வந்தவர் போனவர் வகைதெரியாமல்
சொந்தம் பகையின் சுவடறியாமல்
சந்தடி ஓசைகள் சிறிதுமில்லாமல்
செந்துர ஒளியாய் சந்திரப் பிழிவாய்……
அந்தக் கனவில் அவள்மட்டும் இருந்தாள்
செந்நிறப் பட்டில் சூரிய ஜரிகை
கண்கள் மூன்றினில் கனிகிற மழலை
பொன்னொளிர் திருவடி பொலிகிற சலங்கை
தன்னிழல் மடியிலும் தாய்மை ததும்ப..
அந்தக் கனவில் அவள்மட்டும் இருந்தாள்
ஏதுமில்லாத ஏக்கத்தின் முடிவாய்
பாதையில்லாத பயணத்தின் தெளிவாய்
பேதமில்லாத பார்வையின் கனிவாய்
வேதம்சொல்லாத விடைகளின் வடிவாய்..
அந்தக் கனவில் அவள்மட்டும் இருந்தாள்
தொடரும் பிறவிகள் தொடக்கமும் காட்டி
படரும் வினைகளின் பெருவலி ஊட்டி
சுடரும் ஒளியிலென் சூழிருள் மாற்றி
கடிய துயர்தரும் காயங்கள் ஆற்றி…
அந்தக் கனவில் அவள்மட்டும் இருந்தாள்
வாழ்வொரு கனவென விளங்கும் வரைக்கும்
தாழ்வுகள் உயர்வுகள் தாண்டும் வரைக்கும்
சூழும் துணையாய் சிவந்தெழு கனலாய்
ஊழினை உதைக்க உயரும் பதமாய்..
அந்தக் கனவில் அவள்மட்டும் இருந்தாள்
விரிசூலத்திலும் விசிறிகள் செய்து
வரும்வழி யெங்கும் வான்மழை பெய்து
திரிபுரை எனக்கென தயவுகள் செய்து
வருந்துயரெல்லாம் வேருடன் கொய்து..
அந்தக் கனவில் அவள்மட்டும் இருந்தாள்
நானாய் எதையும் நிகழ்த்தவும் இல்லை
தானாய் குருவைத் தேடவும் இல்லை
ஆனால் அனைத்தும் அவளே அளித்து
வானாய் விரிந்து, வயலிலும் முளைத்து..
அந்தக் கனவில் அவள்மட்டும் இருந்தாள்