நெய்வேலி மின் நிலையத்தின் உயர் அலுவலர்கள் மத்தியில் “நமது வீட்டின் முகவரி” என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினேன். சிறந்த பயிற்சியாளராக அறியப்படுபவரும் அந்நிறுவனத்தின் பொது மேலாளர்களில் ஒருவருமான திரு. ஒய்.எம்.எஸ். பிள்ளை, கேள்வி நேரத்தில் ஒரு கேள்வி எழுப்பினார். “சுய மதிப்பீட்டுக்கும் சுய பிம்பத்துக்கும் என்ன வித்தியாசம்?”
சுயபிம்பம் என்பதை கண்ணாடியில் தெரியும் பிம்பத்துக்கு ஒப்பிடலாம்.நாம் எவ்வாறு தோற்றமளிக்க விரும்புகிறோம் என்பதற்கேற்ப நம் தோற்றத்தில் நாம் செய்யும் சீர்திருத்தங்களை அந்த பிம்பம் பிரதிபலிக்கிறது. ஆனால் அந்த பிம்பம்தான் நாமென்று நாம் நினைப்பதில்லை. நம் உண்மையான தன்மை என்ன, நம் பலம் பலவீனங்கள் என்ன என்றெல்லாம் நமக்குத்தான் தெரியும். அந்த உண்மையான உள்ளீடு நம் பிம்பத்தில் பிரதிபலிக்காது.
எனக்கு உடனே நினைவுக்கு வந்தவர் ரஜினிகாந்த் தான். சூப்பர் ஸ்டார் என்பது அவர் விரும்பியும் உழைத்தும் கட்டமைத்த சுயபிம்பம். ஒரு நடிகராக அவர் வளர்ந்து வந்த காலங்களில் வாழ்வில் குறுக்கிட்ட பதட்டப் பொழுதுகளைத் தாண்டியும் புயல்நிமிஷங்களைக் கடந்தும் தன்னை உயர்த்தியது எது என்னும் கேள்விக்கு பதில்தேடிய ரஜினிகாந்த் தன்னைத்தானே மதிப்பிட்டுக் கொண்டதில் ஆன்மீகம் என்னும் புள்ளி அவருக்குப் புலப்பட்டது.
தனக்கான சக்தியைத் தருவது தன்னினும் மேலான சக்தி என்பதைக் கண்டுணர்ந்த போதுதான் ஆன்மீகத் தேடல் மிக்க மனிதராய் அவர் விரும்பினார். பிரபஞ்சம் என்னும் பெருஞ்சக்திவெள்ளத்தில் தன்னுடைய இடம் எதுவென்று தேடத் தெரிந்ததில்அவர் கண்டுணர்ந்த அம்சத்துக்கும் சூப்பர் ஸ்டார் பிம்பத்துக்கும் சம்பந்தமில்லை.
விவரம் தெரிந்த குழந்தைகளுக்கும் கூட சூப்பர் ஸ்டாராக அவரைத் தெரியலாம் . ஆனால் துளிர்விட்ட தாவரத்தோடும், பத்து விநாடிகள் முன்னர் பிறந்த இளங்கன்றோடும் தனக்கான தேன்துளியைத் தேடியலையும் வண்ணத்துப் பூச்சியோடும் தன்னை ஒரு சக உயிராக உணர்ந்து பார்க்கும் உந்துதலில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் இல்லை. ரஜினிகாந்த் என்ற பெயரும் இல்லை.
இந்த சுயமதிப்பீட்டுக்கும் சூப்பர்ஸ்டார் என்ற பிம்பத்துக்கும் நடுவிலான இடைவெளி வளர வளரத்தான் ஆன்மீகத்தின் ஆழங்களை அந்த உயிர் உணர்ந்துகொண்டே போகும். தானற்றுப் போதலின் ருசி தெரியாத உயிர்களுக்கு தன்னை அறிதலுக்கான வழி தெரியாது.
ஆன்மீக ருசி கண்ட பிறகு ரஜினிகாந்த் ஏற்று நடித்த பல பாத்திரங்கள், தான் ஒரு செல்வந்தன் என்று தெரியாத ஏழையாகத் தொடங்கி, தன் உடமைகளைக் கைப்பற்றி,தன் உரிமைகளை நிலைநாட்டி எல்லாவற்றிலும் ஜெயித்த பிறகு எதுவும் வேண்டாமென்று காசித்துண்டோடு கிளம்புவதாகத்தான் இருக்கும்.
பெரும்பாலும் மனித வாழ்க்கை இப்படித்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வாழ்க்கை என்னும் திரைப்படத்தில் இடைவேளை வரையில், தான்யார், தன்னிடம் இருக்கும் திறமைகள் என்ன, அவற்றை வெளிப்ப்டுத்த விடாத தீய சக்திகள் எவை என்ற தேடலில் போகிறது.
இடைவேளைக்குப் பிறகு நம் சக்தியை வெளிப்படுத்துவதிலும், செல்வத்தை ஈட்டுவதிலும், செல்வாக்கை நிலைநாட்டுவதிலும் பெரும்பகுதி போகிறது. இதுவரைகூட தன்னைப்பற்றிய சுயபிம்பத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டமும்,அந்தப் போராட்டத்திற்கான வெற்றியும்தான் கிடைக்கிறது.
மிகச்சிலருக்குத்தான் அதன்பிறகு தன்னை மதிப்பிட்டு தன்னை ஆரவாரங்களிலிருந்து விலக்கி வைத்து தான் ஒரு பெரும்சக்தியின் சின்னஞ்சிறு பகுதி என்னும் உணர்வோடு சாதனைகள் என்று கருதப்படும் வெற்றிகளுக்கும் பிறகும் கரைந்து போகிற பக்குவம் மலர்கிறது.
சூப்பர்ஸ்டார் என்ற உயரத்தை எட்டி அந்த உயரத்திலேயே நின்று கொண்டிருக்கும் நிலையிலும் இந்த அடுத்த கட்ட நகர்தல்தான் ரஜினிகாந்த்தின் முக்கியமான அம்சம் என்பதென் கருத்து.இந்தச் சூழலில்தான், ஒருகாலத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்கிற கேள்வியும் அதற்கான விவாதங்களும் ஒருகாலத்தில் சூடுபறந்து இன்றோ ஆறி அவலாகி விட்டது.
இதற்குக் காரணம்கூட தானற்றுப்போதலில் அவருக்கிருக்கும் தவிப்புக்கும் ஒர் அரசியல் தலைவராக உருவாவதற்குத் தேவையான குணங்களுக்கும் நடுவிலான வேற்றுமைகள்தான்.இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் நிற்கும் அவர் அரசியலுக்கு வருவாரா என்கிற கேள்வி நமக்கில்லை.ஆனால் அவர் வசமுள்ள ரசிகர்களை தன்னைப் போலவே ஆன்மீகத்தின் ருசி கண்டவர்களாய் ஆக்கலாம். அவருடைய மன்ற உறுப்பினர்களுக்கு யோகப் பயிற்சியும் தியானப் பயிற்சியும் அவசியம் என்பதை வலியுறுத்துவதில் வலியுறுத்துவதில் இதைத் தொடங்கலாம்.
ரஜினிகாந்த் ஓர் ஆன்மீக வழிகாட்டியாய் வெளிப்பட வேண்டுமென்பதல்ல நம் எதிர்பார்ப்பு. அவரை சார்ந்திருப்போரை ஆன்மீகம் நோக்கி நெறிப்படுத்தலாம். தரமிக்க தனிமனிதர்களை உருவாக்குவதன் மூலம் சமூக மாற்றத்திற்கு அவர் வித்திடலாம். அவர் கால்வைக்க நினைக்கும் அல்லது தவிர்க்கும் அரசியலை விட ஆயிரம் மடங்கு அக்கபூர்வமான பலன்களை இந்த முயற்சி ஏற்படுத்தக்கூடும்
“யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்பதே ஆன்மீகத்தின் அடிப்படை குணாதிசயம். தான் பெற்ற ஆன்மீக ஆனந்தத்தை நோக்கிப் பயணம் செய்ய ரஜினிகாந்த் நினைத்தால் வழிகாட்டலாம். சூப்பர் ஸ்டார் என்ற பிம்பத்தை அவர் தாண்டிவிட்டார். அடுத்து…..?