அந்த மலையடிவாரத்தில் அற்புதர் உலவிக்கொண்டிருந்த போது சற்று
முன்னதாய் இருவர் சென்று கொண்டிருப்பதைக் கண்டார்.
ஜனன தேவதையும் மரண தேவதையும்தான் அவர்கள் என்பதைக் கண்டுணர
அவருக்கு அதிகநேரம் ஆகவில்லை.இருவர் கைகளிலும் சிறு சிறு மூட்டைகள்.அந்த மூட்டைகளை அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று அற்புதர் ஓரளவு யூகித்திருந்தார். தன் காலடி ஓசை கேட்காவண்ணம்
மிக மெதுவாய் அவர்களைப் பின்தொடர்ந்தார் அற்புதர்.
அடர்ந்த வனப்பகுதிக்கு வந்ததும் இரண்டு தேவதைகளும் நின்றன. “நம்முடைய இடம் வந்துவிட்டது” என்றவண்ணம் இரண்டும் அங்கிருந்த
பாறை ஒன்றில் அமர்ந்தன.முழு வடிவமில்லாத தேவதைகள் இரண்டும்
அமர்ந்திருந்த கோலம், பாறைமீதில் இரண்டு வெண்முகில்கள் படிந்ததைப்
போல் இருந்தது.
அவர்கள் கைகளிலிருந்த சிறு மூட்டைகளை உற்றுப் பார்த்தார் அற்புதர்.
ஒவ்வொன்றிலும் ஓலை நறுக்குகள் கட்டப்பட்டிருந்தன. சில பெயர்களும்
தேதிகளும் குறிப்பிடப்பட்டிருந்தன. ஒவ்வொரு மூட்டைக்குள்ளும் ஏதோ
ஒன்று நெளிந்து கொண்டிருந்ததைக் கண்ட அற்புதரின் இதழ்களில் முறுவல்
மலர்ந்தது.
தன்வசமிருந்த மூட்டைகளை ஜனன தேவதையிடம் ஒப்படைத்தது மரணதேவதை.”இவை உடலை விட்டு இன்று வெளியேற்றப்பட்ட உயிர்கள்.
இவை மீண்டும் எங்கே பிறக்க வேண்டும்,எப்போது பிறக்க வேண்டும் என்னும்
விபரங்கள் ஓலை நறுக்குகளில் உள்ளன.சரி!உன் மூட்டைகளைக் கொடு!!”
தன்வசமிருந்த மூட்டைகளை மரணதேவதையிடம் ஒப்படைத்த ஜனன தேவதையின் கண்களில் குழப்பம் தெரிந்தது.”என்ன ! வழக்கமான குழப்பமா?”
சலிப்புடன் கேட்டது மரணதேவதை. “ஆமாம்!நான் தந்த மூட்டைகள், உலகில்
தற்போது பிறந்த உயிர்கள் எங்கே எப்போது இறக்க வேண்டும் என்ற விபரங்களுடன் உள்ளன. ஆனால் கடைசியில் கணக்குப் பார்த்தால் குறித்த
தேதியில் இறக்கும் உயிர்கள் மிகக் குறைவுதான். பல உயிர்கள் விதிக்கப்பட்ட
தேதிக்கு முன்னரோ பின்னரோ இறந்து விடுகின்றன!காலதேவனிடம் கணக்கு
கொடுக்கையில் நாம் பதட்டத்துடன் இந்தத் தகவலைச் சொன்னால் அவன்
அதிர்ச்சியடைவதில்லை !அதிர்ந்து சிரிக்கிறான்!”கவலையோடு சொன்னது ஜனன தேவதை.
“உன் நிலைமையாவது பரவாயில்லை. என்னிடம் நீ ஒப்படைக்கும் மூட்டைகளின் ஓலை நறுக்குகளைத் தனியாக எடுத்து வைக்கிறேன்.
உரிய காலத்தில் தேடினால் ஒருசில மூட்டைகள் கிடைப்பதேயில்லை.
இதுகுறித்துக் காலதேவனிடம் முறையிட்டாலும் சிரிப்புதான் பதிலாகக்
கிடைக்கிறது.” மரணதேவதையும் திகைப்புடன் சொன்னது. காலடி ஓசை
கேட்டு இருவரும் நிமிர்ந்தனர். தங்களருகே வந்த அற்புதரைக் கண்டு
விரைவாய் எழுந்து வணங்கிப் பணிந்தனர்.
அவர்களை பதிலுக்கு வணங்கி, அமரச் செய்து தானுமொரு பாறையில்
அமர்ந்து கொண்ட அற்புதர் சொன்னார்.”தேவதைகளே! ஒன்றைத் தெரிந்து
கொள்ளுங்கள்.நீங்கள் பரிமாறிக் கொள்ளும் மூட்டைகளில் இருப்பவை
உயிர்கள் மட்டுமல்ல. அந்த உயிர்களின் வினைகளும்தான். அந்த
வினைகளின் வழியேதான் உயிர்களின் பிறப்பும் இறப்பும் நிகழ்கிறது.
ஆனால் ஒன்று. உடலை விட்டு உயிர் வெளியேறுவதற்கும் விதிக்கும்
சம்பந்தமில்லை. நோயாலோ விபத்தாலோ விடத்தாலோ உயிர்கள்
முன்னரே வெளியேறலாம்.அல்லது ஆசீர்வாத பலத்தால் விதிக்கப்பட்ட
தேதியைத் தாண்டியும் வாழலாம். எனவே பிறப்பு-இறப்பு-விதி ஆகிய
முக்கோணங்களுக்கு நடுவே கடைசிநேர மாற்றங்கள் சாத்தியம்.
காணாமல் போகிற மூட்டைகள் பற்றி நீங்கள் கவலை கொண்டு
பதறுகிறீர்கள்.காலதேவனோ ‘கலகல”வென சிரிக்கிறான்.ஏனென்றால்
மறுபிறவிக்குக் காரணமான வினைக்குப்பைகளை திருவருளோ
குருவருளோ சிலசமயங்களில் எரித்து உயிர்கள் உய்வு பெற
வழிசெய்கிறது. விதியின் கட்டளைப்படி மூட்டைகளைப் பரிமாறிக்
கொள்ளும் உங்கள் கணக்குகளுக்குள் அந்த அருள்விளையாட்டு
அகப்படாது.பேரருளின் சங்கல்பம் விதியின் கண்களுக்குப் புலப்படாது.
காலதேவனின் சிரிப்புக்குக் காரணம் அதுவே” என்றார் அற்புதர்.
சொல்லிக் கொண்டே அந்த மூட்டைகளை உற்று நோக்கினார் அற்புதர்.
அவர் விழிபட்டு சில மூட்டைகள் சட்டென எரிந்தன. அற்புதர் சொன்னார்,
“என்னைச் சரணடைந்த உயிர்கள் இவை. அவற்றின் பிறவாநிலைக்குப்
பொறுப்பேற்பவன் நான்.உங்கள் இருவரையும் நான் பின்தொடர்ந்து
வந்ததில் கூட ஒரு பொருளிருக்கிறது. என்னிடம் முழுமையாய்
சரணடைந்தவர்களின் பிறப்பிலும் இறப்பிலும் உடனிருக்கிறேன்
என்பதன் குறியீடே அது”என்றார் அற்புதர்.
ஜனன தேவதையும் மரணதேவதையும் அதிசயத்தில் உறைந்தன. ஆனால்
அற்புதரோ , இத்தகைய அற்புதங்கள் தன் எல்லையில் அன்றாடம் நிகழும்
சம்பவங்கள் என்ரு சொல்லாமல் சொல்வதுபோல் திரும்பி நடந்தார்.