ராட்சச அதிர்வின் எதிரொலியாய்
ஆணவத்தால் கயிலாயத்தை
அசைத்தவன் சிக்கிய அழுகையாய்
மாளிகை தன்னில் மண்டோதரியின்
மஞ்சத்தில் எழுகிற விசும்பலாய்
அபசுரம் கூட அழகாய் ஒலிக்கும்
அசுர சாதக அதிர்ச்சியாய்
தபத்தில் கிடைத்த தனிப்பெரும் வரத்தால்
தருக்கித் திரியும் தலைக்கனமாய்
விபத்துப் போல வீசிய காற்றில்
விதிர்க்கும் நரம்பில் வரும் இசையாய்
கனத்த மகுடத்தைகழற்ற மறுத்து
சயனத்தில் தவிக்கும் சங்கடமாய்
மாயமான்களின் உற்பத்திச் சாலையில்
மாரீசன்களின் அலறல்களாய்
பாயப்போவதாய் பலமுறை சீறி
பதுங்கி ஒதுங்கும் புலிப்பொம்மையாய்
தேய்மானத்தின் தனி ஒலியாய்
தேதிகள் கிழிபடும் தாளமாய்
பாயும் அகந்தையின் பேரொலியாய்
பாடி முடிந்த பரணியாய்
ஆழ்ந்த தூக்கம் அடிக்கடி கலையும்
அதிர்ச்சியின் மெல்லிய அலறலாய்
சேர்ந்த இடத்தின் சிறுமைகளாலே
சிதைந்த மனதின் சிணுங்கலாய்
வீழ்ந்த அதிர்ச்சியை மறைத்திட எண்ணி
வீறிடும் வெறியின் மனநோயாய்
தேர்ந்த நடிகனின் ஒப்பனை கலைகையில்
தேம்பி அழுகிற மனக்குரலாய்…
வீணைகள் வழங்கிய உருவகங்களை
வகைபிரித்து வரிசையில் அடுக்கினேன்
கானல் நதியின் சலசலப்பொன்று
காதில் விழுந்ததே …கேட்டதா உமக்கும்?