ஆண்டின் மிக இருண்ட இரவை அற்புதரின் முன்னிலையில் அணுஅணுவாய் உள்வாங்க பல இலட்சம்பேர் வந்துகொண்டிருந்தனர்.
மிகநீண்ட மலைப்பாம்பாய் வந்து கொண்டிருந்த அந்த வரிசையைப்
பார்த்த அற்புதர் புன்னகைத்த வண்ணம் வணங்கினார்.அவருக்கு
அன்றிரவு முழுவதும் தன் பங்குதாரருடன் ஒரு பணியிருந்தது..

ஒவ்வொருவருக்குள்ளும் உறங்கும் உயிர்ச்சுருளை உசுப்பிவிட்டு சீண்டிவிட்டு சீறவிட்டு வேடிக்கை பார்ப்பதில் அற்புதருக்கு அளவிட முடியாதஆனந்தம்.

தங்களுக்குள் இருக்கும் அந்த உயிர்ப்பை உணர்ந்தவர்கள்,உணராதவர்கள் அனைவருக்கும் அற்புதரின் சபையில் ஆசனங்கள் இர்ருந்தன.உலகின்
வெவ்வேறு திசைகளிலிருந்தும் குழலோடும் யாழோடும்முரசுகளோடும்
அங்கமெங்கும் தாண்டவத் துகள்களோடும் வந்துசேர்ந்த வல்லோர் குழு
கவிந்து கொண்டிருந்த இருளின் ஒவ்வோர் அணுவிலும் அதிர்வுகள்
கூட்டின.

அந்த இரவில் அங்கிருந்தோரின் முதுகுத்தண்டுகள் வழியே
மின்னல் வேகத்தில் பாம்புகள் ஊர்ந்து செல்லத் தொடங்கின.
சுருண்டு கிடந்த சாரைகளும் விரியன்களும் ராஜநாகங்களும்
துயில் கலைந்தெழுவதையும்,மெல்ல அசைவதையும் அங்கு வந்தவர்தம்  உடலசைவை வைத்தே உணர முடிந்தது.

அற்புதரின் திருமேனி மாபெரும் மகுடியாய் எழுந்து நின்று அத்தனை
நாகங்களையும் ஆட்டுவித்தது.ஆலமுண்ட கண்டமென்று நீலம்
படர்ந்திருந்த நள்ளிரவில் அற்புதரின் மகாமந்திர உச்சாடனத்தில் அத்தனை நாகங்களும் ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷனாய்
படம்விரித்தன.

உச்சிவரை உயர்ந்தெழுந்த நாகங்கள் உள்ளே நிகழ்த்திய உறியடி உற்சவத்தில் உச்சியிலிருந்த பாற்குடத்தின் துளிகளை பருகின
நாகங்கள். பசிதுயில் மறந்தன தேகங்கள். நெடுந்தொலைவில்
ஒலித்தவொரு சித்தர் பாடல் அந்த வெள்ளிமலையெங்கும் விரிந்து
பரந்தது..

மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்பவர்க்கு
 தேங்காய்ப்ப்பால் ஏதுக்கடி-குதம்பாய்
 தேங்காய்ப்பால் ஏதுக்கடி “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *