அழித்தலுக்கான கடவுளென்று சிவனைச் சொல்வார்கள்.அவன் ஆடுமிடம்
சுடுகாடென்பார்கள்.அவனுக்கு தாய்தந்தை இருந்திருந்தால் இப்படி மயானத்தில் ஆட விட்டிருப்பார்களா என்று பாடியவர்கள்சிவனடியார்கள்.

அடியவர்களிலேயே சிவனுக்கு அம்மா முறை கொண்டாடியவர்
காரைக்கால் அம்மையார்.கொண்டாடியவர் அவர் மட்டுமல்ல.
சிவனும்தான். பேய்வடிவெடுத்து காரைக்கால் அம்மையார் கயிலாயம்
செல்லும்போது பார்வதி இவர் யாரென்று கேட்க,”வருமிவள் நம்மைப்பேணும் அம்மை காண்”என்றாராம் சிவபெருமான்.
பார்வதிக்கு மாமியாரைத் தெரியாத போதும் காரைக்காலம்மையாருக்கு
மருமகளைத் தெரிந்தே இருக்கிறது. “நீதான் சுடுகாட்டில் ஆடிப் பழகி விட்டாய்.அவள் சின்னப்பெண்.அவளையும் உன் இடப்பாகத்தில்
வைத்துக் கொண்டு சுடுகாட்டுக்குப் போய்விடாதே.பாவம் பயந்துவிடப்போகிறாள்”என்று பாடியவர் அவர்.

“குழலார் சிறுபுறத்துக் கோல்வளையைப் பாகத்(து)
எழிலாக வைத்தேக வேண்டா – கழலார்ப்பப்
பேரிரவில் ஈமப் பெருங்காட்டிற் பேயோடும்
ஆரழல்வாய் நீயாடும் அங்கு.”

ஆனால் தன் பிள்ளை மயானத்தில் கையில் நெருப்பை ஏந்தியாடும்
அழகை அவர் ரசிக்காமல் இல்லை.கையில் அனலேந்தியதால் சிவனின்
உள்ளங்கை சிவந்ததா,அல்லது சிவனின் உள்ளங்கையைத் தீண்டியதால்
நெருப்பு சிவப்பாக இருக்கிறதா என்ற சந்தேகம் அவருக்கு.

சிவனிருக்கும் மயானங்கள் என்று ஐந்து மயானங்களைக் குறிப்பாக சொல்வார்கள்.காழி மயானம்,கடவூர் மயானம்,காசி மயானம், கச்சி மயானம்,நாலூர் மயானம் ஆகியவை அவை,மயானம் என்றால் சுடுகாடு என்று மட்டும் பொருளல்ல. மய-அயனம் என்றால் படைப்புத் தொழில் இடையறாமல் நடந்து கொண்டிருக்கும் இடம் என்று பொருள்.குறிப்பிட்ட காலத்துக்குப் பின் பிரம்மாவும்இறக்கிறார் என்று சொல்வதன் பொருளே, இறப்பு என்றால் என்ன என்று பிரம்மாவுக்குத் தெரிந்தால்தான் அவரால் படைக்க முடியும் என்பதுதான்.கடவூர் மயானம் பிரம்ம சம்ஹாரத் தலம் என்று சொல்லஇதுதான் காரணம்.

ஞானிகள் ஞானோதயம் அடைந்ததே மரணம் குறித்து தீவிரமாக
சிந்தித்த போதும் அதை தியானமாக மேற்கொண்ட போதும்தான்.
இதெல்லாம் இருக்கட்டும். உலகம் அழிகையில் சிவனென்ன செய்வார்
என்பதல்லவா கேள்வி?இதற்கான விடை தெரிய வேண்டுமென்றால்நாம் மாணிக்கவாசகர் காலத்துக்குப் போக வேண்டும்.

திருவாசக ஏடுகளை மாணிக்கவாசகர் தில்லையில் பொன்னம்பலப்
படிக்கட்டுகளில் வைக்க அதை சிவபெருமான் தன் கைப்பட ஏட்டுச்சுவடிகளில் எழுதிக் கொண்டாராம்.அதை எழுதியது தான்தான் என்பதைத் தெளிவுபடுத்தும் விதமாக “திருச்சிற்றம்பலமுடையான் கைசார்த்து” என்று கையொப்பமும் இட்டாராம்.முதன்முதலில் தமிழில் கையெழுத்து போட்ட கடவுள் சிவன்தான்.

ஏன் திருவாசகத்தை சிவபெருமான் நகலெடுத்துக் கொண்டார் என்பதற்கு பல நூறாண்டுகள் கழித்து மனோன்மணியம் எழுதிய  சுந்தரம் பிள்ளை ஒரு விளக்கம் கொடுத்தார். பிரளய காலம் முடிந்து பிரபஞ்சம் முற்றாக அழிந்து வேறொரு பிரபஞ்சம் வடிவெடுக்க வேண்டும். அதுவரை சிவனுக்கு வேலையில்லை.தனியாகத்தான் இருப்பார்.அந்தத் தனிமையைப் போக்கிக் கொள்ளதிருவாசகம் படிக்கலாம் என்று முன்னரே ஒரு பிரதி எடுத்து வைத்துக் கொண்டாராம்.

“கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்தே
உடையார் உன் வாசகத்தில் ஒருபிரதி கருதினதே”
என்கிறார் சுந்தரம் பிள்ளை.முன்யோசனைக்காரர்தான் சிவபெருமான்.

சிpp

சிவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *