புகைப்படத்தை புகைப்படம் எடுத்தவர் இசைக்கவி |
முச்சந்தி நடுவிலொரு மலர்வீழ்ந்த தருணமந்த
மென்காற்று பதறிடாதோ
உச்சரிக்கும் சிறுமழலை ஒலிமிழற்ற வாணியின்
உயிர்வீணை அதிர்ந்திடாதோ
பச்சைமயில் கால்மாற்றி பூந்தோகை விரிக்கையில்
பொன்னம் பலம் மிளிருமே
உச்சம்நான் தொடும்நேரம் உள்ளபடி மலைச்சிகரம்
ஓரங் குலம்வளருமே
அச்சமிலை அழுகையிலை அத்தனைக்கும் ஏற்பாடு
அன்றைக்கே செய்துவைத்தாய்
இச்சையுடன் சிவன்பார்க்க இருவிழிகள் மண்பார்க்கும்
எழிலேயென் அபிராமியே
வீசுமொரு கவரியுடன் விதம்விதமாய் உபசாரம்
விருப்பமுடன் ஏற்றவள் நீ
தேசுசுகனல் ஐந்தினிடை திகழுமருட் கனலாக
தூயதவம் நோற்றவள் நீ
பேசுமருள் வேதங்கள் போயடைய முடியாத
பெற்றியெலாம் சேர்த்தவள் நீ
ஆசையுடன் தொழுகின்ற அடியார்கள் பக்தியின்முன்
ஆர்வமாய்த் தோற்றவள் நீ
ஏசிவரும் பகைவர்முனம் ஏழுலகும் ஆளும்நிலை
யாவும்தரப் பூத்தவள் நீ
ஊசிமுனை பக்தியையும் ஊதிப்பெரி தாக்குகிற
உயிரேயென் அபிராமியே
காடுகரை சேர்ப்பதுவும் காசுபணம் பார்ப்பதுவும்
கடைக்கண்கள் பார்த்ததாலே
மேடுபள்ளம் யாவினிலும் மேலேறி வந்ததுவும்
மாதுமனம் வைத்ததாலே
சூடும்புகழ் யாவையுமே சேருகிற நல்லவிதம்
சுந்தரியாள் தந்ததாலே
தேடும்வினை யாவையுமே தீர்ந்துபொடி யாவதுமுன்
திருக்கோயில் வந்ததாலே
ஏடுபெயர் சொல்லுவதும் மேடைகளில் வெல்லுவதும்
ஈகையென நீதந்ததே
தோடுதனை நிலவாக்கி நாடகங்கள் ஆடவந்த
தோடுதனை நிலவாக்கி நாடகங்கள் ஆடவந்த
தமிழேயென் அபிராமியே