+2 தேர்வு  முடிவுகள் வெளிவந்ததுமே பெற்றோர்களும் மணவர்களும் கூட்டணி அமைத்து உடனடியாக செய்ய வேண்டிய செயல்கள் சில உண்டு.

1) வருகிற தேர்வு முடிவுகளை மனதார ஏற்றுக் கொள்ளுங்கள்.மிக மிக அரிதாக,மறு மதிப்பீட்டுக்கு தேவையான சூழல் ஏற்படக்கூடிய மிகச்சிலரைத் தவிர மற்றவர்கள் “இப்படி வந்திருக்கலாமே,அப்படி வந்திருக்கலாமே” என்பது போன்ற வீண் விவாதங்களையும் பதட்டங்களையும் தவிர்த்து விடுங்கள்.

2) குடும்பத்துடன் அமர்ந்து சில நிமிடங்கள் கண்மூடி பிரார்த்தனை செய்யுங்கள். முன்னதாகவே கல்லூரி விண்ணப்பங்களை வாங்கி வைத்திருப்பீர்கள். இப்போது மதிப்பெண்கள் அடிப்படையில் உங்கள் விருப்பக் கல்லூரிகளை இடம் கிடைப்பதற்கான சாத்தியக்கூற்றின் அடிப்படையில் ஒன்று இரண்டு மூன்று என வரிசைப்படுத்தி அனுமதி பெறுவதற்கான முதல் சுற்று முயற்சிகளுக்கு ஆயத்தமாக்குங்கள்.

3) இதில் இடையூறாக இருக்கக் கூடியவை உறவினர்கள் மற்றும் நண்பர்களின் தொலைபேசி/அலைபேசி அழைப்புகள்தான். இந்த அழைப்புகள் ஒவ்வொன்றுக்கும் நீங்கள் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் நேரமும் சக்தியும் வீணாகும்.’இவ்வளவு மதிப்பெண்கள் தானா ‘ என்பது போன்ற சிலரின் இங்கிதமில்லாத வினவுதல்கள் உற்சாகம் குறையச் செய்யும். இதற்கு ஒரே வழிதான் இருக்கிறது. உங்கள் தொலைபேசி/அலைபேசிகளின் ஆன்ஸரிங் மெஷினை பயன்படுத்துங்கள். “வணக்கம். எங்கள் மகன்/மகள் +2 தேர்வுகளில் வெற்றிகரமாக தேறியிருக்கிறார்.______ மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்த மதிப்பெண்கள் எங்களுக்கு மிகுந்த மனநிறைவு தருகிறது. கல்லூரி சேர்க்கைக்கான வேலைகளில் இப்போதே இறங்கிவிட்டோம். விரைவில் நல்ல செய்தியுடன் தொடர்பு கொள்கிறோம். எங்கள் குழந்தைக்கு உங்கள் அன்பும் ஆசியும் என்றும் தேவை” என்று ஒலிப்பதிவு செய்து வைத்துவிடுங்கள். ஒவ்வொரு தொலைபேசிக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

4) வெற்றி வாய்ப்பை இழந்த குழந்தைகளையும் இதே நிதானத்துடன் கையாளுங்கள். அடுத்தது என்ன (What Next Attitude)  என்னும் அணுகுமுறையை பின்பற்றுங்கள். உதாரணமாக ஒரு நல்ல டூட்டோரியலில் சேர்ப்பது பற்றி குழந்தையுடன் கலந்து பேசுங்கள்.உங்கள் குழந்தையின் வகுப்பில் யாரும் தோல்வியுற்றிருந்தால் அந்தக் குழந்தையை தோல்வியின் விரக்தியிலிருந்து விரைவில் மீட்க இது போன்ற ஆலோசனைகளை அவர்களின் பெற்றோர்களுக்குக் கொடுங்கள்

5)  குழந்தையின் மேல்படிப்பு பற்றி யாரிடம் வேண்டுமானாலும் ஆலோசனை கேளுங்கள். ஆனால் மற்றவர்கள் முடிவெடுக்க அனுமதிக்காதீர்கள். ஒரு கட்டத்துக்கு மேல் குழந்தைகளின் விருப்பங்களுக்கும் தீர்மானங்களுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்

6) தேர்வின் வெற்றி தோல்வி,வாழ்வின் வெற்றி தோல்வியை ஒருபோதும் நிர்ணயிக்காது. எனவே குழந்தையின் மனவுறுதி ,உணர்வு நலம் போன்றவற்றை முக்கியமாகக் கருதி செயல்படுங்கள். தேர்வின் முடிவு எப்படியாயினும் நீங்கள் உங்கள் குழந்தைமேல் நிபந்தனையில்லா அன்பும் ஆதரவும் செலுத்துவதை உணரும் விதமாய் நடந்து கொள்ளுங்கள்..

வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *