அவளுக்குள் தூண்டப்பட்ட சுடர் வழியெங்கும் எப்படி விகசித்தது என்பதை ஜெயமோகன்,ஒளிமிகும் உவமை ஒன்றினால் விளக்குகிறார்.
“நெய்விழும் தீப்போல அவ்வப்போது சிவந்தும்,மெல்லத் தணிந்தாடியும்,சுவாலையென எழுந்தும் படகுமூலையில் அவள் அமர்ந்திருக்கையில்,படகு ஒரு நீளமான அகல்விளக்காக ஆகிவிட்டதென்று நிருதன் எண்ணிக் கொண்டான்.இரவு அணைந்தபோது, வானில் எழுந்தபலகோடி விண்மீன்களுடன் அவள் விழியொளியும் கலந்திருந்தது.இரவெல்லாம் அவளுடைய கைவளை குலுங்கும் ஒலியும் மூச்செழுந்தடங்கும் ஒலியும் கேட்டுக் கொண்டிருந்தன.பகலொளி விரிந்தபோது சூரியனுடன் சேர்ந்து படகின் கிழக்கு முனையில் உதித்தெழுந்தாள்”.(ப-153)
முன்னர் இதே படகில் பிரபஞ்சத்தால் கைவிடப்பட்ட கோள்போல் இருந்த அம்பை ,இப்போது பிரபஞ்சத்தின் ஒவ்வோர் அசைவிலும் அங்கமாயிருந்து தனக்குள் அந்த இரவில் அபரிமிதமான சக்தியை சேமித்திருக்கக் கூடும்.பிரபஞ்சம் அவளுக்குள் இறக்கியிருந்த அபரிமிதமான சக்தி அவளை அடுத்த பரிணாமத்திற்கு தயார்படுத்தியிருக்க வேண்டும்.
அம்பை வருவதை முன்கூட்டியே அறிந்திருந்த பீஷ்மர்,தன் கைகளில் ஓர் ஒளிவாளை ஏந்தி அதன் கருக்கை வருடியபடியே அமர்ந்திருந்தார் என்கிறது முதற்கனல்.ஆயினும் அம்பையின் கூரிய ஆயுதங்களுக்கு முன்ர் அவர் நிராயுதபாணியாய் நிற்பதை அடுத்தடுத்த காட்சிகள் காட்டுகின்றன.
தன் மனதிலிருப்பதை அம்பை சொல்லும் முன்னரே மெல்லிய நடுக்கத்திற்கு ஆளாகும் பீஷ்மர்,உரையாடத் தொடங்குகையில் தடுமாறும் இடங்கள் பீஷ்மர் என்னும் ஆளுமையை நிறைகுறைகளுடன் அறிந்து கொள்ளப் பெரிதும் பயன்படுகிறது.
“நான் வந்தது உங்களைத் தேடி” என அம்பை பகிரங்கமாகப் பேசத் தொடங்கும் நொடியிலிருந்தே எப்படியாவது தப்பித்துச் செல்ல முடியுமா என பீஷ்மர் தடுமாறுகிறார்.
“வேட்டை நாய்முன் சிக்கிக் கொண்ட முயல்போல பீஷ்மர் அச்சத்தில் சிலிர்த்து அசைவிழந்து நின்றார்”.(ப-155)
ஒரு நீண்ட இரவு அம்பைக்கு சுயம்வர மண்டபத்தில் நிகழ்ந்தவற்றை மீண்டும் மனதில் ஓடவிட்டுப் பார்க்கும் அவகாசத்தைத் தந்திருந்தது போலும்! எல்லா முனைகளிலிருந்தும் அவளுடைய சரமாரி தாக்குதல்கள் பீஷ்மரை உலுக்கத் தொடங்கின.
அம்பை-பீஷ்மர் உரையாடல் மிகவும் சுவையான பகுதி. ஆனால் முதற்கனல் முன்னிறுத்தும் உரையாடல் பீஷ்மரின் தடுமாற்றமும் முரண்பட்ட சொற்களும் அவர் மேற்கொண்ட விரதம் திணிக்கப்பட்டதுதானோ என்னும் கேள்வி பலப்படுகிறது.
பொதுவாக தலைமைப் பாத்திரங்களின் தடுமாற்றங்களை காவியகர்த்தா திரைபோட்டு மறைக்க முற்படுவதுண்டு. சில நேரங்களில் அந்தத் திரை காற்றில் அசைந்தேனும் அந்தப் பாத்திரத்தின் அந்தரங்கத்தை காட்டிக் கொடுத்துவிடும்.
இராமகாதையில், சூர்ப்பநகை-இராமன் உரையாடலின்போது இராமனின் தரப்பில் சின்னஞ்சிறிய சறுக்கல் ஒன்று நிகழும்.
“என்னைக் கிழித்துப் பார்க்கும் பெண்ணருகே என்னால் வாழ முடியாது.எனக்குத் தேவையானவள் ஒரு பேதை.நான் கண்ணயர விழைவது ஒரு பஞ்சு மெத்தையில்,கூரிய அம்புகளின் நுனியில் அல்ல”.
மகாபாரதத்தில் முனிவர்களே இல்லறத்தில் இயல்பாக ஈடுபட்டும், “பிள்ளைவரம்” கொடுத்தும் காவியத்தை நடத்த பீஷ்மர் வலிந்தேற்ற பிரமச்சர்யம், அவரை வாழ்நாள் முழுவதும் அம்புப் படுக்கையில்தான் கிடத்தியிருந்ததோ என்னும் எண்ணத்தை முதற்கனல் ஏற்படுத்துகிறது.