அதேநேரம் அவருடைய சகோதரரின் இரண்டு வயதுக் குழந்தை இலையில் வைக்கப்பட்டிருந்த இனிப்பை எடுத்து வாயில் வைத்தது. அதை ரசித்துப் பார்த்த அந்த நண்பர் “வாழைப்பழம் சாப்பிடலையோ கண்ணா?’என்று இலையில் வைத்திருந்த வாழைப்பழத்தை உரித்து ஊட்டத் தொடங்கினார்.
“அவனுக்கு மட்டும் நைவேத்யம் பண்ணாமலேயே தரேளே”என்று மற்ற குழந்தைகள் ஆட்சேபிக்க,”சும்மாருங்கோ! அவன் குழந்தை.அவன் என்ன வேணும்னாலும் பண்ணலாம்.அவன் சாப்பிட்டா சாமியே சாப்பிட்ட மாதிரி”என்றார்.
மனித வர்க்கத்தில் மட்டுமல்ல.எல்லா உயிரினங்களுக்கும் இந்தச் சலுகை உண்டு. இதற்கு வேதங்களிலோ சாத்திரங்களிலோ நீங்கள் விதிமுறைகளைத் தேடக்கூடாது.இது ஒவ்வோர் உயிருக்குள்ளும் இருக்கும் தாய்மையின் தீர்ப்பு. பறவைக் குஞ்சுகளையும் விலங்குகளின் குட்டிகளையும் காணும் போதெல்லாம் தாயினும் சாலப் பரிகிற மனம் கடவுளின் நீட்சியாய் இயங்குகிறது.
ஜனமேஜயன் சிறுவனாயிருந்த போது தன் தம்பியருடன் வனத்தில் விளையாடப்போன சம்பவம் ஒன்று,முதற்கனலில் வருகிறது. “வேள்வி செய்து விளையாடலாம்”என்று ஜனமேஜயன் சொல்கிறான். பெரியவர்கள் செய்வதை வேடிக்கை பார்க்கும் பிள்ளைகளுக்கு அவற்றை விளையாட்டாகச் செய்து பார்க்கத் தோன்றுவது இயல்பு. குதிரையைக் கட்டிவைத்து அசுவமேத யாகம் நிகழ்த்துவதை வேடிக்கை பார்த்துள்ள அந்தச் சிறுவர்கள் குதிரைக்கு பதிலாக ஏதேனும் விலங்கொன்றைக் கட்டி வைக்க முற்படுகிறார்கள்.
பிறந்து எட்டே நாட்களான நாய்க்குட்டி ஒன்று புதரிலிருந்து தலைநீட்ட அதைக் கட்டி வைத்து பிள்ளைகள் விளையாடத் தொடங்கினர்.”அந்தக் குட்டியை அதன் அன்னை ஷிப்ரதேஜஸ் என்று அழைத்தது”என்கிறார் ஜெயமோகன் விளையாட்டுக் குணம் மிகுந்த அந்த நாய்க்குட்டி,ஆகுதிக்கு வைக்கப்பட்டிருந்த மாமிச வாசனையை உள்வாங்கி,கட்டுகளை விடுவித்து ஓடோடி வந்து மானிறைச்சியை நக்கத் தொடங்கிற்று.
அது சின்னஞ்சிறு குட்டி என்பதையும் மறந்து தர்ப்பையால் அதன் முகத்தில் ஓங்கியறைய,தர்ப்பை முட்கள் கண்களில் குத்த விழியிழந்து ஷிப்ரதேஜஸ் ஓலமிட்டழுதபடி கல்லிலும் முள்ளிலும் தட்டுத் தடுமாறி ஓடியது என்றொரு சம்பவத்தை ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.
அதற்கடுத்து ஜெயமோகன் செய்யும் புனைவு அற்புதமானது. மூலநூலில் இல்லாத காட்சி இது. ஜனமஜேயன் முன்னால் நாய்களின் அதிதேவதையான சரமை வந்து தோன்றுகிறது.ஜனமஜேயனிடம் சரமை சொல்லும் சொற்கள் வாசகனின் உயிரை உலுக்குபவை.
“ஒவ்வோர் உயிருக்கும் அதற்கான மனமும் உடலும் படைப்பு சக்தியால் அளிக்கப்பட்டிருக்கின்றன.அவை ஒவ்வொன்றையும் உணர்ந்து அவையனைத்தும் தங்களுக்கு உகந்தபடி வாழ்வதற்கு வழிசெய்வதே மன்னனின் கடமை.நக்குவது நாயின் இச்சையாகவும் தர்மமாகவும் உள்ளது. அதைச் செய்தமைக்காக நீ அதன் மெல்லிய சிறு கழுத்தையும் மலர்ச்செவிகளையும் வருடி ஆசியளித்திருக்க வேண்டும்.உன் மனம் அதைக் கண்டு தாயின் கனிவை அடைந்திருக்க வேண்டும்.ஆனால் நீ நெறி வழுவினாய் என்றது சரமை.தவறை உணர்ந்த ஜனமஜேயன் எழுந்து கண்ணீருடன் கைகூப்பி நின்றான்.”தவறுக்கான தண்டனையை நீ அனுபவித்தாக வேண்டும்.இந்த விழியிழந்த நாய்போலவே நீ வாழ்நாள் முழுக்க இருப்பாய் என்று சொல்லி சரமை மறைந்தது.”(ப-38)
பொதுவாக இது போன்ற சாபங்கள் எப்படி தொழிற்படுகின்றன என்று விவரிப்பவர்கள் அவன் நாயாக மாறினான் என்பார்கள்.அல்லது அடுத்த நொடியே கண்ணிழந்தான் என்பார்கள். அல்லது சரமையிடம் மன்றாடி பகலெல்லாம் அரசனாகவும் இரவில் மட்டும் கண்ணிழந்த நாயாகவும் மாற சலுகை பெற்றான் என்பார்கள்.ஆனால் இந்த சம்பவத்தை ஜெயமோகன் மேலெடுத்துச் செலுத்தும் விதம் அழகானது.
“கண்ணிழந்த நாயின் பதைப்பை அதன்பின் தன்னுள் என்றும் உணர்ந்து கொண்டேயிருந்தார் ஜனமஜேயன்.தெரியாதவற்றிலும் அறியாதவற்றிலும் முட்டி மோதிச் சரிவதையே தன் வாழ்க்கையாகக் கொண்டிருந்தார்.புரியாதவை எல்லாம் அகத்தில் எத்தனை பெரிதாகின்றன என்று அவர் அறிந்தார்” (ப-38).
“கனவட கிரிமிசை குருகுல மரபினர்
கதைதனை யெழுதிமு டித்த கருத்தினர்” என்கிறார்.
ஆஸ்திகன் கேட்டபடி தட்சனும் அவன் மனைவியும் விடுவிக்கப்பட,தன் வேள்வி நோக்கம் நிறைவேறாமல் ஜனமஜேயன் திகைத்து நிற்க அந்த வேள்விக்கூடத்தில் வியாசரின் ஆணைப்படி வைசம்பாயனர் மகாபாரதத்தை வாசிக்கத் தொடங்குவதாய் ஒரு காட்சியை நிறுவி அதன்வழி கதைக்குள் நுழைகிறது “முதற்கனல்”.நாகங்களின் தலைவனான தட்சனை ஆஸ்திகன் மீட்ட நாளாகிய ஆடி மாத வளர்பிறை ஐந்தாம் நாளே “நாகபஞ்சமி”என்று கொண்டாடப்படுவதாய் “முதற்கனல்” சொல்கிறது.
(தொடரும்)