ஏதேதோ செய்கின்றவள்
காலத்தின் முதுகேறிக் கடிவாளம் தேடினால்
கைக்கேதும் சிக்கவில்லை
ஓலம்நான் இடும்வண்ணம் ஓடிய குதிரையின்
உன்மத்தம் புரியவில்லை
தூலத்தின் உள்ளிலே தேங்கிய கள்ளிலே
தலைகால் புரியவில்லை
நீலத்தின் நீலமாய் நீலிநின்றாள் அந்த
நொடிதொட்டு நானுமில்லை
வந்தவள் யாரென்ற விபரமும் உணருமுன்
வாவென்று ஆட்கொண்டவள்
நொந்ததை நிமிர்ந்ததை நிகழ்ந்ததை எல்லாமே
நாடகம் தானென்றவள்
அந்தத்தின் ஆதியாய் அத்தனின் பாதியாய்
அழகுக்கும் அழகானவள்
எந்தவிதம் என்னையும் ஏற்றனள் என்பதை
இன்றுவரை சொல்லாதவள்
ஆசையின் பிடியிலே ஆடிய வதையிலே
ஆனந்தம் தரவந்தவள்
தூசுடைக் கண்ணிலே மீசையின் மண்ணிலே
துகிலாகப் படர்கின்றவள்
ஏசுவார் வாழ்த்தவும் பேசுவார் போற்றவும்
ஏதேதோ செய்கின்றவள்
காசியை காஞ்சியை கூடல்மா நகரினை
கடவூரை ஆள்கின்றவள்
தாமாக வந்திங்கு தரிசனம் தருகின்ற
தாய்மனம் என்னென்பதோ
நாமாக முயன்றாலும் நடக்காத அற்புதம்
நடத்துதல் என்னென்பதோ
ஊமையின் நாவிலே ஓங்காரம் ஆகிடும்
உத்தமி ஆட்கொள்கிறாள்
மாமயில் வடிவாக மயிலைக்கு வந்தவள்
மனைதோறும் சுடராகிறாள்