நிகழ்பவை. மண்ணில் மழைத்துளி விழுகிற ஓசையும், புல்லில் பனித்துளி படிகிற ஓசையும் துல்லியமாகக் கேட்கும் விதமாய் அங்கே நிலைகொண்டிருந்தது மௌனம். அற்புதரின் மௌனமோ சுழலும் வாளின் கூர்மைகொண்டது. நாலாதிசையிலும் சுழலும் அந்த வாளின் முனைபட்டு விம்மி வெடிக்கும் உயிர்களின் வெற்றுக் கவசங்கள் விழுந்தன.
கெட்டிப்பட்ட அழுக்கையே கவசமென்று கருதிய அறியாமை பொடியாகும் ஆனந்த கணங்களை அற்புதர் நிகழ்த்திக் கொண்டேயிருந்தார்.அவருடைய மௌனத்தின் மேற்பரப்பில் முத்துதிர்த்த சொற்களின் சுட்டுவிரல்மௌனம் நோக்கியே நீண்டன.”என் சொற்கள் உங்களை ஈர்க்கின்றன. பின் மௌனத்திடம் சேர்க்கின்றன”என்றார் அற்புதர்.
அகல மறுக்கும் அழுக்குக் கவசத்தையும் சற்றே துளைத்து அற்புதர் விதைக்கும் மௌனவிதை, உயிரின் கூச்சலை உற்றுக் கவனிக்கும் விவேகத்தை விளையச் செய்தது.
தீபத்தைத் தொட்டு விழுகிற விட்டில் பூச்சிகளாய்அந்த மௌனம் தொட்டு விழுந்தன வெற்றரவங்கள். வானின் மடியில் வெளிச்சமும் இருளும் வந்து போவதைப்போலவே, மௌனத்தின் மடியில் சொற்கள், சொந்தங்கள், உறவுகள், உணர்ச்சிகள் வந்துபோவதை அற்புதர் உணர்த்தினார். வந்துசேர்ந்த மௌனத்தின் வெப்பம் தாங்காமல் வினைகள் கருகத்தொடங்கின. உள்ளே உந்தி எழுந்த நெருப்பும் வழியில் கிடந்த மூட்டைகளை வேகவேகமாய் எரிக்க எஞ்சிய சாம்பலும் கண்ணீரின் நதியில் கழுவப்பட்டது.
சுமைகள் குறைந்ததையும் சிறகுகள் விரிந்ததையும் உணர்ந்த உயிர்ப்பறவை தன் கூடும் வானமும் ஒன்றே என்று கண்டுகொண்டது.முன்னொரு காலத்தில் தான் முட்டி உடைத்த முட்டையின் ஓடுகள் தூள்தூளாகக் கிடப்பதைக் கண்ட பறவை, இவையே தன்னை முன்னொரு காலத்தில் பிணைத்து வைத்திருந்தவை என்பதை உணர்ந்தது. தன்னுள் குடியிருக்கும் மௌனத்துடன் தொடர்பு கொள்ள முடிந்தவர்கள் தங்களுக்குத் தாங்களே மௌன சாட்சியாய் மாறிப் போன பிறகு வாழ்க்கைப்பாதையின் எந்தப் புழுதியும் அவர்கள் மீது படியவில்லை.
அற்புதர் சொன்னார், “உங்கள் உயிர்களின் புழுதியை மௌனம் கொண்டு கழுவுகிறேன். இனி நீங்களாகச் சென்று புழுதியில் புரண்டாலொழியாழுக்கு உங்களை அண்டாது. உலகில் நீங்கள் முன்புபோல் இயங்கலாம். உலகம் உங்களில் இயங்காது. மௌனத்தின் சமுத்திரம் நான். உங்கள் ஒவ்வொருவருக்கும் தருகிறேன் ஒருதுளி மௌனம். அந்த ஒருதுளி வளர்ந்து வளர்ந்து உள்ளே சமுத்திரமாகும். அலைகளே அலையாத அந்த சமுத்திரம் அமுதமாகும்”