அற்புதரின் பிரதேசத்திற்குள் புதிதாய் வந்தார் அந்த மனிதர். அவர் புதியவர் என்ற எண்ணம் அவருக்கு மட்டுமே இருந்தது. அற்புதரின் அங்க அடையாளங்களை அவர் ஏற்கெனவே விசாரித்தறிந்திருந்தார். அற்புதர் ஆடைகள் அணியும் பாங்கு பற்றி, அவர் கேள்விப்பட்டிருந்தார்.யாரையும் கேட்காமலே அற்புதரை அடையாளம் கண்டுவிட வேண்டுமென்று அவர் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார்.
முதிய தோற்றமுள்ள எளிய மனிதர் ஒருவர் அந்த மனிதருக்கு சற்று முன்பாக சென்று கொண்டிருந்தார். சுயதேடலின் பாதையில் செல்வதாலேயே சுடர்பொங்கும் வடிவுடைய இளைஞர்கள் சிலர் அந்த முதியவர் திரும்பிய வளைவில் எதிரே வந்து கொண்டிருந்தனர்.அவர்களுக்குப் பணிவாய் வணக்கம் செலுத்தினார்அந்த முதியவர். அவரை சற்றுத் தாமதமாகவே கண்டு கொண்டஇளைஞர்கள் அதே பணிவுடன் முதியவரையும் புதியவரையும் வணங்கினர். உள்ளார்ந்த பணிவுடன் வணக்கங்களை எதிர்கொண்டு பழகியிராத புதியவர் பதறினார்.
இங்கிருப்பவர்கள் எவ்வளவு தூரம் அற்புதரால் கட்டுப்படுத்தப் பட்டிருந்தால் இப்படி வளைந்து பணிந்து வணங்குவார்கள் என்று நினைத்துக் கொண்டே நடந்தார்.ஆனால் அந்த இளைஞர்களின் வணக்கத்தைப் பெற்றபோது உள்ளே ஏதோ அசைந்ததை உணர்ந்தார்.
முன்னே போய்க்கொண்டிருந்த முதியவர் முன்னே செந்தீயாய் உடையணிந்த சின்னஞ்சிறுவர்கள் வெள்ளைச் சிரிப்புடன் வந்துகொண்டிருந்தனர். நிலம் பார்த்து நடந்து கொண்டிருந்த குழந்தைகளின் நிழல்பார்த்த நொடியிலேயே அந்த முதியவர் பணிந்து வணங்கியதைப் பார்த்தார். புதியவர் மனதில் பச்சாதாபம் பொங்கியது. “குழந்தைகளையும் இப்படி குனிந்து வணங்குகிறார் என்றால் இவர்தான் இங்கிருக்கும் கடைநிலை ஊழியர்களினும் கடைநிலையில் இருக்க வேண்டும்”என்றுஅனுமானித்துக் கொண்ட அவரால் குழந்தைகள் அதே பணிவுடன் பதிலுக்கு முதியவரையும் தன்னையும் வணங்கியதைக்கூட கவனிக்க முடியவில்லை.
அந்த முதியவர் உணவுக்கூடத்தினுள் நுழையக்கண்டு புதியவரும் நுழைந்தார். அங்கே வரிசையாகத் தட்டுகள் வைக்கப்பட்டிருக்கக் கண்டு தானும் ஒரு தட்டின் முன் அமர்ந்தார். யாரோ ஓர் இளைஞர் அந்த முதியவரின் தட்டருகே தண்ணீர்க்குவளையொன்றை வைத்ததும் குனிந்து கும்பிட்டதைக் கண்டு அனுதாபத்தின் உச்சத்திற்கே போனார் புதியவர்.
ஒருகுவளை தண்ணீருக்கே இப்படி குனிந்து கும்பிடுகிறார் என்றால் அந்த முதியவருக்கு அதைக்கூடத் தராமல் எத்தனைநாள் வாடவைத்தார்களோ என்று நினைத்துக் கொண்ட புதியவர்,
“இந்தக் கொடுங்கோலரின் எல்லைக்குள் இனியும் இருக்கலாகாது” என்று நினைத்து எழுந்து நடந்தார்.
அந்த முதியவர்தான் அற்புதரென்றும் அந்தப் பணிவு அற்புதரின் முதல் போதனையென்றும் அறிந்திருந்தால் அவர் அப்படி எழுந்து சென்றிருக்க மாட்டார்.ஆயினும் அவர் திரும்பி வருவார் என்னும் பொருள்பட அவர் சென்ற திசைநோக்கிப் பணிவுடன் வணங்கினார் அற்புதர்