மலேசியா வாசுதேவனின் ஆகிருதிக்குப் பொருந்தாத அப்பாவிக் குரலில், சிவக்குமாரின் வெள்ளந்தி முகத்திற்கு மிகவும் பொருந்தும் பாவத்தில் கங்கை அமரனின் வரிகளில் விளைந்த அற்புதமான பாடல் ‘வெத்தல வெத்தல வெத்தலயோ”.

கிராமத்து மனிதர்களையே சார்ந்து வாழ்ந்து அவர்களுக்குப் பயன்கருதாமல் கைங்கர்யம் செய்யும் எளிய மனிதர்களின் பிரதிநிதியான வண்டிச்சோல செம்பட்டையின் குரல் அந்தப் பாடலில் துல்லியமாய் ஒலிக்கும்.

ஆதுரமாய் அழைத்து வேலைவாங்கும் யாரோ ஒரு பாட்டி,கல்யாணம் முடித்ததும்””மொத ஆசீர்வாதத்துக்கு” அழைக்கும்யாரோ ஒரு தாத்தா,அதட்டி வேலைவாங்கும்போதே அக்கறையை உணர்த்திவிடும் பயில்வான், இவர்களிடம் வேற்றுமுகம் தெரியாத குழந்தைபோல் தாவும் வண்டிச்சோலை செம்பட்டை.எல்லோராலும் ஏவப்படும் செம்பட்டையால் “சோதாப்பயலே” என்று ஏவப்படுவதற்கென்றே அவனுக்குத் துணையாய் ஓர் ஓடும்பிள்ளை.

இவர்களைக்கொண்டு தீட்டப்படும் கிராமத்து உறவுகள்,கிராமப் பொருளாதாரம் பரஸ்பர நேசம் இத்தனையும் இந்தப்பாடலை உயிரோவியமாய் மின்னச் செய்கின்றன.

வெற்றிலை விற்கப்போகும் செம்பட்டையை முதலில் வழிமறிக்கும் பாட்டி வாங்கிவரச் சொல்கிற விஷயங்களை சிட்டையில் குறிக்கும் வழக்கம் செம்பட்டைக்கு இல்லை. அநேகமாக எழுதப் படிக்கத் தெரிந்திருக்காது. ஆனால்  பாட்டி கேட்டதை தனக்குத்தானே சொல்லிப் பார்த்துக் கொள்ளும்போது, மனதில் மறுபடியும் பதியலாம்.கூடவரும் சோதாப்பயலுக்கும் அது நினைவில் நிற்கலாம்.

“கேட்டாங்க கேட்டாங்க என்னென்ன கேட்டாங்க
பாட்டியும் ஏலக்கா வேணும்னு கேட்டாங்க
பத்தமடைப்பாயி வேணும்னு கேட்டாங்க
சின்னக் கருப்பட்டி மூக்குப்பொடி டப்பி
வாங்கி வரும்படி கேட்டாங்க”

என்று சொல்லிப் பார்த்துக் கொள்ளும் செம்பட்டை விரசாக நடைபோடும்படி சோதாப்பயலை ஏவும்போதே ஒரு தாத்தா எதிர்ப்படுகிறார்.

தனக்குக் கல்யாணமென்று அந்தத் தாத்தாவிடம் சொல்லிக் கொள்ளும் செம்பட்டையின் குரலில் நாணமும் உரிமையும் கலந்து ததும்புகிறது.”ஒன் பொண்டாட்டிக்கு மொதோ ராத்திரியில
மொதோ ஆசீர்வாதம் நாந்தான் பண்ணுவேன்.சம்மதமா”என்று தாத்தா கேட்டதும் செம்பட்டைக்கு உற்சாகம் பிய்த்துக் கொள்கிறது.

“சொன்னாங்க ச்சொன்னாங்க தாத்தாவும் ச்சொன்னாங்க!!
பொண்டாட்டி கட்டிக்க வேணும்னு ச்சொன்னாங்க
முன்னாடி கூட்டீட்டு வாடான்னு ச்சொன்னாங்க
கல்யாணம் செஞ்சா அன்னைக்கு ராத்திரி
ஆசி வாங்கணுமின்னாங்க..
நெசமாக வருவேங்க..
வயசான மனுஷங்க
வாயார மனசார வாழ்த்தணும் நீங்க
வெத்தல வெத்தல வெத்தலயோ
கொழுந்து வெத்தலயோ”
என்று உற்சாகமாக நடைபோடும் செம்பட்டையை அதட்டிக் கூப்பிடுகிறது பயில்வானின் குரல்.”ஏய்!இங்கவாடா !ஏழு தோலாவுக்கு பாதாவும் பிஸ்தாவும் மூணு தோலாவுக்கு முந்திரியும் வாடா”. அதிகாரக் குரலுக்கு அச்சத்துடன் பதில் கேள்வி கேட்கிறான் செம்பட்டை.””என்னங்க! வழக்கத்தைவிட அதிகமா கேட்கறீங்க.முரட்டு பயில்வானின் மெல்லிய மனசு பதிலில் வெளிப்படுகிறது

“”எனக்கில்லடா !ஒனக்கு”.

“இப்படி வாடான்னு பயில்வானும் சொன்னாங்க!
ஏழு தோலாவுக்கு பாதாவும் பிஸ்தாவும்
மூணு தோலாவுக்கு முந்திரி திராட்சையும்
வாங்கீட்டு வாடாதின்னுட்டுப் போடா
வந்திடும் ஒனக்கு வீரமுன்னாங்க..
நாந்திங்கப்போறேன்
அப்புறம்பாரு..நம்மூரு காளைய முட்டிப்பாக்கப் போறேன்””ப
யில்வான் முந்திரி பாதம் பிஸ்தா தின்னச் சொன்னது காளையைமுட்டுவதற்காக அல்ல என்று கூடத் தெரியாத செம்பட்டையைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.

இப்படி உரிமையும் அன்பும் கொண்ட கிராமத்து மனிதர்கள் நடுவே வெற்றிலை விற்பவனாய் வாழ்ந்து பார்க்கத் தோன்றுகிறது. வெற்றிலை விற்பவனாய்க்கூட இல்லை, அவனிடம் ஏச்சு வாங்கும் சோதாப்பிள்ளையாய் இருந்தால் கூட நல்லதுதான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *