பின்ன முடியாத பொன்வலையை வீசியே
என்னையும் உன்னையும் யார்பிடித்தார்?-சின்ன
இழையும் சுமையாய் இறுகும்,நாம் செய்யும்
பிழைகள் மலியும் பொழுது.
பொழுது புலருங்கால் பூவின் அரும்பு
தொழுதகை போலே திகழ -அழுததுளி
வெண்பனியாய் மின்ன, வருமே விடியலும்;
கண்பனித்தால் உள்ளே கனல்
கனலெரிய உள்ளே களங்கம் எரியும்
புனலொன்றும் ஊறிப் பெருகும்-அனலேந்தி
ஆடும் அழகன் அருட்கழலை எண்ணியெண்ணிப்
பாடும் பணியே பணி
பணிப்பொன்னில் தூசாய் பரமாநான் உன்னில்
அணியாயா வேனோ அறியேன் -பிணித்தவலை
தள்ளாத என்னையும் தாங்குகிற உன்கருணை
விள்ளாதோ வெய்ய வினை.
வினையென்ப தெல்லாம் விளைவித்தோன் நானே
மனையென்றும் செல்வமென்றும் மேயும்-கனைக்கறவை
பால்கொடுக்கும் என்றாவுன் பட்டி யிலேசேர்த்தாய்
கால்கொடுக்கும் நாளென்றோ கூறு.
கூறிலொரு பெண்கொண்ட கொற்றவா உன்பார்வை
மாறில் ஒருசருகாய் மண்வீழ்வேன் – நூறிலொரு
பங்கும் பயனில்லாப் பேதையை ஆட்கொள்ள
பொங்குமன்பில் நீதொடர்ந்தாய் பின்