திருவாசகத்தில் பெரும்பாலானவர்களுக்கு நன்கு தெரிந்த பகுதி,சிவபுராணம். அதில் ஒரு வரி,”வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே”.இந்த வாக்கியம் முருகனுக்கும் முருகன் கை வேலுக்கும் மிகப்பொருத்தம்.வேதங்களுக்கு அப்பாற்பட்டவன் அவன் என்பதால் “சுப்ரமண்யோஹம்” என மும்முறை விளித்து வணங்கின. அவன்கை வேல்,ஆழ்ந்தது.அகன்றது.நுண்ணியது.
வேலின் வீர தீரபராக்கிரமங்கள் எவ்வளவோ. அவை அனைத்திலும் மேம்பட்டது ஒவ்வொரு பக்தருக்கும் உடன்வரும் துணையாய் வேல் திகழ்கிறது என்பதை அருளாளர்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்துவதுதான்.
கடலை வற்ற வைத்தவேல், கிரௌஞ்ச மலையைப் பிளந்த வேல், மாமரத்தைப் பிளந்த வேல் என்பனவெல்லாம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஓவ்வொருபக்தனையும் காக்க அது ஓடோடி வருகிறது என்பதுதான்.
அருணகிரிநாதரின் வேல்வகுப்பு இதனை விரிவாகப் பேசுகிறது.
“துதிக்கும் அடியவர்க்கு ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
குலத்தை முதலறக் களையும் எனக்கோர் துணையாகும்”
‘சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை அறுத்தெறிய உறுக்கியெழும் அறத்தை நிலை காணும்”
“தனித்து வழிநடக்கும் எனதிடத்தும் ஒரு வலத்தும் இரு புறத்து
அருகடுத்து இரவு பகல் துணை அது ஆகும்”
என்பன அருனகிரியாரின் அனுபவ வாக்குகள்.
“பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே” என்கிறார் அவர்.
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல்-வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை
என்கிறார் நக்கீரர்.
இவற்றின் பின்புலத்தில் வந்ததே “வேலும் மயிலும் துணை” எனும் மந்திர வாசகம்.”வெற்றிவேல்! வீரவேல்!” எனும் வீர முழக்கம்.”சுற்றி நில்லாதே பகையே போ துள்ளி வருகுது வேல்” என்றான் மகாகவி பாரதி.
இந்த அடிப்படையிலேயே கவச நூல்களின் மகிமையை நாம் அவதானிக்க வேண்டும்.ஶ்ரீமத் பாலதேவராய சுவாமிகளின் கந்தர் சஷ்டி கவசம்,ஶ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் ஷண்முக கவசம், இந்த உறுதிப்பாட்டில் முகிழ்த்த வாக்குகள். பாராயணத்திற்குரிய மந்திரச் சொற்கள்.
ஓங்கிய சீற்றமே கொண்டு உவனிவில் வேல் சூலங்கள்
தாங்கிய தண்டம் எஃகம் தடிபரசு ஈட்டி யாதி
பாங்குடை ஆயுதங்கள் பகைவர் என் மேலே ஓச்சின்
தீங்கு செய்யாமல் என்னைத் திருக்கைவேல் காக்க காக்க
என்கிறார் ஶ்ரீமத் பாம்பன் சுவாமிகள்.
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகளி ரண்டும் கருணைவேல் காக்க
முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க
எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வதனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க
என்னும் ஶ்ரீமத் தேவராய சுவாமிகளின் வாக்கினை அறியாத முருக பக்தர்கள் இல்லை.
இறைவன் ஆணையேற்று காற்றினும் கடுகி வந்து கந்தனின் கைவேல் காக்கும் என்னும் உறுதி பக்தர்களுக்கு மாபெரும் நெஞ்சுரத்தை வழங்க வல்லன.
வேல், கருணையின் திருவுருவம். சூரனின் அகந்தையை அழித்து மயிலாகவும் சேவலாகவும் வந்த அவனை முருகப் பெருமானின் வாகனமாகவும் கொடியாகவும் ஆக்குவித்ததில் வேலுக்கும் பங்குண்டு.
எனவேதான் முருகப்பெருமானுக்கிருக்கும் நாமாவளிகள் போலவே வேலுக்கும் எத்தனையெத்தனை பெயர்கள். கந்தவேல், முருகவேல், ரத்னவேல்,வஜ்ரவேல்,பழனிவேல்…அடுக்கிக் கொண்டே போகலாம்!!
அருமை !
சஷ்டி கவசம் தெரிந்தும் இதுவரை நான் கவனிக்க தவறிவிட்டேன் – சிரசு தொடங்கி கவசமாய் காக்க காக்க என ஸ்ரீமத் தேவராய சுவாமிகள் வேண்டுவது “வேலை “!!