எதிர்பார்த்து நின்றவர்க்கோ
ஏதொன்றும் புரியவில்லை
ஏறெடுத்தும் பாராதார்
எல்லாமே அறிந்திருந்தார்:
புதிர்போட்ட மனிதருக்கே
பதில்மறந்து போயிருக்க
விதியெல்லாம் கடந்தவர்தான்
விடைதாண்டிப் போயிருந்தார்
விதைபோட்டு வளர்த்தவரோ
வெய்யிலிலே காய்ந்திருக்க
பதறாமல் இருந்தவரே
பழம்பறித்துப் புசித்திருந்தார்
முதல்போட்ட வணிகருக்கோ
மூலதனம் கரைகையிலே
முதல்-ஈறு தெரிந்தவரே
முழுசெல்வம் அடைந்திருந்தார்
சதையெலும்பே சதமென்றோர்
சஞ்சலத்தில் அலைபாய
சிதைநெருப்பின் நடுவினிலும்
சிவனாண்டி சிரித்திருந்தார்
நதிபாய்ந்த நேரத்தில்
நனையவந்தோர் ஏமாற
நதிகாய்ந்த வேளையிலும்
நிர்மலரே குளித்திருந்தார்
மூடிவைத்த கைபோன்ற
முழுவாழ்வின்சூனியத்தில்
பாடிவந்த பரஞானி
பிரிந்தவிரல் அறிந்திருந்தார்
தேடிவந்த தத்துவங்கள்
தொலைத்துவிட்டுத் தடுமாற
கூடிவந்த நிஷ்டையிலே
கோமணாண்டி கண்டிருந்தார்
ஆடிவந்த நாடகங்கள்
அதன்போக்கில் கதைமாற
பாடிவந்த பரதேசி
பொதுவெளியில் நடம்புரிந்தார்
நாடியவர் உறவென்று
நம்பியவர் அலைமோத
நாதன்தான் உறவென்றோர்
ஞானத்தில் லயித்திருந்தார்
கூடியவர் பிரிந்ததிலே
கோடிப்பேர் தடுமாற
கூடாமல் கூடியவர்
கோடியின்பம் கண்டிருந்தார்
மாடிமனை கட்டியவர்
முகம்புதைக்க மடிதேட
வீடுவெட்ட வெளியென்று
வாழ்ந்தவரே வாழ்ந்திருந்தார்