புகைப்படம்: வேற யாரு?அதுவும் அந்தச் சுகாதான்!! |
இந்தக் கேள்வியை 2005ல் முனைவர்.கு.ஞானசம்பந்தனிடம் கேட்பேன். “இப்போ ஷூட்டிங்தான்.நீங்க?”என்பார் பதிலுக்கு.நானும் ஷூட்டிங்தான் என்பேன். அப்போது நான் கஸ்தூரிமான் படத்தில் நடித்துக் (?) கொண்டிருந்தேன். பேராசிரியரும் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
பெரும் கடன் வாங்கி லோகிததாஸ் தயாரித்து இயக்கிய படம் கஸ்தூரிமான்.
எனக்கு அந்தப் படத்தில் கிடைத்த நல்லபெயர் யாருக்கும் கிடைத்திருக்காது.
“சே!எவ்வளவு நல்ல மனுசன்யா! கேமரா முன்னால கூட நடிக்கத் தெரியாத
அளவு எதார்த்தம்” என்று எல்லோரும் கண்ணீர் மல்க நினைத்தார்கள்.ஆனால்
பேராசிரியர் ஞானசம்பந்தனுக்கு அவ்வளவு நல்ல பெயர் இல்லை போலும்.
தொடர்ந்து பல படங்களில் நடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிவிட்டார்.
கஸ்தூரிமான் வெளிவந்து சில நாட்களில் சுரேஷ் (இயக்குநர் சுகா) அழைத்தார்.”அண்ணே!சமீபத்தில் என்ன படம் பார்த்திங்க?”என்றார்.
“சுரேஷ்!இனிமே நான் நடிக்கிற படங்களை மட்டும்தான் பார்க்கிறதா
இருக்கேன்!”என்றேன்.எதிர்முனையில் நீண்ட மௌனம். “அண்ணே! இந்தக்
கேள்விய நான் வாபஸ் வாங்கிக்கிடுதேன்.இனிமே இந்தக் கேள்வியை ஒங்ககிட்டே கேட்டா என்ன வாரியலக் கொண்டு அடிங்கண்ணே!ரொம்ப
ஓவரால்லா இருக்கு!” என்று வைத்துவிட்டார்.
அந்த வரிசையில் இப்போது இன்னொருவர் சேர்ந்திருக்கிறார்.இசைக்கவி ரமணன். தொலைக்காட்சித் தொடர்களிலும் ஒரு திரைப்படத்திலும் நடித்து
வருகிறார். “ஷூட்டிங்கா?மீட்டிங்கா?”என்று கேட்டால், “இரண்டுமில்லை.
டப்பிங்” என்கிறார். இயக்குநர் பாலசந்தரின் தொடர் ஒன்றிலும் ராஜகுமாரி
தொடரிலும் நடித்து வருகிறார். ஒருநாள் இரண்டு தொடர்களுக்கும் நடிக்க
வேண்டிவந்து கால்ஷீட் பிரச்சினை வந்துவிட்டதாக ரமணன் சொன்னார்.
அப்போதுதான் சுகாவின் கடுப்பில் இருந்த நியாயம் எனக்குப் புரிந்தது.
ரொம்ப ஓவரால்லா இருக்கு என்று முணுமுணுத்தேன். சத்தமாகச் சொன்னால் அதையே சீரியலில் தன் பஞ்ச் டயலாக்காக ரமணன் அமைத்துக்
கொள்ளக்கூடும் என்று பயமாக இருந்தது.இசைக்கவி ரமணன் எழுதவே
எழுதாத “பாயாசம்..ஆயாசம்” பாடல்களை அவர் பெயரால் எழுதி இணையத்தில் உலவ விட்டுக் கொண்டிருக்கும் சுகா, பி.பி.ஸ்ரீநிவாஸ் பற்றி
ஆனந்த விகடனில் எழுதியுள்ள கட்டுரையை இசைக்கவி ரமணன் மிகவும்
பாராட்டிச் சொன்னார்.
“நான் பாராட்டினதுக்காக சுகா என்னைக் கிண்டல் பண்றதை நிறுத்தப் போறதில்லை. வெங்கடேஸ்வரன் பாராட்டினதுக்காக ரமணனை விட்டுட
முடியுமான்னு நினைப்பார்”என்றார் தருவை வெங்கடேஸ்வரன் எனும் ரமணன்.இசைக்கவி ரமணனின் பாடல்களுக்கு ரகசியமான ரசிகரான சுகா,
ரமணனை ஓட்டுவதை மட்டும் பகிரங்கமாக செய்வார்.ஏதேனும் ஒரு பாரதி விழாவில் ரமணன் “மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன”என்று பாடினால்
எங்கோ ஒளிந்து அமர்ந்திருக்கும் சுகாவைப் பார்த்துவிட்டாரோ என்று
சந்தேகப்பட வேண்டி வரும்.
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.அவர்களின் புதல்வர் வாலேஸ்வரன் அவர்களை சந்தித்துத் திரும்புகையில் அந்த சந்திப்பின்நெகிழ்வில் காரில் ரமணன் அழுதபடியே வந்தார். அவரளவுக்கு அந்தச் சந்திப்பில் நெகிழ்ந்து போயிருந்த போதும் சுகா என் காதோடு கேட்டது,”அண்ணே! இப்படி அழறாரே!
வயித்த வலிக்குதான்னு கேளுங்க!”அடுத்து சீரியல்களில் வரும் சோகக் காட்சிகளின் போது ரமணனுக்கு இந்த ஞாபகம் வந்து வெடித்துச் சிரித்து
இயக்குநர் சிகரத்திடம் ஏத்து வாங்கினால் சென்னை கடற்கரை சாலையில்
இருக்கும் நடிகர் திலகம் திருவுருவச் சிலைக்கு 108 தேங்காய் உடைப்பதாக
நானும் சுகாவும் நேர்ந்திருக்கிறோம்.