உன்னதம் அவள்தான் செய்வாள்
ஒருவில் தெரியும் செங்கரும்பில்-அதில்
ஒருகணை அவள்தான் எய்வாள்
ஒருகண் தெரியும் திருநுதலில்-அதில்
உறுகனல் வினைமேல் பெய்வாள்
குவியும் மாலைகள் நடுவினிலே-அவள்
குளிர்முகம் குறும்பாய் சிரிக்கும்
தவங்கள் எத்தனை செய்தோமோ-அவள்
திருமுன் எல்லாம் பலிக்கும்
கவலைக் குமிழ்கள் எல்லாமே- அவள்
கடைவிழி பட்டுத் தெறிக்கும்
சிவனின் கண்டம் பதிந்தவிரல்-வரும்
ஜென்மத் தொடர்ச்சிகள் அறுக்கும்
கடவூர் வீதிகள் அனைத்திலுமே -அவள்
கால்கள் பதித்து நடந்தாள்
தொடரும் சலங்கை ஒலியாக -நம்
திசைகள் அனைத்தையும் அளந்தாள்
இடர்களின் சுமையில் திணறுகையில்-அவள்
இருதோள் பலமென எழுந்தாள்
முடிவில்லாத கதைகளுக்கோ -அவள்
முற்றுப் புள்ளியாய் மலர்ந்தாள்
ஆலய மணியின் அதிர்வலைகள் -அவள்
அழகிய மலர்ப்பதம் தேடும்
கோலக் குங்கும கதகதப்பில் -நம்
குழப்பங்கள் எல்லாம் தீரும்
வாலைத் திருவுரு அபிராமி -அவள்
வாசலில் நம்முயிர் வாழும்
நீலியின் மர்மப் புன்னகையில் -இந்த
நிகழ்கணம் நிகழ்ந்திடலாகும்