அவளுக்கு வடிவம் கிடையாது
அழகுகள் எல்லாம் அவள் வடிவே
அவளுக்குப் பெயரொன்று கிடையாது
ஆயிரம் பெயர்களும் அவள்பெயரே
அவளுக்கு நிகரிங்கு கிடையாது
அவளுக்கு அவள்தான் ஒருநிகரே
கவலைகள் எனக்கினி கிடையாது
காளிவந்தாள் என் கண்ணெதிரே
தோய்ந்திடும் நடுநிசி நிறமல்லவா
தாமரை வதங்கிய நிறமல்லவா
பாய்ந்திடும் மின்னலை போல்சிலிர்ப்பு
பைரவி வருகிற விதமல்லவா
ஆய்ந்திட முடியா அவள்கருணை
அமுதம் பெருகிடும் வகையல்லவா
கோயிலில் வீதியில் தொடர்வதனை
காட்டிடும் குங்கும மணமல்லவா
வைத்த கொலுவில் அவள்பொம்மை
வாழ்வில் அவள்மட்டும் தானுண்மை
பொய்த்த கனவுகள் நிஜமாக
பாதை வகுப்பதே அவள்தன்மை
கைத்துப் போன வாழ்வினிலே
கட்டிக் கரும்பாய் அவள் அண்மை
வைத்தியச்சி வருகின்றாள்
வாரித் தருவாள் பலநன்மை