்கிறது. ஆனால் உயரே,மிக உயரே கடும் வேகத்தில் பறக்கும்போது விமானம் நின்றுவிட்டதுபோன்ற உணர்வுதான்
உள்ளே இருப்பவர்களுக்குத் தோன்றும். வாழ்க்கையும் விமானம் போலத்தான். உங்கள் வாழ்க்கைஉச்சத்தில் நிகழ்கிறபோதே உள்ளே ஓர் அமைதியை உணர்வீர்களென்றால் உங்கள் செயலும் நீங்களும்
ஒன்றியதாய் அர்த்தம்” என்பார் அற்புதர்.

ஓர் ஓவியனை உணர்வது ஓவியத்தின் வழியாகத்தான். ஒரு கவிஞனை உணர்வதும் அவன் கவிதையின் வழியாகத்தான்.படைப்பவனை உணர்வதும் படைத்தலின் வழியாகத்தான். தொடர்ந்து நிகழும் படைப்பே
இறைவன் இருப்பதற்கு மட்டுமல்ல, அவன் இடையறாமல் இயங்குவதற்கும் ஆதாரமாய் இருக்கிறது”என்றார் அற்புதர்.

அவருடைய கைகளில் அழகிய வலம்புரிச் சங்கு ஒன்று இருந்தது. பணிய வந்த பக்தர்களின் செவிகளில் அந்தச் சங்கை வைத்தார் அற்புதர். “ஓ”வென்று கேட்டதோர் ஓசை.”இது என்ன ஓசைதெரியுமா?” என்றார்
அற்புதர். தான் வாழ்ந்த சமுத்திரத்தின் பேரோசையை சங்கு ஒலிப்பதிவு செய்திருக்கிறது”என்றார் ஒரு பக்தர். “பாரத யுத்தத்தில் கண்ணன் இதழ்களில் வைத்து ஊதிய ஓசையின் எதிரொலி இது” என்றார் இன்னொருவர்.

அற்புதர் சிரித்தார். “உங்கள் உடம்புக்குள் ஓடும் குருதியின் விசையே இந்த ஓசை. பூமி சுற்றுவதும்சுழலுவதும் பூமியில் இருப்பவர்களுக்குத் தெரிவதில்லை. அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பதுபோல் உங்கள் உடம்பில் குருதி எவ்வளவு வேகமாய் ஓடுகிறது என்பதே உங்களுக்குத்
தெரிவதில்லை.வாழ்க்கையைப் பலரும் ஆண்டை வைத்துக் கணக்கிடுகிறார்கள். சிலரோ மாதங்களின் அடிப்படையில் செயல்களைத் திட்டமிடுகிறார்கள். சிலரோ வாரங்களின் அடிப்படையில் திட்டமிட்டு வாழத் தலைப்படுகிறார்கள், உண்மையில் வாழ்க்கை விநாடிகளால் ஆனது.விநாடிகளின் வீரியம் புரிந்தவர்களே அற்புதங்களை நிகழ்த்துவார்கள் என்றார் அற்புதர்.

அவர் பேசி முடித்த இடைவெளியில் பக்கத்து வீட்டுச் சிறுவன் பாரதியின் பாடலை வாய்விட்டு வாசித் துமனனம் செய்து கொண்டிருப்பது கேட்டது….

“இடையின்றி அணுக்களெல்லாம் சுழலுமென இயல்நூலார்

இசைத்தல் கேட்டோம்

இடையின்றிக் கதிர்களெல்லாம் சுழலுமென வானூலார்

இயம்புகின்றார்

இடையின்றித் தொழில்புரிதல் உலகினிடைப் பொருட்கெல்லாம்

இயற்கையாயின்

இடையின்றிக் கலைமகளே நினதருளில் எனதுள்ளம்

இயங்கொணாதோ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *