vairamuthu-press-meet-8விமர்சனக் கோட்பாடுகள் என்பவை நேரடியாகச் சொன்னால் வாசிப்பின் கூரிய எதிர்வினைகள். தொடர் வாசிப்பிற்குப் பழகியவர்கள் தங்கள் வாசிப்பனுபவத்தின் விளைவாய் அத்தகைய கோட்பாடுகளை உருவாக்குகிறார்கள்.நான் கோட்பாடுகளை இரண்டாம் பட்சமாகக் கருதக் காரணமே அந்த அளவுகோல்கள் பெரும்பாலும் ஒரே சுருதியில் இயங்கும் விதமாக ஓர் எல்லையை உருவாக்கும் என்பதுதான்.

இமயமலை இத்தனை அடிகள் உயரம் என்று அளந்து சொல்லும் கருவி மலையென்றாலே இத்தனை அடிகள் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறது.அந்த அளவுகோலின்படி விந்தியம் ஒரு மலையல்ல. ஆல்ப்ஸ் ஒரு மலையல்ல. இதுதான் பெரும்பாலும் விமர்சனங்களில் நடக்கிறது.

பாற்கடலைக் கடைந்ததன் விளைவாய் அமுதம் வரும்.நஞ்சும் வரும்.சிந்தாமணி வரும்.திருமகளும் வருவாள்.அதுபோல் ஒரு நூலை வாசிக்கும் போது எழும் எதிர்வினை எத்தனையோ வகைகளில் இருக்கலாம்.
வாசிப்பின் போது வரும் எண்ணங்களை தொகுத்துச் சொல்வது என்பது வேறு. சில அளவுகோல்களை தூக்கிச் சுமந்து கொண்டு அவற்றுக்குள் ஒரு படைப்பு அகப்படுகிறதா, அடைபடுகிறதா என ஆராய்வது வேறு.

இப்போது நான் வாசிக்கும் ஒரு கதை அதன் முற்றுப்புள்ளியையும் தாண்டி என்னிடம் பேசும்போதும்,ஏற்கெனவே நான் வாசித்துள்ளவற்றின் ரசனைச் சுடரைத் தூண்டும் போதும் அதனை ஒரு நல்ல படைப்பாக உணர்கிறேன்.
ஜெயமோகனின் முதற்கனல் குறித்து நான் எழுதிய “வியாசமனம்” தொடரும், சக்திஜோதியின் கவிதைகளை முன்வைத்து நான் எழுதிய “பஞ்ச பூதங்களும் ஒரு பறவையும்” தொடரும் அப்படி உணர்ந்ததால் விளைந்தவையே. அதுபோலத்தான்   வைரமுத்து சிறுகதைகளில் பல கதைகளை உணர்கிறேன்.

கவிஞர் வைரமுத்து தன் மொழி நடைவழி பெரிதும் அறியப்பட்டவர். அதன் வழியே வரவேற்பும் விமர்சனமும் ஒருசேரப் பெற்றவர். இந்நடை சார்ந்து ஜெயமோகன் இப்படி சொல்கிறார்.

//  இரண்டு கூற்றமைதி. சிறுகதையின் மொழி ஓசையிடக்கூடாது. இயல்பான கூறுமுறை கொண்டிருக்கவேண்டும். ஏனென்றால் சிறுகதை தன்னளவில் நவீனத்துவ இலக்கிய அலையின் உருவாக்கம். மொழியடக்கம் என்பது அதன் இயல்பு. அது சுருக்கம் அல்ல. நேரடியான சுருக்கமென்பது கலைக்கு எதிரானது. தட்டையான குறைத்துக்கூறலும் அல்ல. அது செறிவான நேரடி மொழி//

வைரமுத்து சிறுகதைகளின் மொழியில் நீங்கள் இரண்டு தளங்களைக் காணலாம். ஒன்று கதாசிரியன் கூற்றாக வரும் இடங்களில் கனிந்திருக்கும் மொழி நிதானம். பாத்திரங்கள் உரையாடும் இடங்களில் அந்தப் பாத்திரத்தின் சூழலுக்கேற்ப குலுங்கியெழும் மொழிச் சரளமமிதில் இன்னோர் அம்சம், பாத்திரம் யாரோடும் பேசாமல் மௌனக் கூற்றாகப் பேசும் இடங்களிலும் பல கதைகளில் மொழி நிதானம் வெளிப்படுவதைக் காணலாம்.

சான்றாக ஒன்று. ” எல்லா மழையும் நின்றே தீரும்” என்றொரு கதை.கல்வி நிலையமொன்றில் நூலகர் வேலைக்கு வருகிறஒருவன் தன்னைப் பற்றி தன்னிடமே மானசீகமாகப் பேசுகிறான்.

” இருபத்திரண்டு வயது வரை அன்னாசிப்பழம் சாப்பிட வேண்டும் என்னும் ஆசை கூடநிறைவேறவில்லை. அவ்வளவு வறுமை.அசைவ ஓட்டலுக்குப் போய் பரோட்டாவுக்குச் சட்னி கேட்டுத் தொட்டுக் கொண்ட காலம் அது.பேண்ட்டுக்கு பெல்ட் போடவேண்டுமென்பது நிறைவேறாத ஆடம்பரம்.இந்த வேலைக்கு வரும்வரை அது சாத்தியமாயிருக்கவில்லை.”

இதே மனிதன் தான் (ஒருதலையாய்) விரும்பும் பெண்ணை நினைத்து மனதுக்குள் பேசிக்கொள்ளும் போது அலங்கார நடையை லேசாகக் கிண்டல் செய்வதைக் காண முடியும்.

” அவள் அப்படி ஒன்றும் சிற்பமுமில்லை.பார்க்க முடியாத அற்பமுமில்லை. பளீர்ச் சிரிப்பு;பன்னீர் வார்த்தைகள்;ஆள் விழுங்கும் கண்கள்;சுரிதார் போட்ட சூரியகாந்தி என்று என்னை ஒரு மோசமான கவிஞனாக்கியவள் அவள்தான்”
என்கிறான் நூலகர் பணியிலிருக்கும் ராஜேந்திரன்.

பலர்கூடும் சந்நிதியில்அவர்களின் பேச்சொலி சட்டென அடங்கும் விதமாய் ஒரு மாயத்தை, ஆராதனைத் தட்டின் கற்பூரத்தை ஏற்றும் கணம் தருவதைப் போல கதை நிகழும் காலத்தினுள் வாசகன் சரேலெனப் பிரவேசிக்கும் வாய்ப்பை மொழிநடையே ஏற்படுத்துகிறது.

ராஜராஜன் என்னும் கதையில் பெருவுடையார் சந்நிதியில் ராஜராஜன் நிற்பதை வர்ணிக்கும் இடம் இது.

“வங்கியங்களின் துளைவழியே நாதச்சாறு வழிந்தோட,ஆலயத் திருமணியின் நடு நா, உலகப் பொது மொழியில் இறைவன் திருநாமத்தைக்
காற்றிலே ஓங்கி உச்சரிக்க,தமிழ்பாடுவார் நால்வர் திருப்பதிய விண்ணப்பஞ் செய்ய,ஆரியம் பாடுவார் மூவர் எழுதாக் கிளவிகளை எடுத்தோதிக் கொண்டிருக்க,ராஜராஜனின் தேவியருள் இருவரான லோகமாதேவியும் வானவன் மாதேவியும் மன்னனின் இருபுறமும் நின்று திருவழிபாட்டில் திளைத்திருக்க,..”

என்று தொடரும் வர்ணனை நம்மைக் கொண்டு நிறுத்தும் இடத்திற்கு மொழி நடை வாகனமாய் வாய்த்திருக்கிறதே தவிர வழியடைத்து நிற்கவில்லை.

கதாசிரியன் கூற்றாக வருகிற இடங்களிலும் பாத்திரங்கள் நெஞ்சொடு கிளத்தும் இடங்களிலும் காசோலை போல் இருப்பை உணர்த்தும் மொழி, பாத்திரங்கள்  தமக்குள் உரையாடும் போது மட்டும் காசுகளாய் கலகலக்கின்றன. இந்த வேறுபாடு பற்றிய புரிதல் வைரமுத்து சிறுகதைகளின் மொழியமைதியைப் புரிந்து கொள்ள உதவும்.மாறாக இக்கதைகளில் “ஓசையிடும் மொழிநடை” இருக்கிறது என்றும் “கூற்றமைதி இல்லை” என்றும் ஜெயமோகன் சொல்வதை ஏற்க இயலாது.
(பேசுவோம்)

Comments

  1. “சில அளவுகோல்களை தூக்கிச் சுமந்து கொண்டு அவற்றுக்குள் ஒரு படைப்பு அகப்படுகிறதா, அடைபடுகிறதா என ஆராய்வது வேறு”. மெய்யானகூற்று!
    பல வேளைகளில் இவர் போன்ற நவீன பண்டிதர்கள் நாழியால் காற்றை அளக்கிறார்கள்! எடைகற்களால் தீயை எடைபோடுகிறார்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *