veena[1]

நான் கல்லூரி மாணவனாக இருந்த போது திரு. சுகிசிவம் அவர்களும் கோவையில் இருந்தார். புத்தாண்டையொட்டி சென்னைக்கு அவர் சென்றிருந்தார். நானும் உறவினர் வீட்டு விசேஷம் ஒன்றிற்காக சென்னையில் இருந்தேன்.
அப்பு முதலி தெருவில் இருந்த அவருடைய இல்லத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அவரின் மூத்த சகோதரர் திரு.எம்.எஸ்.பெருமாள் அவர்களும் இருந்தார்.எம். எஸ் பற்றி பேச்சு வந்தது.திரு.பெருமாள் சொன்னார்,எம்.எஸ். சின் தாய் வீணை வித்வான் அல்லவா!மடியிலேந்தி வாசித்து வாசித்து, அந்த நாதம் கருப்பையில் குடிகொண்டு எம்.எஸ். ஆக பிறந்தது” என்று.

நரம்புக் கருவியாகிய வீணை தெய்வீகத் தன்மை பொருந்திய கருவி. சிவாம்சம் கொண்டிருப்பதால் ருத்ரவீணை.கலைவாணி கைகளில்  சதா சர்வ காலமும் ஒலிக்கும் சங்கீத அற்புதம். வீணை வாசிக்கும் திருக்கோலத்தில் அம்பிகை ராஜ மாதங்கியாக வணங்கப்படுகிறாள். மதுரையில் இருக்கும் அம்பிகையை அபிராமி பட்டர் சென்று தரிசித்திருக்கிறார். இதை அந்தாதியில் பதிவு செய்கிறார்.கடம்ப வனமாகிய மதுரையில் வீணையும் கையுமாய் ராஜமாதங்கியாய் தோன்றிய அம்பிகையின் தரிசனத்தில் கண்கள் களித்தன என்கிறார்.

கண் களிக்கும் படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில்
பண் களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே

வேதகாலம் தொட்டு விணை பற்றிய வர்ணனைகளும் விளக்கங்களும் பலவகையாய் காணப்படுகின்றன.மனிதனின் முதுகுத்தண்டுடன் ஒப்பிடுவதில் தொடங்கி, இழுத்துக் கட்டிய நரம்புகளை கர்ம வினையுடன் கட்டுண்டிருக்கும் உயிரென உருவகித்தல் வரை விதம்விதமான பார்வைகள் உண்டு.

வாசிப்பவரை முழுமையாக ஆட்கொள்ளும் கருவி,வீணை. மற்ற வாத்தியங்கள் வாசிக்கும்போது, வித்வான் மீது முழு கவனமும் இருக்கும்.ஆனால் அளவிலும் அழகிலும் சபையை நிறைத்துக் கொண்டு எல்லோர் கவனத்தையும் வீணை ஈர்த்து விடும். காலையில் எழுந்ததும் முதலில் வீணையைப் பார்ப்பது அவ்வளவு விசேஷம் என்பார்கள்.

“சம்சாரம் என்பது வீணை! சந்தோஷம் என்பது ராகம்!” என்று பாடிய கவியரசர் கண்ணதாசனைப் பார்த்து அவருடைய தோழிகளில் ஒருவர்,”கலைமகள் கைகளில் இருக்கும் வீணை போன்றவர் நீங்கள், உங்களை கவனித்துக் கொள்ள யாருமே  இல்லையா?” என்று கேட்டாராம். அந்தத் தாக்கத்தில் எழுந்த பாடல்தான் வசந்த மாளிகை படத்தில் இடம் பெற்ற “கலைமகள் கைப்பொருளே! உன்னை கவனிக்க ஆளில்லையோ!” என்ற பாடல்.

இந்த வீணை உருவான விதம் பற்றி,கவித்துவம் கமழும் நிகழ்வொன்று அம்பிகை வழிபாட்டு மரபுகளில் பேசப்படுகிறது.

ஒருநாள் அம்பிகையின் சயன அறைக்குள் சிவபெருமான் நுழைகிறார்.
அம்பிகை ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறாள். அவளுடைய கரம் தனபாரங்களின் மேல் குறுக்காக மடித்து வைக்கப்பட்டிருக்க அம்பிகையின் சுவாசம் கைவளைகளில் பட, வளையசைந்து இசையெழும்புவதை இறைவன் பார்த்து ரசிக்கிறார். அந்தக் காட்சியின் விளைவாய்  பெருமான் வீணையை உருவாக்குகிறார்.
வீணையின் நாதத்திற்கு நிகரான ஆனந்தமல்லவா இந்த சிந்தனை !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *