மகர யாழொன்று மீட்டக் கிடைக்கையில்
விரல்கள் ஏனோ வித்தை மறந்தன;
கவிழும் மௌனம் கனன்று கனன்று
சுரங்கள் நடுவே சலன பேதம்;
நொடிகளின் தளர்நடை நீண்டுகொண்டிருக்க
முடிவுறாக் காலம்முனகிக் கடந்தது;
சிகர நுனியில் சீறும் மேகம்
அடிவாரத்தில் புல்வெளித் தாகம்;
கொன்றை செண்பகம் கொஞ்சும் வனத்தில்
நின்று தவித்தது நிலைகொளாத் தனிமை;
துயிலின் விளிம்பில் நழுவும் பொம்மையைப்
பற்றுமுன் சோரும் பிஞ்சு விரல்கள்
பற்றியிழுத்துப் புறப்படுமென்று
அலங்காரத்தேர் அங்கே நின்றது…
இழுத்துப் போர்த்திய இருளை உதற
அழுத இரவு அஞ்சிக் கிடக்க,
வழக்கை ஒத்தி வைக்கிற விதமாய்
கிழக்கே தெரிந்தது கீற்று வெளிச்சம்…