ஒரு குழந்தையின் பார்வையில் ஒவ்வொரு தினமும் தாயிடம் தொடங்கி தாயிடமே முடிகிறது. மூன்று வயதிலேயே திருவருட் தொடர்பும் உமையம்மையின் திருமுலைப்பால் அருந்தும் பேறும் பெற்ற திருஞானசம்பந்தக் குழந்தைக்கு?
அம்மே அப்பா என்றழுதபோது அம்மையும் அப்பனுமாய் தோன்றி ஆட்கொண்டனர். திருவருள் பெற்ற புதிதில் பல பதிகளுக்கு தந்தையே தோள்களில் சுமந்தார். பிறகு இறைவன் சிவிகை அனுப்பினான். போதாக்குறைக்கு தந்தை முறை வைத்தழைக்க திருநாவுக்கரசராகிய அப்பரும் வந்து சேர்ந்தார்.
சம்பந்தக் குழந்தையுடன் அவருடைய தாயார் தலங்கள் தோறும் சென்றார் என்று தகவலில்லை. தந்தையும் சம்பந்தச் சரணாலயர் முதலாய அடியார்களும் செல்கின்றனர். பாடல்களை யாழிலிட்டுப் பாட திருநீலகண்ட யாழ்ப்பாணருடன் அவர்தம் துணைவியார் மதங்க சூளாமணியாரும் சென்றார் என்று தெரிகிறது. ஆனால் சம்பந்தரின் தாயார் உடன் சென்றதாய் குறீப்பில்லை.
ஒருவேளை அந்தணர் மரபிற்குரிய நியமங்கள் தடுத்தனவோ என்னவோ.சம்பந்தர் ஞானசம்பந்தம் பெற்றாலும் குழந்தைதானே!!எல்லாமே நமசிவாயம் என்றபிறகு தாயின் அணுக்கத்தை அந்தக் குழந்தை தேடியபோது தவித்திருக்குமோ?
அல்லது பயணங்களில் சளி இருமல் வந்தால் அம்மாவைத் தேடியிருக்குமோ? இது போன்ற கேள்விகளுக்கு நேரடியாய் புராணத்தில் பதிலில்லை. ஆனால் திருஞானசம்பந்தர் தேவாரத்தில் மறைமுகமாய் ஒரு குறிப்பு.”உறக்கத்திலும் விழிப்பிலும் நமசிவாய எனும் ஐந்தெழுத்தை நினையுங்கள் “என உபதேசிக்கிறார் பிள்ளையார்.
“துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்
நெஞ்சகம்நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சகம் அற்றடி வாழ்த்த வந்தகூற்று
அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே” என்று தொடங்குகிறார். ஐந்தெழுத்தின் பெருமைகளை பாடிக் கொண்டே வருபவர்,தும்மல் இருமல் போன்ற எளிய சிரமங்களிலிருந்து நரகம் போன்ற தீமைகள் வரை நம்மை இதம் செய்வது ஐந்தெழுத்து என்று பாடும்போது, சொல்லும் உவமை அவர் திருவுள்ளம் உணர்த்துகிறது.
தும்மல் இருமல் தொடர்ந்தபோழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போதினும்
இம்மைவினைஅடர்த்து எய்தும் போழ்தினும்
அம்மையினும் துணை அஞ்செழுத்துமே”
புனித யாத்திரைகளில் பனிக்காலங்களில் தும்மல் இருமல் வரும்போது தாயின் மடிதேடும் வயதில் அந்த ஏக்கம் கூடத் தோன்றாத வண்ணம் நமசிவாய மந்திரமே தனக்கு தாய்மடியாய் தாலாட்டாய் விளங்கியதை காழிப் பிள்ளையார் குறிப்பால் உணர்த்துகிறாரோ!!