(ஜூலை-4 சுவாமி விவேகானந்தர் நினைவு நாள்)
எல்லாத் திசைகளும் என்வீடு-என
இங்கே வாழ்ந்தவர்யார்?
நல்லார் அனைவரும் என்னோடு-என
நெஞ்சு நிமிர்ந்தவர்யார்?
நில்லா நதிபோல் விசையோடு-அட
நாளும் நடந்தவர் யார்?
கல்லார் நாடெனும் கறையகற்ற-சுடர்க்
கணையாய்ப் பாய்ந்தவர்யார்
எங்கள் கிழக்கில் எழுந்தகதிர்-புகழ்
ஏந்திடும் மேல்திசையில்
பொங்கும் எரிமலை போலெழுந்தே-இருள்
போக்கிடும் நம்முயிரில்
வங்கம் வழங்கிய ஞானஒளி-நம்
விவேகானந்த ஒளி
சிங்கப் பிடரி சிலிர்த்தபடி-அவர்
சென்றது ஞானவழி
பூமியை உலுக்கும் புயலாக-அவர்
புறப்பட்ட வேகமென்ன
சாமி உனக்குள் எனசொல்லி -அவர்
சமத்துவம் கண்டதென்ன
தீமைகள் எரிக்கும் கனல்பிழம்பாய்-அவர்
திருமொழி திகழ்ந்ததென்ன
ஓமெனும் மந்திர ஒலிபோலே-அவர்
ஓங்கி யெழுந்ததென்ன
எத்தனை யுகங்கள் போனாலும்-அவர்
ஏற்றிய ஒளியிருக்கும்
எத்தனை இடர்கள் வந்தாலும்-அவர்
வார்த்தையில் வழிபிறக்கும்
தத்துவம் மானிடன் உயர்வதுதான்-அவர்
வாழ்வுக்கு இது விளக்கம்
முத்திரை பதித்த முனிராஜன்- அவர்
மலரடிக்கென் வணக்க்ம்