ராஜீவ் கொலை வழக்கில் கொலைக்கு உடந்தையாகவும் திட்டத்திற்கு உடந்தையாகவும் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்தவர்களில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவர்,23 ஆண்டுகள் சிறையிலிருந்ததாலும் கருணைமனு மீது முடிவெடுக்க மத்திய அரசு காலம் தாழ்த்தியதாலும் அவர்களின் மரணதண்டனையை உச்சநீதி மன்றம் ரத்து செய்தது.
கூடுதலாக தண்டனை அனுபவித்ததால் அவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.தமிழக முதல்வர் அமைச்சரவைக் கூட்டத்தில் அவர்களுடன் ஏற்கெனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 23 ஆண்டுகள் சிறையிலிருப்பவர்களையும் சேர்த்து விடுவிக்க வேண்டும் என்று முடிவெடுத்ததையும் அதன்பின் நிகழ்பவற்றையும் நாம் பார்த்து வருகிறோம்.
ராஜீவ் கொலையையோ அதற்கு உடந்தையாய் இருந்ததையோ யாரும் நியாயப்படுத்த முடியாது.அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது நியாயம்.ஒவ்வொரு குற்றவாளிக்கும் தன்னைத் தற்காத்துக் கொள்ள வாதிடுகிற,விண்ணப்பிக்கிற உரிமைகள் உண்டு என்கிற அடிப்படையில் கருணை கோரி குடியரசுத் தலைவருக்கு விண்ணப்பித்தனர். இதில் பொதுமக்களின் கலவை உணர்வுகள் சம்பந்தப்பட்டிருப்பதாலோ என்னவோ, குடியரசுத்தலைவர்கள் தொடர்ந்து மௌனமாகவே இருந்தார்கள்.அது மௌனமா மெத்தனமா என்பது பற்றியும் இன்று வாதங்களும் எதிர்வாதங்களும் நிகழ்கின்றன.
ராஜீவைக் கொன்றவர்கள் கொல்லப்ப்ட்டு விட்டனர். உடந்தையாக இருந்தவர்கள்,மூல மூளையாக இருந்தவர்கள் என்றெல்லாம் வர்ணிக்கப்படுபவர்களின் வழக்கு விசாரணையில் ஈடுபட்டவர்களே தாங்கள் சில வாக்குமூலங்களை சரிவர பதிவு செய்யவில்லை என்று சொல்லியிருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.இதில் உரிய காலத்திற்கும் அதிகமாக தண்டனை அனுபவித்தவர்களை நீதிமன்றம் நடுநிலையுடன்தான் அணுகும்.அரசியலில் தலைவர்களாகத் தங்களை வாக்கு அடிப்படையிலோ வாரிசு அடிப்படையிலோ நிலைநிறுத்திக் கொள்பவர்களிடம் அத்தகைய நடுநிலையை மக்கள் எதிர்பார்ப்பார்கள்.
ராஜீவ் பொது வாழ்வில் இருந்தவர். பிரதமராகவும் இருந்தார். கொல்லப்பட்டபோது அவர் ஓர் அரசியல் தலைவர். அவர் பிரதமரா முன்னாள் பிரதமரா என்பதைப் பொறுத்து அவருடைய உயிரின் மதிப்பு கூடவோ குறையவோ போவதில்லை.அந்த குண்டு வெடிப்பில் உயிர் துறந்த மற்றவர்களின் உயிருக்கு என்ன மதிப்போ அதே மதிப்பு ராஜீவின் உயிருக்கும் உண்டு.
ஆயுள்தண்டனை என்பது பதினான்கு வருடங்கள் என்பதை எல்லோரும் அறிவர். அதையும் தாண்டி ஒன்பதாண்டுகள் சிறையிலிருந்தவர்களை விடுவிப்பதுதான் தர்மம்.