தேர்ந்த தமிழறிஞரும்,ரசிகமணி டி.கே.சி. அவர்களின் அணுக்கச் சீடருமான வித்வான் ல.சண்முகசுந்தரம் சென்னையில் மறைந்தார். அவருக்கு வயது 94. தன் குருநாதரைப் போலவே மாபெரும் ரசிகராய் வாழ்வாங்கு வாழ்ந்த அவர் பல நூல்களை எழுதியுள்ளார். சாகித்ய அகாதெமிக்காக ரசிகமணி வாழ்வு குறித்து எழுதிய நூல் முக்கியமானது.

ரசிகமணி பாணியில் செய்யுட்களை இசையுடன் பாடி விவரிக்கும் இவரின் பாணி வித்தியாசமானது.கோவை திரு.ரவீந்திரன் அவர்கள் ஏழெட்டு ஆண்டுகள் முன்னர் கோவையில் ஓர் ஒலிப்பதிவுக் கூடத்தில் அவரை அழைத்துச் சென்று 7-8 மணி நேரங்கள் ஒலிப்பதிவு செய்தார்.

மூதறிஞர் ராஜாஜி போன்றவர்களுடன் நெருங்கிப் பழகியவர் இவர். ஒருமுறை டி.கே.சி. இல்லத்தில் இருவரும் தங்கியிருந்தனர்.விடியலில் எழுந்த ல.ச. ராஜாஜி விழித்துவிடக் கூடாதென்பதால் ஓசையில்லாமல் பின்பக்கம் போயிருக்கிறார். திரும்ப வரும்போது ராஜாஜி,தன் படுக்கையையும், லச.வின் படுக்கையையும் கர்மசிரத்தையாய் மடித்து வைத்தாராம்.

ஒருமுறை பெருந்தலைவர் காமராஜரை பார்க்கப் போனாராம் ல.ச. அப்போது அவர் முதலமைச்சர். வாசலில் ஒரேயொரு காவலர்.இவரைக் கண்டதும், “புலவரா!! வாங்க வாங்க! வைரவா புலவருக்கு மோர் கொண்டா!” என்று உபசரித்து வந்த விஷயத்தை விசாரித்திருக்கிறார்.

“அய்யா! தென்காசியில திருவள்ளுவர் கழகம் வைச்சிருக்கோம்.ஆண்டு விழா வருது!”

“சரி!”

“நீங்க வந்து தலைமை தாங்கிப் பேசணும்”

சொல்லி வாய் மூடும் முன் காமராஜர் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார்.
“புலவரே! திருக்குறளைப் பத்தி நீங்கல்லாம் பேசி நான் கேட்கறதா, நான் பேசி நீங்க எல்லாம் கேட்கறதா! நல்ல கூத்தா இருக்கே!”

93 வயதில் தலையில்நடந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகும்,திடகாத்திரமாகவும்  உற்சாகமாகவும் இருந்தவர்,திரு.ரவீந்திரன் இல்லத் திருமணத்திற்கு மார்ச் 15 விமானத்திலேயே வருவதாக உறுதியளித்திருந்தார். இந்நிலையில் மார்ச் 24 நள்ளிரவில் தூக்கத்திலேயே மறைந்தார்.

தமிழும் தாவரமும், வாழையடி வாழை உள்ளிட்ட ஏராளமான புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்தும் எப்போ  வருவாரோ தொடர் நிகழ்வில் திரு.ம. கிருஷ்ணன் ” ஞானச்செம்மல்” விருது வழங்கிச் சிறப்பித்தார்.

ல.ச. என்றாலே வாய் கொள்ளாச் சிரிப்பும் வெற்றிலை மணக்கும் பேச்சும் நிபந்தனையில்லாத அன்பும் நினைவிலே நிற்கும்.அவர் புகழ் வாழ்க

ல.ச. அவர்களுடன் திரு.ரவீந்திரன்

http://nagapattinam.tnopac.gov.in/cgi-bin/koha/opac-search.pl?q=au:%E0%AE%B2.%20%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *