“மிருகக்காட்சி சாலையில் இருந்து ஒரு யானை தப்பித்து விட்டது. அங்கே ஒரு பள்ளிக்கூடம் வேறு. இப்போது யானையைப் பிடிக்க என்ன செய்வீர்கள்?” அந்த இளைஞர்கள் மத்தியில் இந்தக் கேள்வியை விசியபோது யானைகள் பற்றிய எத்தனையோ எண்ணங்கள் எனக்குள் ஓடத் தொடங்கின.
வனப்பகுதிகளை இழந்த யானைகள் நகர்ப்புறப் பகுதிகளில் நுழையத் தொடங்கி நீண்ட காலம் ஆகிவிட்டது. அநேகமாய் அடுத்த தலைமுறைக்குள் இது பழகி விடலாம். “உன் வேலையை நீபார் என் வேலையை நான் பார்க்கிறேன்” என்று யானைக்கும் மனிதனுக்கும் “சக-வாசம்” தொடங்கிவிடலாம்.
வீட்டைச் சுற்றி வளையவரும் பூனைகளைப்போல் யானைகளை மனிதன் ஆக்கிவைத்தாலும் அதிசயமில்லை. சர்க்கஸில் யானைகளை சைக்கிள் ஓட்ட வைத்தவர்கள்தானே நாம்!”பிளிறல் மறந்த சதை எந்திரமாய் வரிசையில் வந்து வணக்கம் சொல்லும்” சர்க்கஸ் யானைகள் பற்றி முன்பொரு கவிதையில் எழுதியிருந்தேன்.
யானைகளை யானைகளாகவே பார்த்தவர்கள் சங்கப் புலவர்கள். அதன்பிறகு பக்திக் கவிதைகள் கடவுளுக்கும் யானைக்கும் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தின. ஓங்காரமாகிய “ஓம்” எனும் எழுத்தின் வடிவாய் ஆனைமுகக் கடவுள் இருக்கும் தாத்பர்யத்தை நியாயப்படுத்த சில புனைவுகள் உருவாயின.
கயிலாயத்திலுள்ள சித்திர மண்டபத்தில் ஓங்காரத்தைப் பார்க்கையில் சிவபெருமான் ஆண்யானை வடிவெடுக்க, உமையம்மை பெண்யானை வடிவெடுத்து கணபதி தோன்ற அருளினர் என்ற புராணக்கதையை திருஞானசம்பந்தர் அழகான தேவாரப் பாடலாய் ஆக்கினார்.
“பிடியதன் உரு உமைகொள மிகு கரி அது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடி கணபதி வர அருளினன் – மிகுகொடை
வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே”
என்று வலிவலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானைப் பற்றி எழுதினார் அவர்.
பின்னர் கடவுளர் நடைக்கும் காவிய நாயகர் நடைக்கும் யானையின் நடை உவமையாயிற்று.சீதையும் இராமனும் வனத்தில் இருந்தபோது, அன்னத்தின் நடையைக் கண்டு இராமன் சீதையைப் பார்த்து குறிப்பாய் புன்னகைக்க, அங்கே அவர்களைக் கடந்து சென்ற யானைக்கன்றைக் கண்டு சீதை முறுவல் பூத்தாளாம்.
“ஓதிமம் ஒதுங்கக் கண்ட உத்தமன் உழையள் ஆகும்
சீதைதன் நடையை நோக்கிச்சிறியது ஓர் முறுவல் செய்தான்;
மாது அவள்தானும், ஆண்டுவந்து நீர் உண்டு மீளும்
போதகம் நடப்ப நோக்கிப்புதியது ஓர் முறுவல் பூத்தாள்”
என்கிறான் கம்பன்.
இராமாவதாரத்தில் நடந்த அதே நடையை கிருஷ்ணாவதாரத்திலும் நடந்தார் திருமால்.
“வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான்”
என்பது ஆண்டாளின் கல்யாணக் கனவு..
இதற்கு உரையெழுத வந்த உரைகாரர்கள் அமர்க்களம் செய்தார்கள். என்னதான் கனவாகவே இருக்கட்டும்.கல்யாண மண்டபத்துக்குள் மாப்பிள்ளை ஆயிரம் யானைகளுடன் நுழைவதாய் சொன்னால் அது சாத்தியமா? கனவு மெய்ப்பட வேண்டுமல்லவா?
கண்ணனின் நடையே யானை நடப்பது போலத்தான் இருக்குமாம். ‘மதயானை போன்றதோர் விதமான நடை” என்று ஆழ்வார்கள் பாடியிருக்கிறார்கள். யானை போல் நடக்கும் கண்ணன் தனியாக வந்ததில்லையாம். அதையும் ஆழ்வார்கள்தான் சொல்கிறார்கள். தனக்கு நிகரான நண்பர்கள் ஆயிரம் பேர் சூழ வருவானாம்.
“தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர்நடையிட்டு வருவான்”
என்கிறார்கள் ஆழ்வார்கள்.அப்படியானால் அந்த ஆயிரம் தோழர்களின் நடையும் யானைநடை என்று தெரிகிறதல்லவா!!
யானைபோல் நடக்கக் கூடிய கண்ணன் தனக்கு நிகரான ஆயிரம் நண்பர்களுடன் வருவதைத்தான் “வாரணமாயிரம் சூழ வலம் செய்து” என்று ஆண்டாள் பாடினாள் என்கிறார்கள் உரைகாரர்கள்.
இதிகாச காலம் தொடங்கி எம் ஜிஆர் காலம் வரை கதாநாயகர்கள் நடைக்கு உவமை சொல்ல யானை பயன்பட்டது.
“தேக்கு மரம் உடலைத்தந்தது
சின்னயானை நடையைத் தந்தது”
என்றார் கவியரசு கண்ணதாசன். இதற்கு முன்னர் சைவ வைணவ சண்டைக்கும் யானையை வம்புக்கிழுத்தான் காளமேகம். திருமால் இந்த அண்டத்தையே விழுங்கியபோது சிவன் எங்கிருந்தான் என்றொரு வைணவர் சைவரைச் சீண்ட, அதற்கு சைவரோ, யானை ஒரு பெரிய கவளத்தை விழுங்கும்போது பாகன் அதன்மேல் அமர்ந்திருப்பதுபோல் சிவன் இருந்தான் என்றாராம்.காளமேகம் பாடுகிறார்:
“அருந்தினான் அண்டமெல்லாம் அன்றுமால்-ஈசன்
இருந்தயிடம் ஏதென் றியம்ப- பொருந்திப்
பெருங்கவளம் யானைகொளப் பாகனதன் மீதே
இருந்தபடி ஈசனிருந் தான்”
இப்படி காலங்காலமாய் இலக்கியங்களில் இழுபடும் யானைகளின் நலன்கருதி எழுதப்படும் கவிதைகளும் ஏராளம். உடனடியாக நினைவுக்கு வருவது,
“உங்கள் ஆசைக்காகத் தந்தங்களையும்
அதிர்ஷ்டத்திற்காக ரோமங்களையும்
இழந்து நிற்கும்
யானைக்கொருநாள் மதம்பிடிக்கும்”
என்ற இளையபாரதியின் கவிதைகள்தான்.
நேற்று சக்தி எக்ஸலன்ஸ் அகாதமியில் இருபது இளைஞர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன்.சூழலைக் கையாளும் திறனைப் பரிசோதிக்க ஒரு கேள்வி விவாதிக்கப்பட்டது.
“ஒரு பள்ளி வளாகம் அருகே மிருகக் காட்சி சாலை இருந்து, அதிலிருந்த யானை தப்பித்து வெளியே வந்து விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். யானையைப் பிடிக்க என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்?”
வெவ்வேறு பதில்களுக்கு நடுவே ஒர் இளைஞர் எழுந்து சொன்னார். “பள்ளி இருக்கிற சாலையில் “நோ-என்ட்ரி” போர்டு வைத்து விடலாம் சார்
.யானை திரும்பிப் போய்விடும்” !!!!