பாரதியார் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக இருந்த நேரம்.பல்கலைக்கழகம் சார்பில் அண்ணா நூற்றாண்டு விழாவிற்கான பதிப்புக் குழுவில் முக்கியப் பொறுப்பில் இருந்தேன்.
அண்ணாவுடன் பழகியவர்கள் சிலரை நேரில் சந்தித்து அவர்கள் நினைவலைகளைப் பகிரச் செய்யும் நோக்கில் நான் சந்தித்த சிலரில் முக்கியமானவர் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்.
தொலைபேசியில் இரண்டுமுறை தொடர்பு கொண்டபோது “எழுதியனுப்புகிறேன் தம்பி”என்றார்.நினைவூட்டலுக்காக மீண்டும் அழைத்த போது அவர் துணைவியார்,”அவரு எங்கேங்க எழுதி அனுப்பப் போறாரு?நீங்க நேரில வந்து வாங்கீட்டுப் போயிடுங்க” என்றார்..
வீட்டின் பெயரே அண்ணா இல்லம் .மாடியில் எஸ்.எஸ்.ஆர். பட்டுச் சட்டையும் லுங்கியுமாக இருந்தார். லுங்கி தெரியாமல் சட்டை மட்டும் தெரியும் விதமாய் அவரை ஏதோ தொலைக்காட்சியினர் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தனர்.
கே.பி.எஸ். பற்றிய பேட்டி.”நான் சின்னப்பையனா இருந்தப்ப நாடகத்தில நடிப்பேன்.பக்கத்துல அம்மா வீடு இருக்கும். என்னை மாதிரி பொடியனை எல்லாம் கூப்பிட்டு, “நாடகக் கொட்டகை சூடு அதிகம்” னு சொல்லி எண்ணெய் தேய்ச்சு விடுவாங்க” என்று தொடங்கி அம்மையார் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.
பேட்டியை முடித்தவர்கள் புறப்பட்டுப் போக,அவருடைய துணைவியார் என்னை அறிமுகம் செய்தார். நீண்ட நேரம் என்னை படப்பிடிப்புக் குழுவில் ஒருவனாகவே கருதி பேசிக் கொண்டிருந்தவர் ,பல்கலைக்கழகம்.அண்ணா நூற்றாண்டு என்று துண்டு துண்டாய் நினைவுபடுத்த, “இப்போ டயர்டா இருக்கேனே தம்பி! எழுதி அனுப்பீடவா?”என்று கேட்க அவர் துணைவியார் “இப்ப விட்டால் எப்பவுமில்லை” என்பது போல் சைகை செய்தார்.
நான் கிளம்புவதாகச் சொல்லி எழுந்து கொண்டே,”அய்யா! ஒரே ஒரு கேள்வி ” என்றேன்.”என்ன” என்பதுபோல் தலையசைத்தார்.
“கலையுலகத்தில் எவ்வளவோ பேர் திராவிட இயக்கத்துல இருந்தாலும் ஒங்க அளவுக்கு அண்ணாவை நேசிச்சவங்க யாருமில்லைன்னு சொல்றாங்க! அது எதனால?” என்றேன்.
சில விநாடிகள் உற்றுப் பார்த்தவர்,”ஒக்காருங்க” என்றார். அவ்வளவுதான் .அந்த சின்னத் தூண்டிலில் திமிங்கிலம் மாட்டிக் கொண்டது.அந்த உணர்ச்சியமயமான,உண்மையான தொண்டன் தன் தலைவன் பற்றிப் பேசத் தொடங்கிய அற்புதமான தருணம் அது.
“அண்ணாவை என் காரிலே கூட்டிகிட்டு வெளியூர் நிகழ்ச்சிகளுக்குப் போவேன். நள்ளிரவில எங்காவது நாடகம் நடக்கும்.என்னை காரிலேயே இருக்க சொல்லீட்டு அண்ணா முண்டாசு கட்டிகிட்டு நாடகம் பார்க்கப் போயிடுவார். சில இடங்களிலே அடையாளம் கண்டு பிடிச்சு மேடையேத்திடுவாங்க”என்று தொடங்கி பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அண்ணாவின் 50 ஆவது பிறந்த நாளுக்கு எஸ்.எஸ்.ஆர். 50 பவுன் தங்கம் தந்தது பற்றி பேச்சு திரும்பியது. கவியரசு கண்ணதாசன் அப்போது திமுகவில் இருந்தார்.
“செம்பொன் மணியாரத்தொடு
செல்வம் பல தரலாம்
தம்பிப் படை யாவும் பல
தங்கத் திரள் தரலாம்
நம்பித் தமிழ் முறைபாடிடும்
நலமே நிறை அண்ணன்
தெம்புக்கது குறைவே-அவர்
திறனுக்கது சிறிதே”
என்று அந்த சம்பவத்தைப் பாடியிருந்தார் கவிஞர்.அதைப் பற்றிக் கேட்டேன். ”அதைவிட எனக்கு மறக்க முடியாதது அண்ணாவோட 51ஆவது பிறந்த நாள்தான்.
விழாவில அண்ணாவுக்கு 51 பொருட்கள் வழங்கறதா அறிவிச்சிருந்தேன்.பேராசிரியர்தான் தலைமை தாங்கினார்.
வேட்டி சட்டை துண்டு மேசை நாற்காலி கண்ணாடி, வெள்ளியில மூக்குப்பொடி டப்பான்னு ஒவ்வொரு பொருளா மேடைக்குக் கொண்டு வரச் செய்தேன். பேராசிரியர் எண்ணிப் பார்த்துட்டு”என்ன இராஜேந்திரன்! 50 பொருட்கள் தான் இருக்கு,51 இல்லையே”ன்னு கேட்டார். உடனே என் சட்டைப்பையில் இருந்து ஒரு சீட்டை எடுத்துக் கொடுத்தேன்.
அதில 51ன்னு நம்பர் போட்டு “என் உயிர்” னு எழுதியிருந்தேன்.அண்ணா “ஓ”ன்னு அழுதுட்டார். ஏற்புரை கூட பேச முடியாம தழுதழுத்தார்.”என்றார்.
சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு,”அண்ணா மரணம் என்னை ரொம்ப பாதிச்சுடுச்சு.இறுதி ஊர்வலத்தில மயங்கி விழுந்துட்டேன். அதுக்கப்புறமும் தினம் அந்த வருத்தத்துல குடிச்சுட்டு அண்ணா சமாதியில போய் விழுந்து கிடப்பேன். உடம்பு சரியில்லாமல் போய் மருத்துவமனையில சேர்த்துட்டாங்க. வயசான ஒருத்தர் என்னைப் பார்க்க வந்தார்.
வந்தவர்,’ராஜேந்திரன்! ஒங்க வயசென்ன என் வயசென்ன? நான் மருத்துவமனையில இருக்கறப்ப நீங்க வந்து பார்க்கணும்.இப்போ நான் வந்து ஒங்களைப் பார்க்கிறேன்.இது சரியா”ன்னு கேட்டார். அவர்தான் தந்தை பெரியார் ” என்றார் எஸ்.எஸ்.ஆர்.
கனத்தஃபிரேமுக்குள் கனிந்திருந்த அந்தக் கண்களில் ஓராயிரம் உணர்ச்சி மின்னல்கள்.தேநீர் பருகிக் கொண்டே எம்.ஜி.ஆர்.,சிவாஜி பற்றி பேசிக் கொண்டிருந்தோம்
“நான் 62 லே தேர்தலில நிக்கறதா அறிவிப்பு வந்தபோது பல நடிகர்கள் பாராட்ட வீட்டுக்கு வந்தாங்க. சிவாஜியும் வந்தார் . எல்லாரும் போனதுக்கப்புறம் தனியா அறைக்குள்ளே கூட்டீட்டு போய் “ஏன்யா! ஒனக்கு அறிவிருக்கா’ன்னு கேட்டார். ஏன் அண்ணே” னு கேட்டேன். “இப்போதான் ஒனக்கு நிறைய படம் வருது.நம்ம காம்பினேஷனும் ரொம்ப நல்லா இருக்கு.இப்போ நீ எம் எல் ஏ ஆகலைன்னு யார் அழுதா? தொழிலைப் பார்ப்பியா..அத வுட்டுட்டு”ன்னு சத்தம் போட்டார்.
எம்.ஜி.ஆருக்கு என் மேல ரொம்ப பிரியம்”ராஜு!ராஜு!”ன்னு உரிமையாப் பழகுவார்.ஒருமுறை அவர் முதலமைச்சரா இருக்கறப்போ ஒரு கூட்டத்துல அமைச்சர் ராஜாராம், “இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் எப்பவும் இளமையா இருக்காரே!அந்த ரகசியம் என்ன”ன்னு கேட்டார்.எம்.ஜி.ஆர். “அதை நான் பேசறப்ப சொல்றேன்.நீங்க உட்காருங்க”ன்னு சொல்லீட்டார்.
அப்புறம் பேசும்போது சொன்னார்.”தம்பி ராஜுக்கு ரொம்ப திறந்த மனசு.எதையும் மனசுல வைச்சுக்கத் தெரியாது. நீங்க ராத்திரி ஒரு மணிக்கு அவரை ஃபோன்லே கூப்பிட்டு ஒரு தகவலை சொல்லி,”தம்பீ! இது ரொம்ப ரகசியம்”னு சொல்லுங்க..அந்த நேரத்திலேயும் நாலு பேரையாவது எழுப்பி சொல்லீட்டுதான் தூங்குவார்னாரு பாருங்க!ஒரே அப்ளாஸ்” என்று குழந்தை போல் எஸ்.எஸ்.ஆர் குதூகலித்தது நேற்று நிகழ்ந்ததுபோல் நெஞ்சில் நிற்கிறது.
அந்த நேர்காணல்,பாரதியார் பல்கலைக்கழகம் வெளியிட்ட “அறிஞர் அண்ணா நினைவலைகள் நூலில் உள்ளது.
சென்னை செல்லும்போதெல்லாம் அவரை மீண்டும் பார்த்து வரத் தோன்றும்.ஏதேதோ காரணங்களால் தட்டிப் போய் விட்டது.இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்.அவர்களுக்கு என் இதயம் நெகிழ்ந்த அஞ்சலி