“கங்கையிரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயான்” என்று குகனை அறிமுகப்படுத்துவார் கம்பர்.இன்றும் கங்கைக்கரையில் கணக்கில்லாத நாவாய்கள் நிற்கின்றன.படகுக்காரர்களும் வேட்டைக்காரர்கள் போல் வாடிக்கையாளர்களைக் குறிவைத்துக் காத்திருக்கிறார்கள் .இரண்டு மணிநேரப் படகுப்பயணத்திற்கு 250 ரூபாய் என்று பேசிப் படகேறினோம்
.கங்கைக்கரையிலிருந்து நதிக்குள் படகு புகுமுகத்தில் போக்குவரத்து நெரிசல்.படகின் கயிறவிழ்த்த கையோடு முட்டிக் கொண்டு நிற்கும் பத்துப் பதினைந்து படகுகளைக் கைகளால் தள்ளிக்கொண்டே படகோட்டி கங்கைக்குள் பிரவேசம் நிகழ்த்தினார்.ஒவ்வொரு படித்துரைக்கும் “காட்” என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.உடன் வந்த நண்பர்கள் காட் கதைகள் கேட்கக் காதுகளைத் தீட்டிக் காத்திருக்க மனம் கங்கைக்குள் இறங்கியிருந்தது.ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்ப் பிரவாகத்தில் இருக்கும் நீர்த்தடத்தில் இறங்கியிருப்பது ,தொடர் பிறவிகளின் ஆன்மப் பயணத்தில் ஒரு மைல்கல் என்று பட்டது.
 இரவு ஏழு மணியளவில் நடைபெறும் கங்கா ஆரத்தி,கண்கொள்ளாக் காட்சியாயிருக்கும் என்று முன்பே சொன்னார்கள்.அதுவரை எங்கள்படகு கங்கையிலேயே திரிந்து கொண்டிருந்தது.
ஒரே நேரத்தில் இருவேறிடங்களில் நடந்தது கங்கா ஆரத்தி.ஜோதிமயமாய்அமைந்திருந்த அந்த ஆரத்தியை அர்ச்சகர்கள் இசைக்கேற்ப தாள அசைவுகளுடன் நிகழ்த்தினர்.ஒருபுறம் ஏழு பேரும் மற்றொரு புறம் ஐந்து   பேரும் நிகழ்த்தின ஆரத்தி ஒருமணிநேரம் நீடித்தது.கங்கையை உள்ளபடியே தெய்வமாய் வணங்குகிறார்கள் என்பது சந்தோஷமாக இருந்தது.மறுநாள் காலை கங்கையில் குளிக்கிற போது,அருகே ஒரு பெண் கால் செருப்புடன் துணியை அலச கங்கையில் இறங்க,”கங்கா மாதா கீ… செப்பல்?’ என்று சீறிக்கொண்டு கரை நோக்கிப்
 பாய்ந்தார் ஒருவர்.
பத்து ரூபாய்க்கும் இருபது ரூபாய்க்கும் தீபமும் மலர்களும் கொண்ட தொன்னைகளை வாங்கி கங்கையில்  மிதக்க விடுவது மிகவும் இதமான அனுபவம்.கங்கைக் குளியல் சர்வ நிச்சயமாய் சிலிர்ப்பைக் கொடுக்கிற விஷயம்.எத்தனையோ நதிகளில் இறங்கியிருந்தாலும் கங்கைக் குளியல் தனிதான். அடுத்த தீபாவளிக்கு ‘கங்கா ஸ்நானம் ஆச்சா” என்று யாராவது கேட்டால் “அச்சா’ என்று பதில் சொல்லலாம்.
கோடைக்காலம் ஆதலால் தெளிந்தோடிக் கொண்டிருந்த கங்கையின் குளுமையில் தாய்மையின் பெருக்கம்.நீண்ட நேரம் நீராடச் சொல்லும் அழைப்பு அலையலையாய் வந்தது.

காசியிலிருந்துடெல்லிக்கு வாகனப் பிராப்தி ரயில்.ஆதித்யா சர்மா என்ற வயதுச் சிறுவன் எங்களிடம் வழிநெடுக பேசிக்கொண்டே வந்தான் .அவ்வப்போது அவன் சொன்ன அங்கிள்ஜீ என்ற சொல்லையும் எம்.பி. மெமோரியல் ச்கூல் என்பதையும் தவிர வேறேதும் புரியவில்லை.எங்கலோடு அமர்ந்து அளவளாவ அனுமதித்த அவனின் அப்பா சர்மாவுக்கும்,தாத்தா சர்மாவுக்கும் எங்களிடம் அவன் பிஸ்கட் பெறுவதை அனுமதிக்க முடியவில்லை.குளிர்சாதனப் பெட்டிக்குள் அவர்களின் ஆசாரம் புழுங்கியது.

காசிக்கு ஒருமுறையேனும் போக வேண்டும் என்னும் எண்ணம் நிறைவேறிய நிறைவில் இருந்த போது அடுத்தடுத்த அழைப்புகளை  காசி கொடுக்குமென்று நான் நினைக்கவில்லை. சற்றே துயரமான சூழலில் காசியை நோக்கிய அடுத்த யாத்திரை வாய்த்தது.

(தொடர்வோம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *