அகரம் எனும் எழுத்தில்தான் அனைத்தும் ஆரம்பம். சரியாகச் சொல்வதெனில் “அ” எனும் ஒலியில்தான் அனைத்தும் ஆரம்பம். பிரபஞ்சத்தின் மூலஒலியென மதிக்கப்படுவது பிரணவம். அதன் முதல் பகுதி அகரம்.இந்த விளக்கத்தில் இறங்கினால் அது வேறெங்கோ கொண்டு நிறுத்தும்.அதுவல்ல நான் சொல்ல வந்தது.
அ
எனும் எழுத்தின் போக்கினை கவனித்தால் அது வாழ்வியல் உண்மையின் வெளிப்பாடாக இருப்பதை உணரலாம்.
0
என சுழித்து மேல்நோக்கிக் கிளம்பும் எழுத்து கீழிறங்குகிறது. பின்னர் மேலெழும்பி வலது புறமாய் திசைமாறி செல்கிறது. அப்புறம் ஒரு நேர்க்கோட்டில் போய் இணைகிறது. ஒரு மனிதன் ,தானே எல்லாமென்று தருக்கி எழுவதும்,பின்னர் ஆணவத்தால் கீழே விழுவதும் நடக்கிறது,
பின்னர் உந்தி மேலெழுகிறான். இப்போது வாழ்க்கை தந்த பக்குவம் அவனை வழி நடத்துகிறது.தன் சுய விருப்பம்,சுயநலம் என்பதை விட்டு எது உண்மை என்னும் பேருண்மையை நோக்கி தன் தேடலைத் தொடங்குகிறான். உண்மைகளுக்கெல்லாம் பேருண்மையாய் நிற்கும்இறைவனே எல்லாம் என்பதை உணர்ந்து இறைநெறியில் சென்று சேர்கிறான்.
தானற்றுப் போதல் எனும் பணிவுக்கும், உண்மையைத் தேடும் தெளிவுக்கும்,
அகரமெனும் எழுத்தே இலக்கணம்.
அனைத்திற்கும் மூலமும் முதலும் ஆதிப் பரம்பொருளே என்பதை உணர்த்துவதே அகரம் முதலாய எழுத்துகள். இந்த உண்மையை உணர்வதே கற்றதனால் ஆய பயன்!!