இறங்கியதும் ஜெயமோகனின் வாசகர் ஒருவர் எதிர்ப்படுகிறார். அவரிடம் நல்ல உணவகம் எங்கே என்று விசாரிக்கிறோம்.அவர் வழி சொல்லிக் கொண்டே அருகிலுள்ள வீட்டைக் காட்டி “இதுதான் எழுத்தாளர் ராஜேஷ்குமார் வீடு” என்று காட்டுகிறார்.
உடனே நான்,”இல்லையே! அவர் குயூரியோ கார்டனில் அல்லவா இருக்கிறார்”என்று யோசிக்கிறபோதே கொசுவலை அடிக்கப்பட்ட ஜன்னல் வழியே ராஜேஷ்குமார் கைகாட்டுகிறார். எங்களைப் பார்த்துவிட்டு சட்டையில்லாத உடம்புடன் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு ஆர்வமாக வெளியே வருகிறார்.
ஜெயமோகனும் ராஜேஷ்குமாரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொள்கிறார்கள்.உடனே நான் என் டேப் ஐ எடுத்து புகைப்படம் எடுக்க ஆயத்தமாகிறேன்.”சட்டை மாட்டிக் கொண்டு வருகிறேனே” என்று புறப்படும் ராஜேஷ்குமாரைத் தடுத்து “சும்மா அப்படியே நில்லுங்க!தகழி சிவசங்கரன் பிள்ளை மாதிரி இருக்கட்டும்” என்றதும் ராஜேஷ் குமார் திடுக்கிடுகிறார். ஜெயமோகன்,”கடுப்பேத்துகிறார் மைலார்ட்” என்பது போல் பார்க்கிறார். நான் புகைப்படம் எடுக்கிறேன்.
அருகிலொரு மண்டபத்தில் விஷ்ணுபுரம் அரங்கசாமி உள்ளிட்ட நண்பர்கள் இருக்கிறார்கள்.அவர்களிடம் புகைப்படத்தைக் காட்ட ஒரே கூச்சலும் சிரிப்பும்..அந்த சப்தத்திலேயே விழித்துக் கொள்கிறேன்.
இப்படியொரு கனவு எப்படி வந்தது?நேற்று சென்னையில் இருந்த போது சிரிப்பொலி சேனலில் சந்தானம் ,கார்த்தியிடம் “ராஜேஷ்குமார் நாவலில கூட ஹீரோயின் யாருன்னு ரெண்டாவது பக்கத்திலேயே சொல்லீடுவாங்க கமல்சார் “என்று சொன்ன காட்சியைப் பார்த்ததும்,மாலை பயணத்தில் ஜெயமோகனின் “வெண்கடல் ” படித்துக் கொண்டு வந்ததும் குழம்பி விட்டது போல….நல்லவேளை ! விஷ்ணுபுரம் விருது ராஜேஷ்குமாருக்கு கொடுப்பது போல் கனவு வராமல் இருந்ததே!!