இது நடந்து இருபது ஆண்டுகள் இருக்கும்.கோவை நானி கலையரங்கில் ஓர் இலக்கிய நிகழ்ச்சி. பார்வையாளர்கள் வரிசையில் கவியன்பன் பாபுவும்
நானும். இருவருக்குமே வெண்பா எழுதுவதில் விருப்பம். ஆளுக்கு இரண்டு
வரிகளாய் பாடும் இரட்டைப் புலவர்களின் உத்தியை நாங்களும்
கடைப்பிடித்திருந்தோம். மேடையில் பேச்சாளர்கள் தூள் கிளப்பினார்கள்.
தூள் கிளப்பினார்கள் என்றதுமே பிரமாதமாகப் பேசினார்கள் என்று நீங்கள்
நினைத்துவிடக்கூடாது. மரத்தை ரம்பத்தால் அறுக்கும் போது தூள் கிளம்பும்
அல்லவா? அந்த தூள் இது.
ஆர்வக் கோளாறில் முதலிரண்டு வரிசைகளில் அமர்ந்து விட்ட நாங்களிருவரும் ஒருவரையொருவர் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டோம்.
கவியன்பன் பாபு,விழா நோட்டீசின் பின்புறம் இரண்டு வரிகளை எழுதி நீட்டினார்.
“வேண்டாம் இவர்களெல்லாம் வாயால் விஷம்தெளிப்பார்
மாண்டுவிடும் நம்பொறுமை வாபோவோம்”
மீதி இரண்டுவரிகளை நான் எழுதினேன்.
–தீண்டவரும்
பாம்பின்று கால்சுற்றப் பார்த்துவிட்டோம்;போடும்முன்
நாம்தப்பிப் போதல் நலம்
இருவரும் வெளிநடப்புச் செய்தோமே தவிர ஒரே வாரத்தில் அப்படி இன்னொரு கூட்டத்தில் மாட்டிக் கொண்டோம். கூட்டம் தொடங்கும் முன்
சுண்டலெல்லாம் தந்தார்கள்.அதன்பிறகு சுண்ட சுண்டக் காய்ச்சினார்கள்.
நொந்துபோய் வெளிநடப்பு செய்த சில விநாடிகளிலேயே பாபு தொடங்கினார்.
“தட்டைப் பயிர்கொடுத்துத் தட்டிவிட்டார் பார்த்தாயா?
நெட்டை மரங்களாய் நீள்புலம்பல்”
அவரைப்போலவே உச்சக் கடுப்பில் இருந்த நான் மீதம் இரண்டு
வரிகளை எழுதினேன்.
” -நட்டகல்லும்
கால்முளைத் தோடவே கொன்றுவிட்டார் அப்பப்பா
வால்முளைத்தால் போவார் வனம் “
இந்த வெண்பாக்கள் கோவை மாநகர வீதிகளிலும் உணவகங்களிலும் தேநீர்ச்சாலைகளிலும் உருவாயின.பேல்பூரியுடன் தொடங்கும் மாலைப்
பொழுதுகள்.
“பேல்பூரி தட்டும் பெருங்கரண் டிச்சத்தம்
ஆள்நகர்ந்தாலும் அழைத்துவரும்”
என்று கவியன்பன் எழுத
“-நாளுமே
முட்டை பரோட்டாவை முன்னெருவாய்ப் போட்டால்தான்
மொட்டவிழும் பாட்டு மலர்”
என்று நான் எழுதினேன்.
ஏதோவோர் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு,பழம் தின்ன பெட்டிக்கடை ஒன்றில் நின்றோம்.
“பெட்டிக் கடைக்குப் பழம்வாங்கப் போனாலும்
சுட்டிப்பெண் தோலாய் சிரிக்கின்றாள்”
என்று தொடங்கினேன்.உடனே எச்சரிக்கை வரிகளை எழுதினார் கவியன்பன்.
“-எட்டநின்று
தோல்வாங்கும் ஆடாய் தெரிவதவள் அப்பன்தான்
கால்வாங்கிப் போவானே காண்”.
“மல்லிகைத் தோட்டாக்கள்” என்னுந் தலைப்பில் அவருடைய கவிதைத் தொகுதி வெளிவந்தது. முதுகலை படித்தார்.ஆசிரியர் பயிற்சி முடித்தார். ஆனால் அவருடைய திறமைக்கும் தகுதிக்கும் சம்பந்தமேயில்லாத விதமாய்
ஓர் அரசு அலுவலகத்தில் மிக எளிய பணியே வாய்த்தது.இதற்கிடையில்
திரைப்படப் பாடலாசிரியர் ஆகும் கனவில் சென்னை சென்று,தன் வாலிப
வயதின் வீறுகொண்ட நேரங்களை எரிபொருளாக்கி எரித்து, கோவை
மீண்டார். அந்த வலிமிகும் அனுபவங்களை “பட்டணம் போனேன் பாட்டெழுத”
என்ற தலைப்பில்,நான் நடத்திவந்த ரசனை இதழில் தொடராக எழுதினார்.
கோவை ஸ்ரீ அன்னபூர்ணா குழுமங்களிலிருந்து சிறுவாணிமெயில்
என்னும் வார இதழ் என் பொறுப்பில் வெளிவந்தபோது “தெரிந்த கோவை
தெரியாத கதை”என்னும் தலைப்பில் கவியன்பன் எழுதிய தொடர் பெரும்
வரவேற்பைப் பெற்றதுடன் விஜயா பதிப்பக வெளியீடாக நூல்வடிவமும்
பெற்றது.
ஆலைத் தொழிலாளியின் மகனாகப் பிறந்து,வறுமை காரணமாய் கல்லூரியில் நேரடியாகப் படிக்கும் வாய்ப்பை இழந்து கவிஞர்களின் கிரியா
ஊக்கியான காதல் தோல்வியில் துவண்டு,வளராத தாடியை வருடி,அடுத்த
காதல் அரும்பிய போது கவியன்பன் எழுதிய எண்சீர் விருத்தமொன்று எனக்கு
மிகவும் பிடிக்கும்.அந்தத் தேதிவரை அவர் வாழ்ந்த அவருடைய மொத்த வாழ்க்கையும் அதற்குள் அடக்கம்.
“செந்தாமரைச் செல்வி பிறப்பு தொட்டு
சேராமல் இருந்துவிட்டாள்;சொந்தமில்லை;
வெண்தாமரைச் செல்வி ஈரெட்டாண்டில்
விடைபெற்றாள்;போராடி அழைத்து வந்தேன்.
என்தாமரைச் செல்வி என்பாளுக்கோ
இரக்கமிலை;இமையவளே விழியைத் தின்றாள்;
வந்தவளே! நீயெந்தச் செல்வியம்மா?
வைகறையா?அஸ்தமனம்தானா நீயும்?”
காலநடையில், பணிச்சுமை அழுத்தம்,குடும்பப் பொறுப்புகள் என்று வெவ்வேறு வேலைகளுக்கு நடுவில்முழுவீச்சில் கவியன்பனால் இயங்க
முடியவில்லை.சில மேடை நிகழ்ச்சிகளையும் தவிர்க்கும் நிலை ஏற்பட்டது.
சமீபத்தில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கோவையில் நடத்திய முத்திரைக்
கவியரங்கில் கலந்து கொள்ள அழைத்தேன்.வந்திருந்தார். கவியரங்கில்
மூன்று சுற்றுகள். மூன்றாவது சுற்றில் தன் தற்போதைய நிலையை
விளக்கும் விதமாய் மூன்று வெண்பாக்கள் வாசித்தார் கவியன்பன்.
முதல் வெண்பாவின் முதல் வரியே முழுவதையும் சொல்லிவிட்டது.
“ராசாங்க வேலைதான்;ராப்பிச்சை சம்பளம்“
அவை.அதிர்ந்து போனது.’ஆகா’ என ஆரவாரித்து ரசித்தவர் ஆகாசம்பட்டு
சேஷாசலம்.வெண்பா மன்னர் .இந்த மூன்று வெண்பாக்களில் கவியன்பன்
கே.ஆர்.பாபுவின் அகம் புறம் அனைத்தும் தெரியும்.
ராசாங்க வேலைதான் ராப்பிச்சை சம்பளம்
காசுக்குப் போடுகிறேன் கைத்தாளம்-பேசியென்ன
அங்குசத்தைக் கும்பிடும் ஆனைபோல் ஆகினேன்
பொங்குவதால் நெஞ்சுக்குள் புண்.
பந்தயத்தில் ஓடிப் பதக்கம் பெறுவதற்கு
முந்திவரும் ஆசை முடங்கவில்லை-எந்தநாளும்
லாடச் செருப்பணிந்து லாயத்தில் நிற்கின்றேன்
கூடுமோ அந்தக் கனவு.
பக்கம் கரும்பாலை பர்லாங்கில் சோலையென்று
மொக்குமலர் தேடா மடத்தேனீ-பக்க(ம்)நின்று
கொப்பரையில் பாகெடுக்கக் குத்தாட்டம் போடுதே
எப்படித் தப்பும் இது.
அங்குசத்தைக் கும்பிடும் ஆனையை,அதற்குரிய ஆரண்யத்தில்
சேர்ப்பிக்குமா காலம்?
அது ஒரு நெகிழ்ச்சியான விழா.கால்நூற்றாண்டுகால கொங்குமண்டலக் கலைஞர்களின் குடும்ப விழா.அதைவிடவும் ஒரு நட்புக்கு சக கலைஞன் கொடுத்த உச்சபட்ச அங்கீகாரம் அது. பாபுவின் உடலை,உயிரை அதையும் மீறி அவருக்குள் குற்றுயிராய்க்கிடந்த கலைஞனை உங்களை விடவும் இவ்வளவு சிறப்பாய் யாரால் மீட்டிருக்க முடியும் ? இது போன்ற உயரிய நட்பை, நல்ல செயல்களை பாராட்ட முன்வர வேண்டும். தமிழ் மண்ணில் எண்ணற்ற பாபுகள் இருக்கிறார்கள். ஆனால், முத்தையாக்கள் மிகக்குறைவு. இந்தப்பாராட்டு உங்களுக்கு ஒன்றுமில்லை என அறிவேன். என்றாலும் பாபுவின் தோழன் என்ற வகையிலாவது இதனைப் பதிவது என் கடன். நன்றாயிருங்கள் நண்பர்களே …!