திரு.சுகிசிவம் அவர்கள் சேலத்தில் ஒருமுறை தொடர் சொற்பொழிவு நிகழ்த்தினார்.தொடர்ந்து வருகை தந்த பல்லாயிரம் பேர்களில் ஒருவர் தயங்கித் தயங்கி வந்து திரு.சுகிசிவத்தின் கால் அளவைக் குறித்துக் கொண்டு போனார்.நிறைவுநாளன்று கைகளில் ஒருஜோடி
செருப்புடன் வந்தார்.”அய்யா! நான் செருப்பு தைப்பவன்.
உங்கள் பேச்சு எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. எனவே
நான் உங்களுக்காக இந்த ஜோடி செருப்பைக் கொண்டு
வந்திருக்கிறேன்.” என்றார். அவர் நிலையறிந்து பணம்
கொடுக்கலாம்.கொடுத்தால் மனம் புண்படுவார்.அவர் அன்புக்கு
விலைவைத்ததுபோல் ஆகிவிடும். திரு.சுகிசிவம் சிலவிநாடிகள்
யோசித்தார். தான் எழுதிய புத்தகங்களில்.கையொப்பமிட்டார்.அடுத்து சொன்ன வார்த்தைகள்தான்முக்கியம்.
“நண்பரே! உங்கள் படைப்பை எனக்குப் பரிசளித்தீர்கள்.நான் என்
படைப்புகளை உங்களுக்குப் பரிசளிக்கிறேன்”என்றார். செருப்போடு வந்தவருக்கோ தன் தலையில் மகுடம் சூட்டிய மகிழ்ச்சி.
இன்னொரு சம்பவம். கவிஞர் வைரமுத்துவிடம் செய்தியாளர்
ஒருவர் மிக அற்புதமான கேள்வி ஒன்றைக் கேட்டார்.”நீங்கள்
சென்னை வந்தீர்கள்.பச்சையப்பன் கல்லூரியில் தங்கப்பதக்கம்
பெற்றீர்கள்.ஆறுமுறை ஜனாதிபதி விருது பெற்றீர்கள்.சரி..ஒருவேளை எழுதப்படிக்கத் தெரியாதவராய் உங்கள் கிராமத்திலேயே இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?”
கவிஞர் சொன்னார், “எழுதப்படிக்கத் தெரியாமல் கைநாட்டுக்காரனாய் கிராமத்தில் இருந்திருந்தால் அதிகபட்சமாக ஒரு டீக்கடை வைத்திருப்பேன்.ஆனால் ஒன்று… இந்தியாவின் தலைசிறந்த டீக்கடை வைரமுத்து டீக்கடை என்று ஜனாதிபதியிடம் ஆறுமுறை தேசியவிருது வாங்கியிருப்பேன்”.
எந்தத் தொழில் செய்தாலும் மனமுவந்து செய்தால் முழுமையாக ஈடுபட்டுச் செய்தால் அதில் முத்திரை பதிக்கலாம் முன்னணியில் இருக்கலாம் என்பதைத்தான் இந்த இரு சிலீர் சம்பவங்களும் உணர்த்துகின்றன