பீடமேறினாள்

படிப்படியாய் பதம்பதிய பீடமேறினாள்-வினை
பொடிப்பொடியாய் நொறுங்கும்படி பார்வைவீசினாள்
இடிமழையை முன்னனுப்பி வரவுசாற்றினாள்-பலர்
வடித்தளிக்கும் கவிதைகளில் வண்ணம்தீட்டினாள்

வீடுதோறும் ஏற்றிவைக்கும் விளக்கில் வருகிறாள்-விழி
மூடிநாமும் திறக்கும்முன்னே கிழக்கில் வருகிறாள்
ஏடுதோறும் பத்தர் சித்தர் எழுத்தில் வருகிறாள்-மனம்
வாடும்போது புன்னகையால் வெளிச்சமிடுகிறாள்

இல்லையவள் என்பவர்க்கு எதிரில் தோன்றுவாள்-அட
எல்லையில்லா பக்திவைத்தால் ஒளிந்து கொள்ளுவாள்
மெல்லமெல்ல இதழ்திறந்து மலர்ந்துகொள்ளுவாள்-அவள்
முல்லைஅல்லி மல்லிகையில் மணந்து பொங்குவாள்

வைத்தகொலு பொம்மைகள்தான் கோள்கள் ஒன்பதும்-அவள்
தைத்துத்தந்த பட்டுச்சேலை அந்த வானகம்
வைத்தியச்சி வினைகள்வெட்ட இந்த வையகம்-அவள்
மெய்யைப்போல சொன்ன பொய்தான் வாழ்க்கை என்பதும்

ஒன்பதுநாள் பூசையேற்க ஒசிந்துநிற்கிறாள்-அவள்
கன்னல்போன்ற கவிதைகளில் கசிந்துநிற்கிறாள்
பொன்னைவென்ற பாதம்மின்னப் பொலிந்துநிற்கிறாள்
அன்னையவள் கருணைபொங்கக் கனிந்துநிற்கிறாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *