குடுகுடு எனவந்து நீட்டுகிறாள்
கவலை கொஞ்சம் படிந்தாலும்-அவள்
கைகளில் அள்ளித் தேற்றுகிறாள்
“துவள வேண்டாம் எப்போதும்-நல்ல
துணை நான்” என்று காட்டுகிறாள்
சாக்த நெறியாம் வழிபாடாம்-அந்த
சாத்திரமேதும் நானறியேன்
வேர்த்த நொடியினில் விசிறுகிறாள்- எந்த
விரதம் இருந்தினி நான்துதிப்பேன்?
“காத்திடல் என்பணி” என்றுரைக்கும்-அவள்
காருண்யம் நிறைந்தது; போதாதா?
பூத்திடும் புன்னகை ஒளிதந்தாள்- இனி
பொல்லா வினைகள் ஓடாதா
மேரு சக்கரம் தனிலெல்லாம் -பல
மேலோர் அவளை தருவிப்பார்
யாரும் அறியாக் கணங்களிலே -அவள்
என்மனக் குப்பையில் ஒளிந்திருப்பாள்
வேரும் நீரும் தானானாள்-இனி
விளைச்சலுக் கிங்கே என்ன குறை
பாரும் வானும் பதைபதைக்க -இங்கே
பகடை என்னுடன் உருட்டுகிறாள்
அடுப்பில் சமையல் பார்த்தபடி-பிள்ளை
அழுகையைஅமர்த்தும் கைகாரி
இடுப்பில் என்னைச் சுமந்தபடி -அட
எத்தனை லோகங்கள் ஆளுகிறாள்
முடிப்பாள் வினைகளை முற்றாக -அதை
முடிக்கும் வேலையும் எனக்கில்லை
கடப்பாள் என்கடல் படகாக-இனி
கடந்திட மற்றொரு கடலுமில்லை