( அமெரிக்காவிலிருந்து இறக்குமதியான எழுத்துச் சரக்கு, லிமரிக். இந்த வடிவத்தில் தமிழில் எத்தனையோ ஆண்டுகளாய் லிமரிக் கவிதைகள் இயங்குகின்றன. முகநூலில் இயங்கும் லிமரிக் குழுவில் நானெழுதிய லிமரிக்குகள் சில)
மிதிவண்டி பழகிவிட்டா மிகவுமது சொகுசு
மிகுதியா வண்டிகளோ மார்க்கெட்டில் புதுசு
அதுபோல்தான் லிமரிக்கா
அதனூரா அமெரிக்கா
எதுவானா என்னங்க எழுதினா கைகூடும் தினுசு
கூடையிலே சரம்சரமாய் கோர்த்தமலர் கிடக்க
கூந்தலுமே காற்றினிலே கண்மறைத்துப் பறக்க
கோடையிலே நடப்பாள்
கூவிக்கூவி சலிப்பாள்
வாடைமலர் வாசம்தாண்டி வேர்வையெங்கும் மணக்க
ஊர்வியந்து பார்க்கும்படி ஒன்றுசெய்ய வேண்டும்
உளம்மகிழ்ந்து வாழ்த்தும்படி உதவிசெய்ய வேண்டும்
பேரிருந்தால் போதுமா
பேரமைதி சேருமா
பார்முழுதும் பயனுறவே பாரதிபோல் பாடிவிடு மீண்டும்
எழுதியதை அச்சினிலே எப்படியோ சேர்த்து
என்பேச்சை ஒலிபரப்ப எட்டுதிசை காத்து
அழுதகதை பாதி
ஆனந்தம் மீதி
பழுதுபார்த்த கொட்டகையில் பலவருஷக் கூத்து
என்னோடு நானிருக்க எப்பவரும் நேரம்?
எல்லோரும் பிய்த்துதின்ன யானோ பலகாரம்?
பொன்பொருள் வேட்டை
புலன்களின்சேட்டை
இன்னுமிதே அலைக்கழிப்பில் எவ்வளவு தூரம்
மயிலாப்பூர் வீதிகளில் மெரினாபோல் தலைகள்
மூணடிக்கு ஒருதடவை மூக்குமுட்ட படையல்
அயராமல் சேர்வர்
அறுபத்து மூவர்
கயிலாயம் விட்டுவந்து கலகலப்பா வீதியிலே உலவல்
பரபரப்பா கோவில்களில் பங்குனிநாள் உத்திரம்
பட்டுடுத்தும் பிள்ளைகளோ பரம்பொருளின் சித்திரம்
சரசரன்னு தேர்வலம்
சாமிகளின் ஊர்வலம்
வரம்கேட்டு கும்புடத்தான் வந்திருக்கோம் நகநட்டு பத்திரம்
பங்குனி சித்திரையில் பரபரன்னு வெய்யில்
பாதசாரி அனைவருக்கும் புதியகுடை கையில்
மங்குனி அமைச்சரு
முன்வந்த வவுச்சரு
தங்கக்குடை தரச்சொல்லி தடாலடியா கைவிட்டார் பையில்
வீணைக்கு உறைபோட்டா விமலா
விரல்போட்டு கெடுக்குறாளாம் கமலா
மாணிக்க வல்லி
வாணியின்பேர் சொல்லி
சாணமிட்டு விளக்கேத்தி சரிகம னு வாசிச்சா அமலா
உழைப்புக்கு உள்ளதொரு பெருமை
உள்ளபடி வார்த்தையொண்ணு மகிமை
பிறப்புக்கு வலியெடுத்தா
பெரியநர்ஸ் செல்லாத்தா
உரைப்பாங்க. “லேபர் பெய்ன் வந்துடுச்சு”..அருமை!!
கோடைவெயில் கொல்லுதுன்னு குளிர்ந்தமோர் குடிச்சு
கலந்ததண்ணி சரியில்லாம வயிறெல்லாம் வலிச்சு
ஓடிப்போனார் உள்ள
ஓனர்வெளியே வல்ல
சாடுறாங்க ஆடுறாங்க சத்தமின்றி லேபருங்க சிரிச்சு
வீட்டுக்கு வெளியிலொரு வேம்பு
வெய்யிலிலும் நின்றிருக்கும் வீம்பு
கூட்டிக் கழித்தாலும்
கோடை தகித்தாலும்
நீட்டமாய் வேர்பரப்பி நம்பிக்கை கொண்டிருக்கும் நோன்பு
தடைக்காக அழுதமனம் தாங்காம விக்கும்
தான்போகும் வழியென்ன தெரியாம நிக்கும்
எடைக்கான கல்லோ
எவர்சொன்ன சொல்லோ
வடைக்காக ஜொள்விட்ட வெள்ளெலிதான் பொறியில் சிக்கும்
களியேது வலியேது கனிவுவந்த பின்னே
காய்தானே எல்லாமும் கனிந்துவரும் முன்னே
உளிதீண்டா சிலையாய்
உல்லாசக் கலையாய்
புளிபோட்ட செம்போடு புதுமெருகில் மின்னட்டும் பொன்னே
அங்கதம் வேணும்னு அவர்சொன்னார் ரைட்டு
அப்படீன்னா என்னன்னு அறியாமஃபைட்டு
இங்கிதம் இல்லாம
இழிவாக சொல்லாம
தங்குதடை இல்லாது தமாஷ்பண்ண வாங்கப்பா நைட்டு
கொட்டும் மழையில குடிச்சாரு சீரெட்டு
குடைவிட்டு தலைநீட்டி கேட்டாரு கேரட்டு
கட்டுக்கு வெலசொல்லி
கைநிறைய தரசொல்லி
துட்டுதந்தார் ரோட்டினிலே துடியான ஊட்டியிலே வெங்கிட்டு
நொட்டைன்னும் சொட்டைன்னும் நசநசப்பு ரொம்ப
நல்லவேளை லிமெரிக்கு நல்கலைநீ கம்ப
“விட்”டெல்லாம் விட்டு
விக்கெட்ட தட்டு
நெட்டைக்கும் குட்டைக்கும் நடுவினில் யாரிங்கே எம்ப
தொடர்புடைய பதிவுகள்
————————————-
குறும்பாவில் சிலம்பு
http://marabinmaindanmuthiah.blogspot.in/2015/04/blog-post.html